PUBLISHED ON : ஜூலை 18, 2021

இப்படியும் ஒரு மோசடி!
நண்பர் ஒருவர், சுயதொழில் செய்து, வசதியாக வாழ்ந்து வருகிறார். பொழுதுபோக்குக்காக, முகநுால் கணக்கு ஒன்றை துவக்கியவர், அவ்வப்போது விதவிதமான, 'கெட் - அப்'களில், அவரது படங்களை பதிவேற்றுவார்.
இதைப் பார்த்து, அவரை அணுகிய குறும்பட குழு ஒன்று, அவர்களின் புதிய குறும் படத்தில் நடிக்க கேட்டிருக்கிறது. அவருக்கும் விருப்பம் இருக்கவே, சம்மதித்து, நடித்திருக்கிறார்.
முதல் நாள் படப்பிடிப்பில், அப்படத்தின் கதாநாயகியோடு, நண்பர், படுக்கையறையில் இருப்பது போன்ற காட்சியை எடுத்திருக்கின்றனர். அக்காட்சியை எடுத்து முடித்த பின் தான், அக்குறும்பட குழுவினரின் மோசடி நாடகம் அரங்கேறியிருக்கிறது.
'இது, குறும்பட காட்சி என்று, எங்களுக்கும், உங்களுக்கும் மட்டும் தான் தெரியும். உங்கள் குடும்பத்தினருக்கோ, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கோ இந்த உண்மை தெரியாது. இதை இணையத்தில் வெளியிட்டு அவமானப்படுத்தாமல் இருக்க, சில லட்சங்கள் தர வேண்டும்...' என, நண்பரை, 'பிளாக்மெயில்' செய்திருக்கின்றனர்.
நண்பர், உஷார் பேர்வழி என்பதால், அவர்களை பற்றி போலீசில் புகார் அளித்து, கைது செய்ய வைத்ததோடு, மோசடியாக படம் பிடித்த காட்சிகளையும், அழிக்க செய்திருக்கிறார்.
இப்படியும் சில மோசடி நபர்கள் உலவுகின்றனர். எச்சரிக்கையாக இருங்கள், நண்பர்களே!
— சி.அருள்மொழி, கோவை.
உழைப்பே மூலதனம்!
நண்பன் வேலை செய்து கொண்டிருந்த தொழிற்சாலையில், ஆட்குறைப்பு செய்து விட்டனர். அவனுக்கு, வேறு இடத்தில் வேலை தேடும் அளவுக்கு படிப்பும் இல்லை; நடுத்தர வர்க்கம்.
சில நாட்கள், கையிருப்பு மற்றும் நகை, கை கொடுத்தது. அதன்பின், என்ன செய்வதென்று தெரியவில்லை.
வாடகை, மளிகை, பிள்ளைகளின் படிப்பு என, அனைத்தையும் நினைத்து பயந்து, கணவனும் - மனைவியும் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்பட்டனர்.
இறுதி முயற்சியாக, கணவனும் - மனைவியும் சேர்ந்து, எங்கு எல்லாம், 'கொரோனா'வால் பாதிக்கப்பட்ட வீடு என்ற அறிவிப்பு பலகை உள்ளதோ அங்கு சென்று, சகல தடுப்பு முறைகளை பின்பற்றி, அவர்களுக்கு தேவையான மளிகை சாமான்கள், காய்கறி, பழங்கள் மற்றும் மருந்துகள் எல்லாம் வாங்கி கொடுக்க ஆரம்பித்தனர்.
ஆரம்பத்தில் லாபம் இல்லாவிட்டாலும், சற்றும் மனம் தளராமல், அந்த வேலையை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். உதவி பெற்றவர்கள், மற்றவர்களுக்கு சொல்லிச் சொல்லியே, நண்பனுக்கு பல வாடிக்கையாளர்கள் பெருகினர்.
இரண்டு மாதத்திற்குள் மிகவும், 'பிசி'யாகி விட்டான். நோய் தொற்று குறைந்த பிறகும், தொடர்ந்து வாங்கி வருகின்றனர், வாடிக்கையாளர்கள்.
தற்போது, தொழிற்சாலையில் மீண்டும் வேலைக்கு வரச் சொல்ல, பணிக்கு போக ஆரம்பித்தான். நண்பனின் மனைவி, மகள், மகன் ஆகியோர், இப்போது அந்த வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
மேலும், உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் முதியோர் மற்றும் தனியாக வசிப்பவர்களை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வேலையில் ஈடுபட்டுள்ளான்.
வாழ வழியில்லை என்று புலம்பாமல் யோசித்தால், கட்டாயம் வருமானம் ஈட்ட பல நல்ல வழிமுறைகள் கிடைக்கும்.
- செந்தில்குமார், சென்னை.
மெனுவை முன்கூட்டியே அறிந்தால்...
சமீபத்தில், ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். காலை - மதிய சாப்பாட்டிற்கான மெனுவை அச்சிட்டு, 'டைனிங் ஹாலில்' ஒரு போர்டில் ஒட்டியிருந்தனர்.
கல்யாண வீட்டில், இது வித்தியாசமாக இருக்கவே, அங்கிருந்த சமையற் கலைஞரிடம் கேட்டேன்.
அதற்கு அவர், 'என்ன ஐட்டங்கள் உள்ளன என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டால், அவரவருக்கு தேவையானதை மட்டும் கேட்டு வாங்கிக் கொள்வர். இல்லையென்றால், அவர்களுக்கு பிடிக்காததை, இலையில் வைத்தவுடன் சாப்பிடாமல் வீணாக்கி விடுவர். அதற்காக தான் இந்த ஏற்பாடு...' என்றார்.
அதேபோல், பந்தியில் அமர்ந்திருந்த அனைவரும் வேண்டியதை மட்டும் பரிமாறச் செய்து, இலையில் மீதம் வைக்காமலும், வீணாக்காமலும் சாப்பிட்டனர்.
இதேபோல் அனைத்து திருமணங்களிலும் செய்தால், உணவு வீணாவதை தவிர்க்கலாமே!
- என். உஷாதேவி, மதுரை.
