தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஆக 20, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நண்பனின் நல்ல செயல்!

கல்லுாரி படிப்பை முடித்து, தனியார் நிறுவனப் பணியில் இருக்கிறான், நண்பன்.

அவன் பணிக்கு சென்று, முதல் மாத ஊதியம் வாங்கியதிலிருந்து, வாரந்தோறும், விடுமுறை தினத்தில், வீடு வீடாக சென்று, தன் கைக்காசில், பழைய நாளிதழ்களை எடை போட்டு வாங்கி வந்து, எங்கள் பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் உள்ளவர்களிடம் தருவான்.

அவர்கள் அந்த நாளிதழ்களை கொண்டு, காகித உறைகளை செய்து தருவர். அவற்றை, மருந்து கடைகளில் கொடுத்து, அதற்குரிய தொகையை, முதியோர் இல்லத்தில் வசிக்கும், முதியவர்களிடம் தந்து விடுவான்.

இதுகுறித்து அவனிடம் கேட்டேன்.

'வாழ்க்கையில் நாம் வாய்ச்சொல் வீரனாகவும் இருக்கக் கூடாது; எதையும் கண்டும் காணாமல் போகும் நபராகவும் இருக்கக் கூடாது; வாழும்போதே, நம்மால் இயன்ற உதவிகளை, இயலாதவர்களுக்கு செய்திட முயலுதல் வேண்டும். அதன்படி, என்னால் இயன்றதை செய்கிறேன்...' என்றான்.

அவன் சேவையை அறிந்த ஏரியாவாசிகள், இப்போதெல்லாம் இலவசமாகவே பழைய நாளிதழ்களை அவனிடம் கொடுத்து, அவன் தொண்டு தொடர ஊக்கப்படுத்துகின்றனர்.

அவனைப் பின்பற்றி, நானும் சில சமூக சேவைகளை செய்து வருகிறேன்.

— செ.விஜயன், சென்னை.

பன்மொழி அறிவு தந்த வளர்ச்சி!

கனடாவில் பணிபுரிகிறார், உறவினர் ஒருவர். அவருடைய மனைவி இல்லத்தரசியாக இருக்கிறார். அவர்களுக்கு மூன்று மற்றும் ஐந்து வயதுடைய குழந்தைகள் இருக்கின்றனர். உறவினருடைய வயதான பெற்றோரும், அவர்களுடனே வசிக்கின்றனர்.

உறவினருக்கு சமமாக, அவரது மனைவி படித்திருந்தாலும், குழந்தை வளர்ப்பு மற்றும் மாமனார் - -மாமியார் பராமரிப்பு என, வேலைக்கு செல்லாமல், வீட்டிலேயே இருந்து வந்தார்.

அவருக்கு ஏற்கனவே தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளை சரளமாக பேசவும், எழுதவும், படிக்கவும் தெரியும். ஓய்வு நேரத்தை வீணாக்காமல், கனடாவில் புழக்கத்திலுள்ள, பிரெஞ்சு, சீனாவின் மேண்டரின், இந்தியாவின் பஞ்சாபி, குஜராத்தி, மலையாளம் போன்ற, பல மொழிகளையும் கற்றுக் கொண்டார்.

'யூ டியூப்' சேனல் துவக்கி, அந்தந்த மொழியிலிருந்து, சிறப்பான நுால்களை தேர்ந்தெடுத்து, புதினம், சிறுகதை, கட்டுரை, சிறுவர்களுக்கான படைப்புக்கள் என, படைப்பாளர்களின் அனுமதி பெற்று, அந்தந்த மொழியிலேயே வாசித்து, ஆடியோவாக வெளியிட்டு வருகிறார்.

அவருடைய, 'யூ டியூப்' ஆடியோ சேனலுக்கு, சிறப்பான வரவேற்பு கிடைத்து, கணவரை விட பல மடங்கு வருமானத்தை, வீட்டிலிருந்தே சம்பாதித்து வருகிறார். தாய்மொழி கூடவே, பன்மொழி அறிவும் பெற்றுக் கொள்வது, வளர்ச்சிக்கு உதவும் என்பதற்கு, சாட்சியாகவும் திகழ்ந்து வருகிறார்!

— மலர்மணி, திருச்செங்கோடு, நாமக்கல்.

மினி, 'மேக் - அப்!'

முடி வெட்ட சலுானுக்கு சென்றிருந்தேன். ஏக கூட்டம்.

'ஐயா வாங்க, உங்களுக்கு முதலில் வெட்டுகிறேன். இவங்க எல்லாரும், மினி, 'மேக் - அப்' செய்து கொள்ள காத்திருக்கின்றனர்...' என்றார்.

அங்கிருந்த இளைஞர்கள் கூட்டத்தை ஆச்சரியமாக பார்த்து, 'மினி மேக் - அப் என்றால் என்ன?' என்றேன்.

'தலையில் எண்ணெய் தேய்த்து, சிறிது மசாஜ் செய்து, தலைமுடியை சீவி அலங்கரித்து, முகத்தில் பவுடர் போட்டு, 'மேக் - அப்' செய்ய, 30 ரூபாய் சார்ஜ்...' என்றார்.

'இதில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்...' என்றேன்.

'ஒரு நாளைக்கு, சுமார் 2,500 ரூபாய் வரை கிடைக்கும். ஞாயிறு மற்றும் முகூர்த்த நாளில், 5,000த்திற்கு மேல் கிடைக்கும்.

'ஊருக்குள் நிறைய சலுான் மற்றும் பியூட்டி பார்லர்கள் வந்து விட்டன. ஆதலால், தொழில் கொஞ்சம் மந்தம். மினி, 'மேக் - அப்' ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு உதவியாக இருக்கும். ஆதலால் இதை செய்ய ஆரம்பித்தேன். பெண்களுக்கான, 'மேக் - அப்' சார்ஜ்,

60 ரூபாய். அதை என் மனைவி கவனித்துக் கொள்கிறார்...' என்றார்.

புது உத்தியை செயல்படுத்தி, தன் தொழிலை வளர்ச்சி பாதைக்கு திருப்பி, சம்பாதிக்க முடியும் என நிரூபித்தவரை, மனதார பாராட்டி வந்தேன்.

புதிய யுக்தியை பயன்படுத்தினால், முன்னேறுவது சுலபம் என்பதையும் புரிந்து கொண்டேன்.

எம்.எஸ்.வி. அருண்,

தென்காசி.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us