தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/மூன்று கண் ஆஞ்சநேயர்!

மூன்று கண் ஆஞ்சநேயர்!

மூன்று கண் ஆஞ்சநேயர்!


PUBLISHED ON : செப் 24, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 24, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆஞ்சநேயரை, பஞ்சமுகங்களுடன் பார்த்திருப்போம்; ஆனால், அவரை, ஒரே முகம், பத்து கை, மூன்று கண் கொண்டவராகப் பார்க்க, நாகப்பட்டினம் மாவட்டம், அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோவிலுக்கு வாருங்கள்!

இலங்கையில், ராவணனுடன் யுத்தம் முடிந்து, அயோத்தி திரும்பும் வழியில், பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கினார், ராமர். அப்போது அங்கே வந்த நாரதர், 'ராமா... இலங்கையில் யுத்தம் இன்னும் முடிவடையவில்லை; உன் வில்லுக்கு இன்னும் வேலை உள்ளது. அரக்கர்களின் வாரிசுகளான இரக்கபிந்து, இரக்தராட்சகன் என்போர், கடலுக்கடியில் தவம் செய்தபடி உள்ளனர். ராவணனின் அழிவால், அவர்கள் உன்னை பழி வாங்க சபதம் செய்துள்ளனர். இந்த தவம் பூர்த்தியானால், இறந்து போன அனைத்து அசுரர்களும் உயிர் பெறுவர். எனவே, நீ அவர்களை அழித்து, தவத்தை முற்றுப்பெறாமல் செய்ய வேண்டும்...' என்றார்.

அதற்கு ராமர், 'மகரிஷியே... தாங்கள் கூறியபடி அந்த அரக்கர்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் அயோத்தி திரும்பாவிட்டால், தம்பி பரதன் தீக்குண்டத்தில் இறங்கி, உயிரை விட்டு விடுவான். எனவே, நீங்கள் வேறு யார் மூலமாவது அசுரர்களை அழிக்க ஏற்பாடு செய்யுங்கள்...' என்றார். அதற்கு, நாரதர், தன்னுடன் லட்சுமணனை அனுப்பும்படி கேட்டார். 'லட்சுமணன் என் நிழல் போன்றவன்; அவனை என்னால் அனுப்ப முடியாது...' என்றார் ராமர். அதனால், அளவிலா ஆற்றலும், அஷ்டமா சித்திகளும் பெற்ற ஆஞ்சநேயரை அனுப்ப முடிவெடுத்தனர்.

உடனே, எல்லா தெய்வங்களும் அங்கு வந்தனர். திருமால், ஆஞ்சநேயரிடம் தன் சங்கு, சக்கரத்தை கொடுத்தார். பிரம்மா, தன் பிரம்ம கபாலத்தையும், ருத்ரன், மழு (கோடரி)வையும், ராமர், வில் மற்றும் அம்பையும், இந்திரன், வஜ்ராயுதத்தையும் கொடுத்தனர். கருடன், தன் பங்கிற்கு இறக்கைகளையும், கிருஷ்ணர், சக்தியளிக்கும் வெண்ணெய்யையும் வழங்கினர்.

இப்படி, தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களை பிடித்துக் கொள்ள, பத்து கரங்களை உருவாக்கினார், ஆஞ்சநேயர். அப்போது அங்கு வந்த சிவன், தன் சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணை வழங்கினார்.

இந்த ஆஞ்சநேயருக்கு, 'திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர்' என்ற பெயர் ஏற்பட்டது. 'திரி நேத்ரம்' என்றால், மூன்று கண்; 'தச புஜம்' என்றால் பத்து கை!

இந்த வடிவத்துடன் அனுமன் புறப்பட்டு, கடலுக்கடியில் தவமிருந்த அசுரர்களை அழித்து, அயோத்தி திரும்பினார். வழியில் தான் கொண்டு சென்ற ஆயுதங்களுடன், ஆனந்தமயமாக இத்தலத்தில் தங்கியதால், ஆனந்த மங்கலம் என, இவ்வூர் பெயர் பெற்றது. நாளைடைவில் அனந்தமங்கலம் ஆனது.

இத்தகையை ஆஞ்சநேயரை இந்தியாவில் வேறு எங்கும் காண இயலாது. இவரது வாலில் நவக்கிரகங்களும் உள்ளதால், கிரகப் பெயர்ச்சியின் போது, ஆஞ்சநேயருக்கு அந்தக் கிரகத்துக்குண்டான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் வழியாக, நாகப்பட்டினம் செல்லும் வழியில், 25 கி.மீ., துாரம் சென்றால், அனந்தமங்கலத்தை அடையலாம்.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us