PUBLISHED ON : செப் 23, 2012

பத்திரிகை உலகில், இளம் செய்தியாளர்களுக்கான பயிற்சியின் போது, 'மனிதனை, பாம்பு கடித்தால், அது செய்தியல்ல, மனிதன், பாம்பை கடித்து இறந்தால் அது தான் செய்தி!' என, வேடிக்கையாக குறிப்பிடுவதுண்டு. ஆனால், அதுவே நிஜமாகி, நேபாள நாட்டின் கிராமம் ஒன்றில், இந்த அதிசயம் நடந்துள்ளது.
நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டில் இருந்து, 200 கி.மீ., தொலைவில் உள்ளது பிர்ராத் நகர். அதன் அருகே, பிக்ரம் நிராவ்லா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முகமது சல்மோதின். இரவு நேரத்தில், தன் விவசாய நிலத்தை பார்வையிடச் சென்றார். அப்போது அவரை பாம்பொன்று கடித்தது. ஆனால், இருட்டில் பாம்பை அவர் பார்க்கவில்லை.
உடனடியாக வீட்டுக்குச் சென்ற அவர், டார்ச் லைட்டை எடுத்து, மீண்டும் நிலத்திற்கு திரும்பி, பாம்பை தேடினார். சம்பவம் நடந்த அதே இடத்திலேயே, ராஜநாகமொன்று படுத்திருந்தது. அதை சற்றும் தாமதிக்காமல் பிடித்து, அதன் உடலில் பல இடங்களில் நறுக் நறுக்கென்று கடித்தார். அவரது கடியை தாங்க முடியாமல் பாம்பு இறந்தது.
பாம்பை எடுத்துக் கொண்ட அவர், கிராம மக்களிடம் காண்பித்து நடந்தவற்றை விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், 'பாம்பு நம்மை தீண்டினால் பயப்படாமல், அந்த பாம்பை கடித்து கொன்றால், அதன் விஷம் நம்மை எதுவும் செய்யாது என, என்னிடம் ஒருவர் தெரிவித்தார். அதை அப்படியே நம்பிய நான், என்னை கடித்த ராஜநாகத்தை கடித்து கொன்றேன்...' என்றார்.
ஒருநாளுக்கும் மேலாக, பாம்பின் விஷம், இவரை ஒன்றும் செய்யவில்லை. வழக்கம்போல் தன் பணிகளை செய்து வருகிறார். இருப்பினும், அவரது வீட்டினரும், உறவினர்களும் வற்புறுத்தியதால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வியந்தனர். காரணம், அவரது ரத்தத்தில், ராஜநாகம் கடித்து அதன் விஷம் கலந்ததற்கான அறிகுறி தென்படவே இல்லை. மருத்துவமனையில் இருந்து மகிழ்ச்சியாக வீட்டுக்குத் திரும்பினார்.
அவரை கடித்த பாம்பு, நேபாளத்தில் பொதுவாக காணப்படும் ராஜநாக வகையைச் சேர்ந்தது என்றும், அது விஷத்தன்மை அற்றது என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இருப்பினும், இங்கு ஆண்டுதோறும் பாம்பு கடிக்கு, 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் ஆயிரம் பேர் பலியாகி வருகின்றனர் என, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
***
அ. சாந்தப்பன்
