தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஏப் 11, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 11, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நண்பரின், 'நச்' ஐடியா!

எங்கள் பகுதியில், ஹோட்டல் வைத்திருக்கும் நண்பரை பார்க்க சென்றிருந்தேன். கல்லாவில் உட்கார்ந்திருக்க வேண்டியவர், டீ மாஸ்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

காரணம் கேட்டதற்கு, 'டீ மாஸ்டர் வேலையில யாரும் தொடர்ந்து இருக்க மாட்டேங்குறாங்க... கொஞ்ச நாள் வேலை செய்து, அப்புறம் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போயிடுறாங்க... நல்ல ஆளா தேடிட்டு இருக்கேன்...' என்றார்.

அப்போது, அங்கே வந்த இளைஞர் ஒருவர், டீ மாஸ்டர் வேலைக்கு வந்திருப்பதாக கூறினார்.

அவரை பற்றி விசாரித்து, 'என் கடையில் வேலைக்கு சேர, ஒரே ஒரு நிபந்தனை. வேலைக்கு வரும்போது, மொபைல் போன் எடுத்து வராமல் இருந்தால், ஒரு நாளைக்கு, 750 ரூபாய் சம்பளம். சாதாரண பட்டன் போன் வைத்திருந்தால், 600 ரூபாய். ஸ்மார்ட்போன் வைத்திருந்தால், 400 ரூபாய் தான் சம்பளம். இதற்கு நீ ஒத்துக்கொண்டால், இங்கு வேலை செய்யலாம். சம்மதமா...' என்றார், நண்பர்.

'இது என்ன, வித்தியாசமான நிபந்தனையா இருக்கு...' என்றேன்.

'வேலை செய்யும்போது, மொபைல் போனை நோண்டிக் கொண்டிருந்தால், கவனம் சிதற வாய்ப்புண்டு. வாடிக்கையாளர்களுக்கு சரியான சேவை கிடைக்காது. டீயில் சர்க்கரை போட வேண்டாம் என்று, வாடிக்கையாளர் கேட்டால், மொபைல் போனை பார்த்தபடியே சர்க்கரையை அதிகமாக போடும் வாய்ப்பு உண்டு. இம்மாதிரியான தவறுகளை செய்யாமல் இருக்கவே இந்த ஏற்பாடு...' என்று, விளக்கம் தந்தார், நண்பர்.

'என்னிடம், ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஆனால், நான் வேலைக்கு வரும்போது, அதை எடுத்து வரமாட்டேன். என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவசரத்திற்கு என்னை தொடர்பு கொள்ள, உங்கள் நம்பரை கொடுத்து விடுகிறேன், முதலாளி. என்னை நம்பி நீங்கள், இந்த வேலையை தரலாம்...' என்று உறுதிமொழி கொடுத்தான், அந்த இளைஞன்.

வேலையை விட, போன் முக்கியம் இல்லை என்பதை உணர்ந்து, பொறுப்பாக இருந்த அவனை, உடனடியாக வேலைக்கு சேர்த்துக் கொண்டார், நண்பர்.

நண்பரின் வித்தியாசமான இந்த முயற்சியை, மற்றவர்களும் பின்பற்றலாமே!

- வே. விநாயகமூர்த்தி, சென்னை.

நோய் தீர்க்கும் இசை!

நண்பனின் வயதான அம்மா, உடல்நலக் குறைவால், படுத்த படுக்கையாக இருப்பதை கேட்டு, பார்க்க சென்றிருந்தேன்.

அங்கு, நண்பரின் அம்மா அருகில், வானொலி பெட்டியில், மெல்லியதாக, பாடல் ஒலித்துக் கொண்டிருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டேன்.

'நோயாளிகள் அமைதியைதானே விரும்புவர். பாடல்கள் அவர்களுக்கு இடையூறாக இருக்காதா...' என்றேன்.

'வயதானவர்கள், தனிமையில் தன் உடல் வலி மற்றும் தேவையில்லாத பழைய கசப்பான நிகழ்வுகளை நினைத்து வருந்துவர். அதை திசை திருப்பவே, அம்மாவுக்கு பிடித்த, பழைய திரைப்பட பாடல்களை இசைக்க வைத்துள்ளேன்.

'மேலும், வயதானவர்கள், குழந்தைகளுக்கு ஒப்பானவர்கள். குழந்தைகளை துாங்க வைக்க, தாலாட்டு பாடுவது போல, இந்த பாடல்களை கேட்டுக் கொண்டே, வலியை மறந்து துாங்குவதால், பல நன்மைகள் உண்டாகிறது...' என்றான், நண்பன்.

வீட்டில் வயதானவர்கள் இருப்பின், நாமும், நண்பன் வழியில் அவர்களுக்கு நன்மை செய்யலாமே!

- வ. முத்துவேலன், சென்னை.

இப்படியும் ஒரு தலைமைஆசிரியர்!

அரசு பள்ளி ஆசிரியையாக இருக்கும், என் தோழியை பார்க்க, அவள் பணிபுரியும் பள்ளிக்கு சென்றிருந்தேன்.

தனியார் பள்ளியா என, வியக்கும் அளவிற்கு, அப்பள்ளியின் தோற்றம் என்னை பிரமிக்க வைத்தது.

சுற்றுச் சுவரில் துவங்கி, 'ஸ்மார்ட்' வகுப்பறை வரை, இயற்கை காட்சிகளும், விழிப்புணர்வு ஓவியங்களும் கண்ணை கவரும் வகையில் வரையப்பட்டிருந்தன.

பூக்கள், பழ செடிகள், மூலிகைகள், கீரை வகைகள் நிறைந்த தோட்டம் மற்றும் பள்ளி வளாகமெங்கும் வேம்பு, அரசன், கொன்றை, புங்கன் மரங்கள் என, அனைத்தும் அசத்தலாக இருந்தது.

இவற்றையெல்லாம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், தம் சொந்த செலவில் செய்திருப்பதாக, தோழி கூறினாள்.

'அவரை, நேரில் பார்த்து, பாராட்ட வேண்டும்...' என்றேன்.

உடனே, 'அதுமட்டுமல்ல, மாதத்தின் முதல் வாரத்தில், மாணவர்களுக்கு மரக் கன்றுகளை வழங்கி, மரம் வளர்க்க ஊக்குவித்தல்; இரண்டாவது வாரத்தில், மருத்துவ முகாம் நடத்தி, மாணவர்களின் உடல் நலனை பராமரித்தல்; மூன்றாவது வாரத்தில், மாணவர்களின் தனி திறன், கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகள்...'நான்காவது வாரத்தில், நீதி போதனை கதைகள், நுாலக வாசிப்பு மற்றும் கைத்தொழில் பயிற்சிகள் என, நடத்துவார்...' என்றாள்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய இத்தகைய ஆசிரியர்களால் தான், அரசு பள்ளிகள் இன்றும் நிலைத்திருக்கின்றன என்ற மகிழ்வுடன், தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்து, மனதார பாராட்டி வந்தேன்.

நர்மதா விஜயன், உளுந்துார்பேட்டை விழுப்புரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us