
நண்பன் ஆனந்தனுக்கு, மற்றவர்கள் துணை இல்லாமல் எதுவுமே நடக்காது. சிறு வயதிலிருந்தே அப்படி ஒரு பழக்கத்தை வளர்த்து கொண்டிருந்தான்.
பெரும்பாலான தருணங்களில், ஆனந்தன், என் துணையை தான் நாடுவான். ஏனெனில், ஒரு டீயும், இரண்டு சிகரெட்டும் எனக்கு வாங்கிக் கொடுத்தால் போதும். ஆனால், வேதகிரியும், கந்தவேலுவும், ஆனந்தனின் பாக்கெட்டை கரைப்பதிலேயே குறியாய் இருப்பர்.
திருவல்லிக்கேணி, இந்து ஹைஸ்கூலில், 6ம் வகுப்பில் சேர்ந்ததிலிருந்து, ஆனந்தன் என் சகா. வேதகிரி, 8ம் வகுப்பிலும், கந்தவேலு, 9ம் வகுப்பிலிருந்தும் கூட்டணியில் வந்து இணைந்து கொண்டனர்.
ஆனந்தன், தனக்கும், எங்களுக்குமான செலவுகளுக்கு, அவனது அப்பாவின் சட்டை பாக்கெட்டிலிருந்து தான், வாரம் இரண்டு முறை, 100 ரூபாயை லவட்டி வருவான்.
'நீங்கள்லாம் நுாறு தடவை, எஸ்.எஸ்.எல்.சி., எழுதினாலும் பாஸ் பண்ண மாட்டீங்க...' என்று, எங்கள் வகுப்பாசிரியர், கிருஷ்ணமூர்த்தி சார், எங்களுக்கு கொடுத்திருந்த ஆசிர்வாதம், அப்படியே பலித்தது. நாங்கள் நால்வரும் தோல்வியை தழுவினாலும், எங்கள் நட்பு நீடித்தது.
ஆனந்தனின் அப்பா, அருணாசலம் செட்டியார், ரயில்வே கான்ட்ராக்டர். தென்னக ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள, வி.எல்.ஆர்., கேன்டீன்களுக்கு மளிகை பொருட்களை வினியோகம் செய்பவர். அவரது கிடங்கு, சென்னை, கொத்தவால் சாவடியில் இருந்தது.
திருவல்லிக்கேணியில், செட்டியாருக்கு சொந்தமாக ஏழெட்டு வீடுகள் உண்டு. தோப்பு வெங்கடாசலம் செட்டி தெரு வீட்டில் வசித்து, மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். வாடகையும் நியாயமானதாக இருக்கும்; தவறாமல் அதற்கு ரசீதும் கொடுத்து விடுவார்.
திருவல்லிக்கேணி ஹைரோடும், பைகிராப்ட்ஸ் ரோடும் சந்திக்கும் இடமான, கேவூர் சவுக் மண்டியில் ஒரு வீடு இருந்தது. அரை கிரவுண்டு கட்டடம் அது.
தரை தளத்தை, அதே மண்டியில் இருந்த ஒரு மொத்த வியாபாரிக்கு, குடோனாக வாடகைக்கு விட்டிருந்தார். முதல் மாடியில், 1,100 சதுர அடிக்கு ஒரே ஒரு ஹால், அதன் ஒரு மூலையில் ஒரு மேடை. நுழைவாயிலை ஒட்டி பாத்ரூமும், அடி பம்பும் உண்டு. அது தவிர, மொட்டை மாடியும் இருந்தது.
வெறும் ஹாலாக மட்டுமே இருந்ததால், யாரும் அந்த வீட்டிற்கு வாடகைக்கு வர தயங்கினர். மாடியாக இருந்ததால், குடோனாக வாடகைக்கு விட முடியவில்லை.
ஹயாத் பாஷா என்ற, ஒரு இஸ்லாமியர் தான், அந்த போர்ஷனை வாடகைக்கு விடச்சொல்லி, செட்டியாரிடம் நச்சரித்துக் கொண்டிருந்தார். ஆனால், செட்டியாருக்கு உடன்பாடில்லை.
வேறு யாரும் வர தயங்கிய நிலையில், வேறு வழியின்றி, ஹயாத் பாஷாவுக்கு, வாடகைக்கு விட சம்மதித்தார். மாதம், 2,000 ரூபாய் வாடகை, 20 ஆயிரம் ரூபாய், 'அட்வான்ஸ்' என்று, இரு தரப்பும் பேசி ஒப்புக்கொண்டனர்.
கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்த காலை பொழுதில் தான், ஹயாத் பாஷா, 20 ஆயிரம் ரூபாய், 'அட்வான்ஸ்' தொகையை எடுத்து வந்து, செட்டியாரிடம் கொடுத்தார்.
பணத்தை வாங்கிய செட்டியார், 'அப்புறம், பையன்ட்ட ரசீது கொடுத்து அனுப்புறேன்...' என்று சொல்லி, மனைவியை அழைத்து, சாவியை கொடுக்க சொல்லி, கிளம்பினார்.
அத்துடன், ஹயாத் பாஷாவிடம் வாங்கிய, 20 ஆயிரம் ரூபாயை சுத்தமாக மறந்தே போனார்; ரசீது கொடுக்கவில்லை.
லட்சக்கணக்கில் லேவாதேவி பண்ணிக்கொண்டிருக்கும் வியாபாரிகளுக்கு, இதெல்லாம் சர்வ சாதாரணம்.
ஹயாத் பாஷாவுக்கு நல்ல காலமோ, அருணாசலம் செட்டியாருக்கு போதாத காலமோ...
கேவூர் சவுக் மண்டி கீழ் போர்ஷனில் குடியிருந்த, செட்டியாரே, அந்த மொத்த கட்டடத்தையும், ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்வதாக, அருணாசலம் செட்டியாரிடம் உடன்பாடு செய்து கொண்டிருந்தார். ஒரே ஒரு நிபந்தனை, மாடியில் குடியிருக்கும், ஹயாத் பாஷாவை காலி பண்ண வைக்க வேண்டும் என்பது தான்.
அந்த இடத்தை விற்பதென்று முடிவானதும், ஹயாத் பாஷாவிடம், 'அட்வான்ஸ்' 20 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுத்து, மூன்று மாதத்தில் காலி செய்ய வேண்டும் என்ற ஐடியாவில், வீட்டிலிருந்து கிளம்பினார். கூடவே, ஆனந்தனும், அவனுக்கு துணையாக நானும் சென்றேன்.
நாங்கள் வருவதை கவனித்து விட்ட, ஹயாத் பாஷா, இறங்கி வந்து, 'இன்னா செட்டியார், ரொம்ப தொலோ வந்திருக்குது... சொல்லிவுட்டிருந்தா, நானே வந்திருப்பேனே...' என்றார்.
வீட்டை விற்கப்போகும் விஷயத்தை சொல்லி, 'இந்தா பாய், நீ கொடுத்த, 20 ஆயிரம் ரூபாய். மூணு மாசத்துக்குள்ள வேற வீடு பார்த்துகினு, வீட்டை காலி பண்ணி கொடு...' என்றார், செட்டியார்.
பணத்தை வாங்காமல், செட்டியாரை முறைத்து பார்த்த, ஹயாத் பாஷா, 'இன்னா செட்டியார், தமாஷ் பண்ணுது...' என்றார்.
'இதுல தமாஷ் என்ன பாய் இருக்கு. வீட்டை விற்க ஒரு வாய்ப்பு வந்திருக்கு. உட்டுடலாமா, அதான்...' என்றார்.
'அது சரி செட்டியார். நீங்க வூட்டை வில்லுங்கோ, விக்காம போங்கோ. அது உங்க பிரச்னை. 2 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிகினு, வெறும், 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து, காலி பண்ணுன்னா, எப்படி செட்டியார்... 2 லட்சம் ரூபாய் குடுங்கோ, காலி பண்ணி, போயிட்டே இருக்கேன்...' என்றார், ஹயாத் பாஷா.
அதிர்ந்தார், செட்டியார்; நாங்களும் தான்.
'யோவ் பாய்... இன்னாய்யா, 20 ஆயிரம் ரூபாய் கொடுத்துட்டு, காலி பண்ண சொன்னா, 2 லட்சம் ரூபாய் கொடுத்தேங்கறியே. இன்னா பாய் நெனச்சிகினுக்கிறே...' என்றான், ஆனந்தன்.
'ஆனந்தா, கொஞ்சம் பொறு. பாய், 2 லட்சம், 'அட்வான்ஸ்' கொடுத்தேன்கறியே. நாங்க எந்த காசும் ரசீது இல்லாம வாங்க மாட்டோம், கொடுக்க மாட்டோம். கொடக்கூலி கொடுக்கிறதுக்கு, ரசீது கொடுக்குறோம்ல்ல, அதுமாதிரி, 'அட்வான்ஸ்' கொடுத்ததுக்கும், ரசீது இருக்குமே... அதை எடுத்து வந்து காட்டு பாய், பார்க்கலாம்...' என்றார், செட்டியார்.
'வாரே வாவ்... கொடக்கூலி வாங்குறதுக்கு, 'பில்'லுல கையெழுத்து போட்டு குடுக்கறீங்க, செட்டியார். அட்வான்ஸ், 2 லட்சம் வாங்கும்போது, அப்பால, 'பில்' தர்றதா சொன்னீங்க; ஆனா, தரலியே செட்டியார். நம்பள்கி மோசம் பண்ண போறாரான்னு கண்டுக்கல. அதுக்காக இப்படியா சொல்வீங்க, செட்டியார்...'
ஹயாத் பாஷாவிடம், 'அட்வான்ஸ்' வாங்கியபோது, ரசீது கொடுக்க மறந்தது, அப்போது தான் நினைவுக்கு வந்தது. அருணாசலம் செட்டியார், மார்பை பிடித்து, தரையில் சரிய, நானும், ஆனந்தனும் தாங்கிப் பிடித்தோம்.
'நெஞ்சு வலிக்குதுடா, ஆஸ்பத்திரிக்கு போலாம்...' என்றார்.
ஜட்கா வண்டியில், ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு விரைந்தோம்.
போகும் வழியெல்லாம், 'அவன் ஏன் இப்படி பொய் சொல்றான். சத்தியமா நான், 20 ஆயிரம் ரூபாய்தாண்டா வாங்குனேன்...' என்று, திரும்ப திரும்ப புலம்பியபடியே வந்தார்.
ஆஸ்பத்திரியிலிருந்து உயிரோடு திரும்பவில்லை, அருணாசலம் செட்டியார்.
ஹயாத் பாஷா கூறிய பொய், செட்டியாரின் இதயத்தை அந்த அளவுக்கு நொறுக்கி இருந்தது.
காரியமெல்லாம் முடிந்த பிறகு, ஒருநாள், ஆனந்தன், 'பொதுவா, அப்பா யாரையும் மச்சான், பாய், பாய்ன்னு தான் சொல்லுவார். ஹயாத் பாஷா சொன்ன பொய், அவரை எந்தளவுக்கு பாதிச்சிருந்தா, அந்த வார்த்தையை சொல்லி இருப்பாரு...
'இதை, நான் சும்மா விடப்போறதில்லை. அவனை கோர்ட்டுக்கு இழுத்து, ரெண்டுல ஒண்ணு பார்க்காம விடப்போவதில்லை...' என்றான்.
'அது சரி மச்சான்... உங்களாண்ட தான் ரசீது இல்லையே, அதுக்கென்ன செய்வே...' என்றேன்.
'ரசீது இல்லை தான், மச்சான். ஆனா, பேரேட்ல குறிச்சு வெச்சிருப்பாரு. அதை வெச்சு அவனுக்கு ஆட்டம் காட்டறேன்...' என்றான், ஆனந்தன்.
ஆனால், பேரேட்டில், 'வீட்டுக்கு வாடகை, 'அட்வான்ஸ்' வாங்கிய வகையில், வரவு, 20 ஆயிரம் ரூபாய்...' என்று, செட்டியார் தன் கைப்பட குறிப்பிட்டிருந்தார். எந்த தெருவில், எந்த வீட்டுக்கு என்று தெளிவாக குறிப்பிடவில்லை. அதனால், அந்த பேரேடின் சாட்சியமும் செல்லுபடி ஆகவில்லை.
பிரச்னை, கோர்ட்டுக்கு போனதால், மண்டி வீட்டை விற்கவும் முடியவில்லை; ஹயாத் பாஷாவை காலி செய்யவும் முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் தான், கந்தவேல், 'ஆனந்தா... நீ ஒண்ணியும் கவலைப்படாதே, அயோத்திகுப்பம் அண்ணன் வீரமணியாண்ட சொல்லி, நா அந்த பாயை துண்டைக் காணோம் துணியை காணோம்ன்னு ஓட வெக்கிறேன்...' என்று சொல்லி இருந்தான்.
அயோத்திக்குப்பம் வீரமணியை சந்தித்து, விஷயத்தை கூறியதும், முஸ்லிம் ஒருத்தர் பிரச்னை செய்கிறார் என்றதும், பின் வாங்கினான். இன்னொரு தாதாவான, 'மொய்லியார்' என்று சுருக்கமாக அழைக்கப்படும், குருபாத முதலியாரை பார்க்க சொல்லி, அனுப்பி வைத்தான்.
ஆனந்தன் விஷயத்தை சொன்னதும், வீரமணி கூறிய அதே காரணத்தை கூறி, அவரும் பின் வாங்கினார்.
'இன்னா மச்சான், பெரிய கைகளே கையை கழுவிட்டு ஜகா வாங்கி நழுவுது...' என்றேன்.
'ஆமாம் மச்சான். அதான் எனக்கும் ஒண்ணும் புரியலை. ஒரே கொழப்பமாகீது...' என்றான், ஆனந்தன்.
ஆனந்தனுடன் வீட்டுக்கு திரும்பினோம். எங்கள் இருவருக்கும் சாப்பாடு பரிமாறினார், ஆனந்தனின் அம்மா.
சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவர், 'ஆனந்தா... ஆடிட்டர், உன்னை, 'அர்ஜென்டா' பார்க்கணும்ன்னு சொன்னார்பா...' என்றார், அவனது அம்மா.
சைக்கிளை எடுத்து, இருவரும், ஆடிட்டர், சுந்தரராஜ ஐயங்கார் வீட்டுக்கு கிளம்பினோம்.
ஆடிட்டரின் வீடு -
'வாய்யா, ஆனந்து... என்ன சொல்றார் அந்த ஹயாத் பாஷா... காலி பண்ணி கொடுக்கிறானாமா, இல்லையா?'
'ஏன் சார் அந்த வயித்தெரிச்சலை கேக்குறீங்க. பெரிய கைகளே நைசா நழுவி ஒதுங்குது சார்...' என்று சொல்லி, அயோத்திகுப்பம் வீரமணியை பார்த்ததையும், குருபாத முதலியார் சொன்னதையும் சொன்னான்.
'நான் ஒரு யோசனை சொல்றேன். முயற்சி பண்ணி பாக்குறியா?'
'சரி...' என்றான்.
ஆனந்தனிடம் அந்த யோசனையை கூறினார், ஆடிட்டர்.
'முயற்சி பண்ணி பாக்குறேன் சார்...'
ஆதம் மார்க்கெட் பகுதியில், பாக்கெட் நாவல், ஜி.ஏ.,வின் அலுவலகத்துக்கு எதிரில் தான், ஹாஜி அப்துல் குர்துாஸ் பப்ளிகேஷன்ஸ் இருந்தது. இஸ்லாமிய நுால்களை உருது மற்றும் தமிழில் வெளியிடும் நிறுவனம் அது.
அங்கு சென்று, ஆடிட்டர் சுந்தரராஜ ஐயங்கார் சொன்ன புத்தகத்தை, 200 ரூபாய் கொடுத்து வாங்கி, வெள்ளிக்கிழமை அன்று கோர்ட்டுக்கு புறப்பட்டோம்.
கோர்ட்டில், ஆனந்தனும், நானும் ஒரு பெஞ்சில் அமர்ந்தோம். பக்கத்து வரிசை பெஞ்சில் ஹாயாக அமர்ந்திருந்தார், ஹயாத் பாஷா. எங்களுடைய வக்கீல் வாட்சை பார்ப்பதும், வாயிலை பார்ப்பதுமாக இருந்தார்.
ஜட்ஜ் வந்தார்.
டவாலி பெயரை வாசிக்க, கூண்டில் ஏறி நின்றார், பாஷா.
ஜட்ஜின் அருகில் சென்று, தாங்கள் நடத்தப்போகும் நாடகத்திற்கு அனுமதி கேட்டார், ஆனந்தனின் வக்கீல்.
'பர்மிஷன் கிராண்டட். யெஸ் புரொசீட்...'
ஆனந்தனின் வக்கீல், ஹயாத் பாஷாவின் முன் நின்று, 'உங்க பெயர்...' என்றார்.
'ஹயாத் பாஷா, சாப். ஹயாத் பாஷா...'
'இறந்து போன, அருணாசலம் செட்டியார்ட்ட, நீங்க இப்ப குடியிருக்கிற வீட்டுக்கு எவ்வளவு ரூபாய், 'அட்வான்ஸ்' கொடுத்தீங்க?'
'ரெண்டு லட்சம். சாப்...'
'அவுங்க சார்புல, 20 ஆயிரம் ரூபாய்தான்னு சொல்றாங்களே...'
'அவுங்க பொய் சொல்றாங்க, சாப்...'
'அவுங்க பொய் சொல்றாங்க. ஆனா, நீங்க தான் உண்மையை சொல்றீங்க இல்லையா?'
'ஆமாம், சாப்...'
'சத்தியம் பண்ணுவீங்களா?'
'எனக்கென்ன, சாப் பயம்... எது மேல வேணா சத்தியம் பண்ணுவேன். நான், 2 லட்சம் ரூபாய், 'அட்வான்ஸ்' கொடுத்தது சத்தியம், சத்தியம்...'
'ஓ.கே., அந்த சத்தியத்தை இப்ப இந்த புத்தகத்து மேல கையை வெச்சு பண்றீங்களா... அப்படி பண்ணிட்டீங்கன்னா, அவுங்க, 2 லட்சத்தை கொடுக்க தயாரா இருக்காங்க... சத்தியம் பண்ணுங்க பாய்...' என்றார்.
ஆனந்தனின் வக்கீல் கையில், முஸ்லிம்களின் புனித நுாலான, குர்ரான் இருந்தது; அதிர்ந்தார், ஹயாத் பாஷா.
சத்தியம் செய்ய நீண்ட கை, தானாகவே பின்வாங்கியது.
'யா அல்லா... மாப் கீஜியே சாப். மாப் கீஜியே. நம்பள், செட்டியாரண்ட, வூட்டுக்கு, 20 ஆயிரம் ரூபாய் தான், 'அட்வான்ஸ்' குடுத்தது. 2 லட்சம் இல்லே...' என்று, நீதிபதியிடம் சொல்லி, கூண்டிலிருந்து இறங்கி, கோர்ட்டை விட்டே ஓடினார், ஹயாத் பாஷா.
அவரை, யாரும் தடுக்கவும் இல்லை; தடுக்க முன் வரவுமில்லை.
ஹயாத் பாஷாவின் வாக்குமூலத்தை கேட்ட நீதிபதி, தீர்ப்பை எழுதத் துவங்கினார்.
ஆடிட்டரின் வீடு -
ஒரு கிலோ ஸ்வீட்டோடு உள்ளே நுழைந்த, ஆனந்தன், அதை ஆடிட்டரிடம் கொடுத்து, 'ரொம்ப தேங்க்ஸ் சார்... நீங்க போட்டுக் கொடுத்த பிளான், நல்லா, 'ஒர்க் - அவுட்' ஆயிடுச்சு... ஹயாத் பாஷா, அவர் வாயாலேயே, 'நான், 2 லட்சம், 'அட்வான்ஸ்' கொடுக்கலை; 20 ஆயிரம் தான் கொடுத்தேன்'னு, கோர்ட்லயே ஒப்புக்கொண்டார், சார்...'
'அப்புறம்...'
'அப்புறம் தான் சார், கிளைமாக்சே... 20 ஆயிரம் ரூபாயை எடுத்துகிட்டு அவரோட கொடுத்துடலாம்ன்னு வீட்டுக்கு போனோம், சார்... வீடு, பூட்டி இருந்துச்சு.
'கீழ் போர்ஷன்ல இருந்த குடோவுன்காரங்க, சாவியை கொண்டாந்து கொடுத்து, 'நீங்க வந்தா, சாவியை கொடுத்துட சொல்லி, மேல குடியிருந்த சாயபு குடுத்துட்டு போனாரு'ன்னு சொன்னாங்க...'
'அடப்பாவமே... மூணு வருஷமா உங்களை, 'டார்ச்சர்' பண்ணினதுக்கு, 'பனிஷ்மென்'டா, கொடுத்த, 'அட்வான்சை' கூட வாங்காம போயிட்டாரா...' என்று சொல்லி சிரித்தார், ஆடிட்டர்.
பிறகு, அவருக்கு எதிரில் அமர்ந்திருந்தவரை சுட்டிக்காட்டி, 'இவர், அசோக் பாட்டீல், ஈ.சி.ஆர்.,ல, எம்.என்.சி., கம்பெனி நடத்திட்டிருக்கார்.
'சிட்டிக்குள்ள ஒரு பிராஞ்ச் ஆரம்பிக்கணுமாம். உங்க மண்டி கட்டடத்தை, 2 கோடி ரூபாய் கொடுத்து வாங்க தயாரா இருக்காரு. பேசி முடிச்சுக்க...' என்று சொல்லி, அறிமுகப்படுத்தினார், ஆடிட்டர்.
அசோக் பாட்டீலை நோக்கி, 'ஹலோ சார்...' என்று சொல்லி கையை நீட்டினான், ஆனந்தன்.
எஸ்ஸாரெஸ்