PUBLISHED ON : மே 14, 2023

குளிர்ந்த காற்று முகத்தில் பட, ஜெர்கின் அணிந்து மனைவி ஆர்த்தியுடன், கலிபோர்னியாவில், 'வாக்கிங்' போய் கொண்டிருந்தான், ரவி. அவனுக்கு ஈடு கொடுத்து வேகமாக நடந்தாள், ஆர்த்தி.
''காலை, 'ப்ளைட்'டுக்கு கிளம்பணும். 'பேக்கிங்' முடிச்சாச்சா, ஆர்த்தி?''
''எல்லாம் தயார். காலையில் கிளம்ப வேண்டியது தான்.''
''மனசுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா. கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசத்தில் கிளம்பியது. நாலு வருஷம் கழிச்சு, திரும்ப இப்பத்தான் அம்மாவைப் பார்க்கப் போறேன்,'' என்றான்.
''ஆமாம் ரவி, நானும் தான், என் குடும்பத்தை, 'மிஸ்' பண்றேன்,'' என்றாள்.
''ஊருக்குப் போய், அம்மாவோடு இரண்டு வாரம். சென்னையில், உன் குடும்பத்துடன் ஒரு வாரம். அப்புறம், யு.எஸ்., கிளம்ப வேண்டியது தான். அம்மா, எனக்காகவே வாழறாங்க. சூழ்நிலை, அவங்களோடு இருக்க முடியாமல் போயிடுச்சு.
''கிராமத்தில் அம்மாவைப் பார்த்துக்க ஆட்கள், துாரத்து உறவுகள் இருந்தாலும், என்னால் அவங்களோடு இருக்க முடியலை,'' உண்மையான வருத்தம் அவன் குரலில் தெரிந்தது.
''இந்த இரண்டு வாரமும், கிராமத்தில் உங்கம்மா கூடவே இருந்துட்டு வரலாம். அவங்க சமையல் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்ன்னு சொல்வீங்க. நமக்கு கல்யாணமாகி, அவங்க வெளியூர் போனதால, அந்த ஒரு மாதமும் விருந்து, அவங்க கையால சாப்பிடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கலை.
''உங்கம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்கன்னு சொல்வீங்களே... இரண்டு வாரமும், அவங்க சமையலை ருசிச்சு சாப்பிடப் போறேன்,'' என்றாள், ஆர்த்தி.
''ஆமாம், ஆர்த்தி... அவங்க செய்யற இட்லி, சாம்பார் அவ்வளவு நல்லா இருக்கும். கெட்டியான சாம்பாரை இட்லி மேல ஊத்தி, தேங்காய் சட்னியோடு சாப்பிடும்போது, அவ்வளவு ருசியா இருக்கும்.
''அதுவும் அவங்க போடற காபி அவ்வளவு, 'பர்பெக்ட்'டா இருக்கும். சரியான அளவில் டிகாக் ஷன், பால், சர்க்கரை சேர்த்து, சரியான சூட்டில் நுரை பொங்க தருவாங்க. 'நான் வெஜ்' அயிட்டங்களை, அம்மா கையால் சாப்பிடும்போது, வேற லெவல். அவங்க வைக்கிற தக்காளி ரசம், இன்னும் எனக்கு மறக்கலை,'' என்றான், ரவி.
''ஊருக்குப் போய், அம்மா கையால சாப்பிட்டு, இரண்டு பேரும், 'வெயிட்' போட்டுத்தான் திரும்பறோம். திரும்ப இங்க வந்து, 'வெயிட்' குறைக்க, 'எபர்ட்' எடுக்கறோம்,'' என்றாள், ஆர்த்தி.
மகனையும், மருமகளையும் பரவசம் பொங்க கட்டியணைத்து, கண்ணீர் விட்டாள், ஜெயம்.
''அம்மா, இந்த நாலு வருஷத்தில், ரொம்பவே தளர்ந்து போயிட்ட. வேலைக்கு, ஆட்கள் ஒழுங்கா வர்றாங்களா,'' கரிசனத்தோடு கேட்டான், ரவி.
''ஒண்ணும் பிரச்னையில்லப்பா, எல்லா வேலைக்கும் ஆள் இருக்கு. அது மட்டுமில்ல, அக்கம்பக்கம் உதவியும் அதிகம். எனக்கு தனியாக இருக்கிற உணர்வே இல்லை. நீ பக்கத்தில் இல்லைங்கிற சின்ன வருத்தம் தான்.
''என் பிள்ளை நல்லா வாழறான்ங்கிற நினைப்பு... அந்த வருத்தத்தை சரி பண்ணிடும். உங்களுக்காக, இட்லி, சாம்பார் செய்திருக்கேன். சாப்பிடலாம், குளிச்சுட்டு வாங்க,'' என்று புன்னகைத்த அம்மாவை, அன்போடு பார்த்தான்.
இருவரையும் உட்கார வைத்து பரிமாறினாள். ஒரு வாய் எடுத்து வைத்த ஆர்த்தி, சாம்பாரில் உப்பு அதிகம் தெரிய, முகம் சுளித்தாள்.
ரவியோ ரசித்து சாப்பிட்டான்.
''சாம்பார் எப்படிப்பா இருக்கு?'' கேட்டாள், ஜெயம்.
''உன் கையால் சமைத்தது. நல்லா இல்லாமல் போகுமா... அதே சுவை, வாசனையோடு நல்லாவே இருக்கு. இன்னும் கொஞ்சம் போடும்மா,'' என்றான், ரவி.
கேட்டு வாங்கி சாப்பிடும் கணவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.
இந்த சமையலையா இப்படி புகழ்ந்தான்.
அதே போல், காபியில், டிகாக் ஷன் கூடுதலாக தெரிய, கஷ்டப்பட்டு குடித்தாள், ஆர்த்தி. ஆனால், எதுவுமே சொல்லாமல் குடித்தான், ரவி.
இருந்த, 10 நாட்களும், மகன், மருமகளுக்கு விதம் விதமாக சமைத்துப் போட்டாள், ஜெயம். ரவி சொன்னது போல, அப்படி ஒன்றும் சமையல் பிரமாதமாக இல்லை. உப்பு, காரம், கூடுதல் குறைச்சலாக சுமாராகத்தான் இருந்தது.
ஒவ்வொரு முறையும், ''அம்மா, ரொம்ப நல்லாயிருக்கு,'' என்று ரவி சொல்லும்போது, ஆர்த்திக்கு சிரிப்பு வந்தது.
'இதுக்கு என் சமையல் எவ்வளவோ பரவாயில்லை...' என, நினைத்தாள், ஆர்த்தி.
''அம்மா, நாளைக்கு கிளம்பி, சென்னையில் ஆர்த்தி வீட்டில் நான்கு நாள் இருந்துட்டு, அப்படியே யு.எஸ்., போறோம். அடுத்த முறை வரும்போது, ஒரு மாதம் விடுமுறையில் வரேன். நீ உடம்பைப் பார்த்துக்கம்மா,'' என்றான், ரவி.
''போயிட்டு வா ரவி... நீயும், ஆர்த்தியும் வந்து என்னோடு, 10 நாள் இருந்ததே, மன நிறைவா இருக்கு. இந்த நினைவுகள், அடுத்த முறை நீங்க வரும் வரை என் நெஞ்சில் நிறைந்திருக்கும். என்னைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். இந்த அம்மாவின் ஆசி என்றைக்கும் உங்களுக்கு இருக்கு,'' வாஞ்சையுடன் மகன் தலை கோதிச் சொன்னாள்.
''ரவி, உனக்கு புளி சாதம் பிடிக்குமே, காரில் போகும்போது சாப்பிட, கட்டித் தரட்டுமா அல்லது வழியில் ஹோட்டலில் சாப்பிட்டுக்கறீங்களா?'' என்றாள்.
''என்னம்மா இது, நீ செய்து தரேன்னு சொல்லும்போது வேண்டாம்ன்னு சொல்வேனா... கட்டி குடுங்க... அதையே சாப்பிட்டுக்கிறோம்,'' என்றான்.
கண்ணீர் மல்க, மருமகளை ஆசிர்வதித்து, வழியனுப்பி வைத்தாள்.
சென்னையை நோக்கி விரைந்தது, கார்.
சாப்பிடும் நேரம் வர, காரை ஓரமாக நிறுத்தி, ''ஆர்த்தி, அம்மா கட்டிக் கொடுத்ததை சாப்பிட்டுட்டு போகலாமா,'' என்றான், ரவி.
புளி சாதமும், தேங்காய் துவையலும் இருந்த, 'ஹாட்பாக்சை' எடுத்து வைத்தாள், ஆர்த்தி.
ஒரு கவளம் எடுத்து வாயில் வைத்ததும், அளவுக்கு அதிக புளிப்பு தெரிய, ரவியைப் பார்த்தாள். வழக்கம் போல எதுவும் சொல்லாமல், ரசித்து சாப்பிட்டான்.
''ரவி, நான் உங்களை ஒண்ணு கேட்கட்டுமா?''
சாப்பிட்டபடியே என்ன என்பது போல், அவளை பார்த்தான்.
''நீங்க, உங்க அம்மாவை பாராட்டி பேசும்போது, நான் ரொம்பவே எதிர்பார்த்து வந்தேன். ஆனால், நீங்க சொன்னதுக்கும், அவங்க சமையலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே... அவங்க சமையல் சுமார் தான்.
''அதுவும் இந்த புளி சாதம், வாயில் வைக்க முடியல, அவ்வளவு புளிப்பாக இருக்கு. இதைப் போய் இவ்வளவு ரசிச்சு சாப்பிடறீங்க... ருசியே இல்லை ரவி,'' என்றாள்.
''சொன்னது உண்மை தான். எங்கம்மா சமையலை, நான் பாராட்டி சொன்னது மாதிரி, அவ்வளவு ருசியா நல்லாதான் இருக்கும். அதை ரசிச்சு சாப்பிட்டவன் தான்.
''ஆனால், அதே அம்மா தான் இப்ப வயது முதிர்வு, ஞாபக மறதி, எல்லாம் சேர்ந்து... எனக்காக செய்யணும்ன்னு பிரியப்படும்போது... பழைய மாதிரி அவங்களுடைய ருசி, அதில் அமையாமல் போகுது.
''இருந்தாலும், அதே அன்பு, பாசம் குறையாமல் தன் முதுமையை தள்ளி வச்சு, எனக்காக பார்த்து, பார்த்து அவங்க செய்த சமையலில், என்னால் குறை கண்டுபிடிக்க முடியலை, ஆர்த்தி. 'அவங்க நல்லா இருக்காப்பா'ன்னு பாசத்தோடு கேட்கும் போது, பழைய ருசி தான் எனக்கு தெரியும்.
''இதோ, இப்பவும் இந்த புளி சாதம், எனக்கு அமிர்தமாகத்தான் இருக்கு. என் அம்மா எனக்காக செய்தது, இது. உனக்கு வேண்டாம்ன்னா வச்சுடு. அடுத்து, ஹோட்டல் வரும்போது உனக்கு சாப்பாடு வாங்கித் தரேன் சாப்பிடு,'' என்றான்.
''பரவாயில்லைங்க... எனக்கும் இது நல்லாதான் இருக்கு. நானும் இதையே சாப்பிடறேன்,'' என்றாள்.
கலங்கி நிற்கும் அவன் கண்களில் அம்மாவின் பாசம் தெரிந்தது.
பரிமளா ராஜேந்திரன்
