PUBLISHED ON : நவ 16, 2014

குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபரான ராகுல் தக்கார், சொகுசு கார்களின் மீது ஆர்வம் உள்ளவர். எந்த புதிய கார் அறிமுகமானாலும், உடனடியாக அதை வாங்கி விடுவார். சமீபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான, வெள்ளை நிற ஜாகுவார் காரை வாங்கினார்.
சில நாட்களிலேயே காரின் இன்ஜின், பம்பர், ஹெட்லைட் ஆகியவற்றில் கோளாறு ஏற்பட்டது. டீலரிடம் சர்வீஸ் செய்ய கொடுத்தார். ஆனால், அவர்கள் முழுமையாக சரிசெய்யவோ, முறையான விளக்கமோ கொடுக்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த ராகுல், எட்டு கழுதைகளை வாடகைக்கு பிடித்து, அவற்றை ஒன்றாக பிணைத்து, காரில் கட்டி இழுத்து வந்தார். காரின் மீது, வைக்கோல் கட்டுகளை வைத்து, காரை விற்ற டீலரின் ஷோரூம் முன்பாக, அப்படியும், இப்படியுமாக ஓட்டி வந்தார். இது குறித்து ராகுலை விசாரித்த போது, 'பல லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய காரை, முறையாக சர்வீஸ் செய்ய மறுக்கின்றனர்; அவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காகவே இப்படிச் செய்தேன்...' என்றார். ஆனால், சம்பந்தபட்ட டீலரோ, இதுகுறித்து மூச்சு விடவில்லை.
— ஜோல்னாபையன்.
