தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதுவும் ஜோசியம் தான்!

இதுவும் ஜோசியம் தான்!

இதுவும் ஜோசியம் தான்!


PUBLISHED ON : செப் 15, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''முருகன்... உள்ள வாங்க,'' என்று அழைத்தார் ராஜன். அந்த அறை சாதாரணமாக இருந்தது. சுவற்றில் சாமி படத்துடன் கூடிய தினசரி காலண்டர். எதிர் சுவரில், வட்டமான, சுவர் கடிகாரம்; சோபா எதிரில் டீப்பாய். அதன் மீது, ஒரு பிளவர் வாஸ், கொஞ்சம் தூசு படிந்து காணப்பட்டது. பழமையான ஆனால், திடமான நாற்காலியில், ராஜன் அமர்ந்திருந்தார். அறுபது வயது; அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சாதாரண நூல் வேட்டியும், அரைக்கை சட்டையுமாய் காட்சியளித்தார்.

ஒரு ஜோசியருக்கான எந்த லட்சணங்களும் இல்லாத, அவரை பார்த்து, முருகனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

ஜோசியர் உள்ளே வேறெங்காவது இருப்பாரோ... இங்கு உட்கார்ந்திருப்பவர், ஜோசியரின் உதவியாள ராய் இருக்குமோ என்று ஒரு நொடி தயக்கம் ஏற்பட்டாலும், 'சாதாரணமாகத் தான் இருப்பார். விபூதி, குங்குமம் கூட கிடை யாது. அவர், இந்த ஜாதகம் பார்த்து சொல்றது, நாடி பார்த்து குறி சொல்றதுன்னெல்லாம் கிடையாது. பேஸ் ரீடிங், முகத்தைப் பார்த்தே பிரச்னை களையும், தீர்வையும் சொல்லுவார். அது சரியாகவும் இருக்கும். என் விஷயத்தில், அப்படி நடந்திருக்கு. நீயும் போய் பார்...' என்று, நண்பன் உறுதியாகச் சொன்னது நினைவு வர, 'இவர் அவராக இருக்குமோ' என்று நினைத்து, வணங்கினான்.

''உட்காருங்க தம்பி,'' என்று சோபாவை காண்பித்தார். அவன், நுனி சோபாவில் பவ்யமாய் அமர்ந்தான். சில நொடிகள், அவர் அவனை அமைதியாக பார்த்தார். அவன் அவஸ்தையாக நெளிவதைப் பார்த்து, கடகடவென சிரித்தார். அவன் திகைப்புடன் ஏறிட்டு, 'ஏன் சிரிக்கிறார்' என்பதைப் போல பார்த்தான். அவர் சிரிப்பை நிறுத்தி, ''ஆயிரம் வசதிகள் இருந்தும், நோ பீஸ் ஆப் மைண்ட். அப்படித்தானே,'' என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டார். அவனுக்கு சிலிர்த்தது.

''நல்லா படிச்சிருக்கே; பெரிய உத்தியோகம்; கை நிறைய சம்பளம். நல்ல மனைவி, அருமையான மகன், சொந்த வீடு, வாகனம், எல்லாம் இருந்தும், மனதில் ஏதோ இனம் புரியாத குறை. இப்போ இருக்கும் இந்த வாழ்க்கை, தொடர்ந்து நீடித்து, நிலைத்திருக்க வேண்டுமே என்ற தவிப்பு. குறை ஏதும் வந்துவிடக் கூடாதே என்ற பயம். சரியா...'' என்றதும், ஆச்சரியத்துடன் தலையசைத்தான்.

''ஊர் குளத்தில் விஷத்தை கலந்துவிட்டு, நிம்மதியாய் இருந்துவிட முடியுமா?'' என்று கேட்டவரை, பதறிப் போய் பார்த்தான்.

''சார்... சத்தியமா நான், அந்த மாதிரி ஆள் கிடையாது. அப்படி, ஒரு காரியத்தை செய்யவும் இல்லை,'' என்றவனை கையுயர்த்தி தடுத்து, ''நான் உன்னைச் சொல்லவில்லை தம்பி. உன் மூதாதையரில் ஒருவர் செய்த வினை. முன் பகை காரணமாக, நீரில் விஷத்தை கலந்து, பல உயிர்கள் பாதிக்கும்படி செய்திருக்கிறார். அதற்கான தண்டனையை, அவர் அனுபவித்து இருந்தாலும், அந்த பாவ காரியத்தின் அலை, வழி வழியாக இறங்கி, இப்போது உன்னை பீடித்திருக்கிறது. கவலைப்படாதே... அதிலிருந்து மீண்டு விடலாம். ஒரு பரிகாரம் செய்தால் போதும்,'' என்றார். 'என்ன பரிகாரம்' என்பது போல பார்த்தான் முருகன்.

''குளம் வெட்டு அல்லது ஒரு கிணறு வெட்டு. முடியாத பட்சத்தில், ஒரு ஆழ்துளைக் கிணறு... வறட்சியான ஊரில் போட்டு, அங்கிருக்கும் மக்களுக்கு நல்ல தண்ணி கொடு. பாவம் விலகி, மனதில் நிம்மதி வந்து சம்மணமிட்டு உட்காரும். புரியுதா போய் வா. என்னது தட்சணையா... அதை கிணறு வெட்டும் செலவுக்கு பயன்படுத்திக்க,'' என்று ஆசிர்வதித்தார்.

''கொஞ்சமும் எதிர்பார்க்காத அதிர்ச்சி; அவமானம். செத்துப் போகலாமான்னு நினைக்கத் தோணுது இல்லையா...'' முருகன் போன பின், அடுத்ததாக வந்த இளங்கோவைப் பார்த்து, அவர் சொன்னதும், அவன் கண்களில் கரகரவென கண்ணீர் சுரந்தது. கையெடுத்து கும்பிட்டான். ''நான் ஒரு தவறும் செய்யலை... சந்தர்ப்ப சூழ்நிலை, ஆபீஸ் பணத்தை, நான் தான் கையாடல் செய்தேன் என்ற பழி, என் மீது விழுந்திருச்சி. அத்தனை பேர் முன்னால் என்னை அசிங்கமா பேசி, 'உனக்கு பிள்ளைக்குட்டிகள் இருக்கிறதால, போலீசுக்கு சொல்லாம விடறேன். இனி உனக்கு, இங்கு வேலை இல்லை'ன்னு, கழுத்தைப் பிடிச்சு தள்ளிட்டாங்க. நான் சொல்ல வந்த எதையும் அவங்க கேட்கலை.''

''கண்ணைத் துடை. பச்ச மரத்தை வெட்டின பாவம் உன்னை வந்து சுத்துது... நீ வெட்டினேன்னு சொல்லலை. உன் தாத்தாவுக்கு தாத்தா ஒருத்தர், பசுமையான தோப்பில், பட்சிகள் நிறைந்த வனத்தில், தேவையில்லாமல் மரங்களை சாய்ச்சுட்டார். இப்போ நீ குடியிருக்கும் இடத்திலிருந்து, ஒரு கி.மீ., தொலைவுக்கு, தெரு ஓரமா, பனிரெண்டு செடிகளை நடணும். அது எந்த வகை மரமாயிருந்தாலும் சரி. வனத் துறையை அணுகினால், அவங்களே இலவசமா மரக் கன்றுகள் கொடுப்பதோடு, நேரில் வந்து செடிகளை நட்டுக் கொடுத்து, பாதுகாப்புக்கு, கம்பி வளையமும் போட்டுத் தருவாங்க.

''நீ செய்ய வேண்டியதெல்லாம், தினமும் தண்ணீர் விட்டு, அவைகளை பராமரிக்கிறது தான். செடிகள் உன்னளவு வளரும்போது, ஏதாவது ஒரு வளர்ந்த செடியில், கரிச்சான் கூடு கட்டும். அந்த தினம், நீ நிரபராதின்னு உணர்ந்து, உன்னைத் தேடி, முதலாளி வந்து மன்னிப்பும், வருத்தமும் தெரிவிச்ச கையோடு, உன்னை அழைச்சிட்டுப் போய், சீட்டில் உட்கார வைத்து கவுரவிப்பார்.

''சொல்ல முடியாது... செடி வச்ச சில நாட்களிலேயே, அப்படி நடந்தாலும் நடக்கலாம். தட்சணை வாங்கிறதில்லை. உன் பிரச்னை நல்லபடி தீர்ந்தால், அதுதான் எனக்கு தட்சணை. கண்ணைத் துடைச்சுக்க போய் வா.''

இளங்கோ மனம் லேசாகி, வெளியேற, அடுத்து உள்ளே வந்த வேல்மணி, ''பொண்ணுக்கு கல்யாண வயசு கடந்தும், வரன் அமையலை. எத்தனையோ கோவில்கள், எவ்வளவோ பரிகாரங்கள். ஒரு தெய்வமும் கண்ணைத் திறக்கலை,'' என்றான்.

''கடவுள் மேல் தவறில்லை. எல்லா தெய்வமும் நமக்கு உதவி செய்யத்தான் இருக்காங்க. நாம கேட்டாலும், கேட்காவிட்டாலும்... அவங்க நமக்கு, அருளத்தான் செய்யறாங்க. எதுக்கும் ஒரு கால நேரம் வரணும். மரம் ஓங்கி வளர்ந்திருந்தாலும், அது பழுக்க வேண்டிய காலத்துல தான் பழுக்குமே தவிர, நாம் நினைத்த நேரத்தில், பூத்து, காய்த்து கனி கொடுத்து விடாது. எலி கர்ப்பம் நாற்பது நாள்; யானை கர்ப்பம் இருபது மாதம். சில காரியம் உடனே நடக்கும்; சிலது தள்ளிப் போகும். உங்க ஊரிலிருந்து 8 கி.மீ., சுற்றளவுல இருக்கிற, ஏதாவதொரு பழைய பள்ளிக் கூடத்தை சரி செய்து கொடுங்க... முடியாத பட்சத்தில், நூறு கல்லாவது கொடையா கொடுங்க. ஏழு ஸ்கூலுக்கு செய்து வாங்க. நல்ல சேதி கிடைக்கும்,'' என்று, அனுப்பி வைத்து, எழுந்தார் ராஜன்.

அப்போது, அவர் வயதுடைய ஒருவர் உள்ளே தலை நீட்டி, ''அய்யா... இங்கே நான் ஒருத்தன் இருக்கேன். எனக்கும் உங்ககிட்ட சொல்ல, ஒரு மனக்குறையிருக்கு... வரலாமா,'' என்று கேட்க, ''தயவு செய்து வாங்க... நீங்க இருப்பதை நான் கவனிக்கலை. இப்படி உட்காருங்க,'' என்று உபசரித்து, ''இந்த வயசுல உங்களுக்கு, அப்படி என்ன பிரச்னை,'' என்று கேட்டு, வந்தவரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்ததும் தான், வந்திருப்பது நண்பர் மோகன்ராம் என்று, தெரிந்தது, ஆச்சரிய சந்தோஷத்தில், ''ஹே... ராம். என்னய்யா இது. சஸ்பென்ஸ் விசிட். என்னை போட்டு கலாய்ச்சுட்டியே... ரொம்ப சந்தோஷம் உன்னை பார்க்கறதுல. வா... உள்ளே போவோம்,'' என்று, கையை பிடித்து உள் அறைக்கு அழைத்துச் சென்றார்.

''மனைவி ஊரில் இல்லை. மகளை பார்க்க... மதுரை வரை போயிருக்காள். பையன் சிங்கப்பூரிலேயே குடும்பத்தோடு செட்டிலாயிட்டான். மனைவி வரும் வரை சுய சமையல். வா... வந்து என் துன்பத்தில் நீயும் பங்கெடுத்துக்க. புரியலையா... என் கைச்சமையல் அப்படி,'' என்று சிரித்தார் ராஜன்.

சாப்பிடும்போதே மோகன்ராம், தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். ''உன்னை ஒரு ஜோசியராக பார்ப்பேன்னு, கொஞ்சமும் எதிர்பார்க்கலை. ரிட்டையரான பின், நீயும், என்னைப் போல, வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்துட்டு, சாயங்காலமானால் கச்சேரி, காலட்சேபம்ன்னு போய்க்கிட்டிருப்பேன்னு நினைச்சேன். அதே சமயம், நீ, சமூக சேவையில் ஆர்வமுள்ளவன். என்பதால், ஏதாவது சமூக நலச் சங்கத்தில் சேர்ந்து, உத்ரகண்ட் வெள்ளச் சேதத்துக்கு நிதி திரட்டிக்கிட்டு இருப்பேன்னு எதிர்பார்த்தேன். ஆனால், நீ ஜோசியராக மாறி பரிகாரம் சொல்லிக்கிட்டிருக்கே. அதுவும் இலவசமா. எப்படி, இந்த ஐடியா வந்தது... எங்கே கத்துக்கிட்டே இந்தக் கலையை...''

'' கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ. விவரமா சொல்றேன்... இப்ப இல்ல அப்புறம்,'' என்றார்.

சாப்பிட்டதும், சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு, கை துடைத்தபடி, நண்பரின் அருகில் அமர்ந்து, ''நீ நினைக்கிறாப்ல நான் ஜோசியன் இல்லை. நான் சொல்றது ஜோசியமும் இல்லை,'' என்றார் ராஜன்.

''கண்ணால பார்த்தனே...''

''சொல்றன் கேளு... ஒரு வருஷத்துக்கு முன்னால, ஒரு சம்பவம். ஒரு வேலையா டவுனுக்குப் போயிருந்தேன். திரும்பும் போது, ஒரு ஆட்டோவுல வந்தேன். ஆட்டோ டிரைவர் ரொம்ப வேதனையோட தெரிஞ்சான். அவன் வேதனைக்கு என்ன காரணம்ன்னு தெரிஞ்சு, அவனுக்கு ஆறுதல் சொல்லணும் போலிருந்திச்சு. உள்ளே கூப்பிட்டு, குடிக்க தண்ணி கொடுத்து, 'ஏன் டிரைவர்... வீட்ல ஏதாவது பிரச்னையான்'னு கேட்டு, 'உன் முகத்தை பார்க்கும் போது, நீ, தப்பான ஆளாகவோ, புகை, குடி மாதிரியான தவறை செய்யறவராகவோ தெரியலை. கண்களும், முகமும் ஆரோக்கியமா இருக்கு. மன கஷ்டத்தால தான், முகம் வாட்டமா இருக்கு. நீ, குடும்பத்துக்காக இரவும் - பகலும், நேர்மையா உழைச்சுக் கொட்டியும், உன்னை புரிஞ்சுக்காம, வீட்டில் உதாசீனப்படுத்தறாங்க... சரியா'ன்னு யதேச்சையா கேட்டேன். கையெடுத்து கும்பிடு போட்டு, 'நேர்ல பார்த்தாப்ல, புட்டு புட்டு வைக்கிறீங்களே சார்' என்றான்.

'கவலைப்படாதே... யாரையும் நொந்துக்காதே. உன் அருமையை, வீட்டார் தெரிந்து கொள்ளும் நாள் வரும். அதுவரைக்கும், பாரத்தை இறக்கி வச்சுட்டு, வேலையை கவனின்னு...' பணத்தை கொடுத்து, அனுப்பி வச்சேன்.

''கொஞ்சம் நாள்ல, அவன், என்னை தேடி வந்தான். 'உங்க வாக்கு, அப்படியே பலிச்சிருச்சி சார். என் கஷ்டத்தை, வீட்ல புரிஞ்சிக்கிட்டாங்க. இப்பல்லாம், சம்சாரம் முதற்கொண்டு, எல்லாரும் மரியாதையா நடந்துக்குறாங்க சார். ரொம்ப நன்றி சார். உங்கள மறக்கவே மாட்டேன்னு...' சொல்லிட்டு போனான்.

''போனவன், பார்க்கிறவங்க கிட்டல்லாம் என்னைப் பத்தி சொல்லியிருப்பான் போல. ஒவ்வொருத்தரா தேடி வர ஆரம்பிச்சாங்க. தங்களுக்கும், நல்ல வார்த்தை சொல்லணும்ன்னு கேட்டாங்க. 'முடியாது; நான் ஜோசியனில்லை; எனக்கு ஒண்ணும் தெரியாது'ன்னு சொன்னால், நம்ப மறுத்தாங்க. நான் ஏதோ எல்லாம் தெரிஞ்ச ஆள் போலவும், அவர்களை தவிர்க்கறேன்னும் வருத்தப்பட்டாங்க. 'சரி சொல்றத சொல்லி வைப்போம். நாம விஷயமில்லாத ஆளுன்னு... ஒரு கட்டத்துல அவங்களே புரிஞ்சிகிட்டு ஒதுங்கிடுவாங்க'ன்னு, நானும், சொல்ல ஆரம்பிச்சேன்.

''முறையான ஜோசியம் தெரியாது. அது போல... இன்ன பிரச்னைக்கு, சாஸ்திரப்படி, இது தான் பரிகாரம். இது தான் பரிகார ஸ்தலம்ன்னு தெரியாது. தப்பித் தவறி, அப்படி ஏதும் சொல்லப் போய், சிக்கலாகி விடக் கூடாது. அதனால், கூடுமானவரை ஆன்மீக ரீதியான பரிகாரம் பக்கம் போவதில்லை.

''பிரச்னைகள் உள்ளவனும் தேடி வருவான். ஆசை உள்ளவனும் வருவான். மனுஷனுக்கு பொதுவா, கடன் தொல்லை, நம்பிக்கை துரோகம், வியாபார நஷ்டம், குடும்பத்தில் குழப்பம், வியாதி, எதிர்பார்ப்புகள் இது தான் பெரிய பிரச்னை. உத்யோகம், வீடு, கல்யாணம், குழந்தை பேறுன்னு சிறு பிரச்னைகள். இதுல ஏதாவது ஒண்ணை எடுத்துக் கொடுத்தாலே போதும். மீதியை, வந்தவனே சொல்லிடுவான். நாம ஆறுதல் சொல்லி, பரிகாரம் சொல்லுவோம்.

''பத்து பேருக்கு சொன்னால், தற்செயலா ஒருத்தருக்கு பலிக்கும். பலிக்காத ஒன்பது பேர், வெளியில சொல்ல மாட்டான். ஆனால், பலனடைந்த ஒருத்தன், பார்க்கிறவன் கிட்டெல்லாம் சொல்லிகிட்டு திரிவான். இன்னார்கிட்ட போனேன், செய்தேன், நல்லாயிட்டுது, நீங்களும் இவரைப் போய் பாருங்கன்னு சொல்வான். இத்தனைக்கும், அவர் காசெல்லாம் வாங்கறதில்லைன்னு சொல்லும் போது, ஓசி தானே பார்த்து வைப்போம்ன்னு வர்றாங்க...''

''ஆமாம்... நீ ஏன் கட்டணம் வாங்கறதில்லை?''

'' வாங்கறேன்; மறைமுகமா. வர்றவங்க கிட்டெல்லாம் மரத்தை நடு; பள்ளிக் கூடத்துக்கு உதவி பண்ணு, கிணறு வெட்டுன்னு கேட்கிறதெல்லாம் வேறென்னவாம்... மேற்சொன்னதெல்லாம், மக்களுக்கு, நான் செய்யணும்ன்னு நினைக்கிறது. எனக்கு அந்த சக்தியும், வசதியும் போதாது. அதை, இவங்க தலையில பரிகாரம்ங்கிற பேர்ல கட்டிடறேன். அதை நம்பி, அவங்களும் செய்றாங்க. அதனால், அவங்களுக்கும் நஷ்டமில்லை. கேட்டு வந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கலைனாலும், ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி கிடைச்சிடுது அவங்களுக்கு. இன்னொரு விஷயம் என்னன்னா... குளம் வெட்டுறது, மரம் வளர்க்கறது ஒரு நாள் சமாச்சாரமில்லை. மாதக்கணக்கில், வருஷக் கணக்கில் ஆகும். அதற்குள், அவர்கள் பிரச்னைக்கான தீர்வு கிடைச்சிடும். குறைந்த பட்சம் பிரச்னையின் தீவிரமாவது குறையும். அதுவும் நல்லது தானே.''

''ஒரு கல்லுல ரெண்டு மாங்காய்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்ப தான் அதப் பார்க்குறேன். உன் ஓய்வு காலத்தை பயனுள்ளதாகவும், அதே சமயம், வரும் நபர்கள் மூலம், உன் சமூகப்பணி ஆர்வத்தை நிறைவேத்திக்கவும் செய்யற பாரு... பாராட்டுகள்,'' என்றார் மோகன்ராம்.

''எல்லாம் குட்டு வெளிப்படும் வரை. அப்புறம் யார் வருவா?''

''அம்பலமானாலும், உன்னை யாரும் கோவிக்க மாட்டாங்கய்யா. ஏன்னா... நீ உனக்காக எதையும் செய்துக்கலையே. மேலும், நீ சொன்ன தீர்வுகள், மனோதத்துவ அடிப்படை யில, நல்ல விதமாகவே அமைஞ்சிருக்கு. உன்னையும் அறியாம, நீ சரியாத் தான் சொல்லி வந்திருக்கே. அப்படியே மெயிண்ட்டெய்ன் செய்திடு, நான் கிளம்பட்டுமா...''

''நல்லது. என் வேலைக்கு, உன் வாயால சர்டிபிகேட் கொடுத்தது போல் இருக்கு. இனி தயக்கமில்லாம, இந்த ஜோசியத்தை அடிச்சிவுடறேன். போறவரை போகட்டும்,'' என்று கை குலுக்கி வழியனுப்பினார் ராஜன்.

***

பி. நந்தகோபாலன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us