தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நேர்வழி!

நேர்வழி!

நேர்வழி!


PUBLISHED ON : ஜன 28, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 28, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாசலில் தன் பழைய, டி.வி.எஸ்., 50ஐ நிறுத்தி வீட்டிற்குள் நுழைந்தார், ரங்கநாதன். களைத்துப் போயிருந்த அவர், முகத்தை கழுவி, துணியை மாற்றி, ஹாலில் வந்து அமர்ந்தார். பேன் காற்று அவருக்கு ஆசுவாசம் தர, தன்னையறியாமல் ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டார்.

மாவட்டக் கல்வித் துறையில் அதிகாரியாக பணியாற்றும் ரங்கநாதன், அடுத்த ஆண்டு ஓய்வு பெற இருக்கிறார்; சம்பளத்தை தவிர வேறு எந்த பணத்தையும் வாங்க மாட்டார். அவரிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால், விஷயத்தில் நியாயம் இருந்தால் மட்டுமே உதவுவார். அதற்கு எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார். அதேபோல தவறான காரணங்களுக்கு, யாராவது ஆதாயம் தேடி வந்தால், சம்மதிக்க மாட்டார். எவ்வளவு பண ஆசை காட்டினாலும், எப்படி மிரட்டினாலும் பணிய மாட்டார். 'இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனுஷனா...' என்று எல்லாரும் வியப்பாக பேசுவர்.

அவரது அலுவலகத்தில் பியூனுக்கு கூட சொந்த வீடும், காரும் இருக்கிறது. ஆனால், ரங்கநாதனோ இன்றும் வாடகை வீட்டில் தான் வசிக்கிறார்.

ஊரில் ரங்கநாதனுக்கு நல்ல பெயரும், மரியாதையும் இருந்தாலும், வீட்டில், மனைவியிடம் அவருக்கு மரியாதை என்பது கொஞ்சம் கூட கிடைப்பதில்லை.

அவர் மனம் புண்படும்படி தினமும் குத்திக்காட்டுவாள், மனைவி, கோமதி.

'எத்தனையோ பேர் என்னைக் கல்யாணம் செய்ய தவம் கெடந்தாங்க; அவங்க எல்லாம் இப்ப கோடீஸ்வரர்களாக பங்களா, கார்ன்னு இருக்காங்க... எங்கப்பா தான் பிடிவாதமா, அரசு ஊழியருக்கு தான் கட்டிக் கொடுப்பேன்னு உங்களுக்கு கட்டிக் கொடுத்துட்டார். இதற்கு, என்னை கிணற்றில் தள்ளி இருக்கலாம்...' என்பாள்.

முதலில் இதையெல்லாம் கேட்டு, கோபப்பட்டு, மனைவியை திட்டுவார், ரங்கநாதன். அது சண்டையாக மாறும். இது, பிள்ளைகளை பாதிப்பதை உணர்ந்ததும், அமைதியாகி விட்டார். ஆனால், கோமதியின் புலம்பல் தான் நிற்கவில்லை. தினமும் மாலை வேளைகளில் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு சென்று, அங்குள்ள ஆடம்பர பொருட்களையும், அவ்வீட்டுப் பெண்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளையும் பார்த்து ஏங்கி, அவர்களிடம் தன் புருஷனை பற்றி புலம்பி வருவாள்.

இரவு புருஷன் வீடு திரும்பியதும், பசிக்கிறதா, காபி வேண்டுமா என்று கூட கேட்க மாட்டாள். தான் பார்த்து வந்ததை பற்றி சத்தமாக பேசுவாள்.

அவர்களுடைய இருபிள்ளைகளும் சிறு வயதில், அம்மா புலம்புவதைப் பார்த்து, ரங்கநாதனிடம், 'அப்பா... நாம ஏழையா...' என்று கேட்பர்.

பிள்ளைகள் அப்படி கேட்கும் போது, அவருக்கு மனது வலிக்கும். அதை மறைத்து, 'செல்லங்களா... உலகத்துல ரெண்டு வழிகள்ல வாழலாம். ஒண்ணு, நேர்வழி; இன்னொன்னு குறுக்கு வழி. குறுக்கு வழியில் நிறைய பணம் சம்பாதிக்கலாம்; ஆனா, நிம்மதி இருக்காது. எவ்வளவு பணம் கிடைச்சாலும், இன்னும் வேணும்ங்கிற பேராசை தான் வளரும். மற்றவரை விட அதிகமாக பொருள் சேர்க்கும் போட்டியில், தன் சுயத்தை தொலைச்சுடுவான்.

'ஆனால், நேர்வழியில் அதிகமாக பணம் கிடைக்காது. நிம்மதி, நல்ல பெயர் இருக்கும். யாரையும் வஞ்சிக்க வேண்டியதில்லை; இருப்பதை வைத்து, சந்தோஷமாக வாழலாம். அதனால, நாம ஏழைகள் கிடையாது; குறிப்பிட்ட சிலரிடம் பணம் அதிகமாக குவிஞ்சுருப்பதால், நாம் ஏழைகளாக தெரிகிறோம். நீங்களும் பெரியவர்களானதும், நேர்வழியில் தான் செல்லணும்...' என்பார்.

அவர்களும், தன் அப்பா சொல்படியே வளர்ந்தனர். கவுன்சிலிங் மூலம், பொறியியல் கல்லுாரியில் சேர்ந்து, நான்காம் ஆண்டு படிக்கிறான், மகன். பிளஸ் ௨ படிக்கிறாள், மகள். இப்போதே அவளை பெண் கேட்டு வர ஆரம்பித்து விட்டனர். ஆனால், அவளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார், ரங்கநாதன். அவளுக்கும் படிப்பதில் தான் ஆர்வம் இருந்தது.

உறவினர்கள் யாராவது, மகளின் திருமணத்தைப் பற்றி கேட்டால் போதும், உடனே, ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடுவாள், கோமதி.

'வீட்டில அஞ்சு சவரன் கூட இல்ல; இந்த லட்சணத்தில அவளுக்கு எப்படி திருமணம் நடக்கும். இவரோட வேலை செய்ற அதிகாரிங்க எல்லாம் அவங்க பொண்ணுகளுக்கு நுாறு சவரன் போட்டு கட்டிக் கொடுத்தாங்க. இந்த மனுஷனால என்ன செய்ய முடியும்... என் பெண்ணுக்கு எப்படித் தான் கல்யாணம் நடக்குமோ...' என்று புலம்புவாள்.

'ஏம்மா... எப்பப் பாத்தாலும், தங்கச்சியோட கல்யாணத்த நெனச்சு பயப்படுறே... எல்லாம் நல்லபடி நடக்கும்; சும்மா அப்பாவ குத்தம் சொல்லாதே...' என்பான், மகன்.

காலையில், அலுவலகத்திற்குள் நுழைந்ததும், ரங்கநாதனை உயர் அதிகாரி அழைப்பதாக பியூன் வந்து சொல்ல, அவரது அறைக்கு சென்றார்.

''வாங்க ரங்கநாதன், உட்காருங்க,'' என்றதும், எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.

''உங்கள இத்தனை வருஷமா பாக்கிறேன்... அதே மாதிரி தான் இருக்கிறீங்க; சந்தோஷமாக இருக்கு. இந்த வயசுல உங்களப் போல நான் மாற முடியாது; ஆனா, நீங்க மனசு வெச்சா என்னைப் போல மாறலாம்...'' என்றதும், 'இவர் என்ன சொல்ல வர்றார்...' என நினைத்து, ''எனக்கு புரியல சார்...'' என்றார்.

''விஷயம் பெருசா எதுவும் இல்ல; உங்க மனைவி எங்க வீட்டம்மாவிடம் ஆதங்கப்பட்டிருக்காங்க...''

''எனக்கு எந்த ஆதங்கமும் இல்ல சார்...'' என்றார், ரங்கநாதன்.

''நீங்க கொஞ்சம் வளைஞ்சு கொடுங்க...''

''கொடுத்தால்...''

''வளர முடியும்.''

''எனக்கு அதில் சம்மதமில்ல.''

''வளைஞ்சு கொடுக்கலேன்னா, உடைஞ்சு தான் போவீங்க...''

''நான் வளையவும் மாட்டேன்; உடையவும் மாட்டேன். என் கடைசி மூச்சு வரை தலை நிமிர்ந்து வாழ்வேன்...''

''ஓகே... உங்க இஷ்டம்...''

உயரதிகாரியின் அறையிலிருந்து வெளியே வந்தார், ரங்கநாதன். அவருக்கே சோர்வாகவும், வெறுப்பாகவும் இருந்தது. 'நான், நல்லவனாக இருப்பதில் இவர்களுக்கு என்ன பிரச்னை... ஏன் எல்லாரும் என்னை பைத்தியக்காரன், முட்டாள், பிழைக்க தெரியாதவன் என்பது போல் பார்க்கின்றனர்...' என நினைத்தார்.

தன் மனைவி, மக்களை நினைத்துப் பார்த்தார்... 'எவ்வளவோ ஆசைகளுடன் என்னை மணமுடித்தாள், கோமதி. அவளை நாம் ஏமாற்றி விட்டோமோ... இந்தக் காலத்து பசங்க எப்படி எல்லாம் இருக்காங்க, ஆனா, மகனிடம் பைக் இல்லை; மகளிடம் அலைபேசி இல்லை. ஆனா, இதுவரை, அவங்க வாய் திறந்து என்னிடம் கேட்டது இல்ல. நான் நேர்வழியில் செல்வதால் அதற்கான விலையை என் குடும்பத்தினருக்கு தர நேர்கிறதா...' என்று ஏதேதோ எண்ணியவருக்கு, அன்றிரவு துாங்க முடியவில்லை.

மறுநாள், காலையிலேயே, கல்வித் துறை அமைச்சர், அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கியிருப்பதாகவும் அவரை சந்திக்குமாறு, அவருக்கு உத்தரவு வந்தது.

அதனால், நேராக, அரசு விருந்தினர் இல்லத்திற்கு சென்றார், ரங்கநாதன்.

நேற்று உயரதிகாரி சொன்ன விஷயம், குடும்ப நிலைமை, மனைவி, பிள்ளைகளின் முகம், அவர்களின் எதிர்காலம் கண் முன் வர, 'ஓய்வு பெற இன்னும் ஒரு வருஷம் தான் இருக்கு; இனி சம்பாதிக்கவும் வாய்ப்பு இல்ல; நல்லவன் பட்டம் மட்டும் போதுமா...' என நினைத்தவரின் மனம் கரைய ஆரம்பித்தது.

கல்வி அமைச்சர் அழைப்பதாக அவரது, பி.ஏ., கூறவும், எழுந்து, அமைச்சரின் அறைக்குள் சென்றார், ரங்கநாதன். அங்கே, அவரது உயரதிகாரியும் இருந்தார். அமைச்சரிடம் ரங்கநாதனைப் பற்றி

உயர்வாக சொல்லி அறிமுகப்படுத்தி, ''ரங்கநாதன் சார் மனசு வெச்சா, வேலை சுலபமாக முடிஞ்சுடும் சார்...'' என்றார் உயர் அதிகாரி.

அமைச்சருக்கு வணக்கம் சொல்லி, எதிர் இருக்கையில் அமர்ந்தார், ரங்கநாதன்.

அமைச்சரின் பி.ஏ., பேச்சை ஆரம்பித்தார்...

''இங்க பாருங்க ரங்கநாதன்... இந்த மாவட்டத்துல இருக்கிற அரசுப் பள்ளிகள்ல, 42 ஆசிரியர் பணி காலியா இருக்கு. அந்த பணிக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவங்கள்ல தகுதியானவர்கள தான் தேர்வு செய்யணும்ன்னு நீங்க சொல்றீங்க. ஆனா, வேறு, 42 பேரிடம் ஆளுக்கு, 5 லட்சம் ரூபாய் வாங்கி, வேலை கொடுப்பதாக நாங்க உறுதி அளிச்சுருக்கோம். இதற்கு நீங்க சம்மதிச்சு, ஒரே ஒரு கையெழுத்து மட்டும் போட்டா போதும்; இதுவரை, நீங்க உங்க வாழ்க்கையில் பாக்காத பெரிய தொகை உங்களுக்கு கிடைக்கும்,'' என்றார்.

ரங்கநாதனுக்கு தலை சுற்றியது; சிறிது நேரம் அப்படியே கண்களை மூடி, அமைதியாக உட்கார்ந்திருந்தார். 'வாழ்வில் அவருக்கு கிடைக்காத, பார்த்திராத கானல் நீராக இருந்த பெரிய தொகை, ஒரே ஒரு கையெழுத்தில் கிடைக்கும்; தன் குடும்ப நிலையும் மாறும். கடைசி காலத்தில் குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வெச்சுட்டான் என்ற அவப்பெயர் ஏற்படாது...' என்று எண்ணியவருக்கு திடீரென, அந்த, 42 பேரின் நினைவு வந்தது.

'வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஏழைகள், தகுதியானவர்கள்... தன் ஒரு குடும்பம் வாழ, 42 பேரின் குடும்பங்களை பலி கொடுக்க வேண்டுமா... மரணத்தை விட கொடியது மனசாட்சியின் மரணம். நான் என் மனசாட்சியை சாக விட மாட்டேன்...' என நினைத்து, ''மன்னிக்கணும் சார்... என்னால கையெழுத்துப் போட முடியாது,'' என்றார். இது, அமைச்சருக்கு அவமானமாகி விட்டது. அதுவரை அடக்கியிருந்த கோபத்தை கக்கினார்...

''யோவ், நாங்க சொல்றத நீ செய்யணும்; இல்லேன்னா என்ன நடக்கும்ன்னு தெரியுமா...''

''மக்கள் சொல்றத கேட்கத் தான் நீங்க இருக்கீங்க ... மக்களுக்கு எதிராக நடந்தா, அதற்கு நான் ஒத்துழைக்க மாட்டேன். உங்க மிரட்டலுக்கு பயந்து, தற்கொலை செஞ்சுக்கிற ஆள் நான் கிடையாது. என்னை போன்ற ஆட்கள் வாழணும்; மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கணும்,'' என்று சொல்லி, வேகமாக வெளியேறினார், ரங்கநாதன்.

''என்னைய்யா இப்படி பேசுறான்... தற்கொலை செஞ்சுக்க மாட்டானாமே... அப்ப, கொலை செஞ்சுடுங்க; 'லாரி மோதி விபத்து'ன்னு கதைய முடிச்சுட்டு, அவன் இடத்தில் நம்ம பேச்சை கேக்கிற ஆளை போடுங்க,'' என்றார், அமைச்சர்.

'அப்படியே செஞ்சுடலாம்ய்யா...' என்றனர், இருவரும்!

அங்கிருந்து வெளியேறிய, ரங்கநாதன் காதுகளில் பாரதியார் பாடிய,

தேடிச் சோறு நிதந்தின்று - பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிகு உழன்று - பிறர்

வாடப் பல செயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப் பருவ மெய்தி - கொடுங்

கூற்றுக் கீரை யெனப் பின்மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போல - நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ!

என்ற பாடல் எதிரொலிக்க, தலைநிமிர்ந்து கம்பீரமாக நடந்து சென்றார். ஏனென்றால், அவர் செல்வது, நேர் வழி!

நிஷாத்பானு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us