தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை - நடுத்தெரு நாராயணன்

திண்ணை - நடுத்தெரு நாராயணன்

திண்ணை - நடுத்தெரு நாராயணன்


PUBLISHED ON : அக் 17, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜாஜி, தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தபோது ஒரு கவிஞருக்குக் கடிதம் எழுதினார். அதில்:

வணக்கம். அன்புக்குரியவருக்கு ஒரு பெரும் வேலை வைக்க இதை எழுதுகிறேன்.

என், 'வியாசர் விருந்து' பிரதி ஒன்று இத்துடன் வந்து சேரும். அதை ஒவ்வொரு அத்தியாயமாகத் தாங்கள் படித்து, என்னை ஆசீர்வதித்து ஒவ்வொரு அத்தியாயக் கதைக்கும் ஒரு வெண்பா எழுதித் தந்தால், இந்த நூலின் புதுப் பதிப்பில் வெண்பாக்களை சேர்த்து அச்சிட ஏற்பாடு செய்யலாம் என்பது என் ஆசை. அத்தியாயத்தில் முக்கிய கருத்து அல்லது கதையைச் சுருக்கமாகக் காட்டும்படி ஒரு வெண்பாப் பாட்டு இருந்தால் போதும். முடிந்தால் மிக்க புகழ் தரும்; பயன்படும். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படிப்பர்.

— ராஜகோபாலாச்சாரி.

ஆனால், கவிஞரின் உடல்நிலை காரணமாக வெண்பாப் பாட்டு எழுதித்தர முடியவில்லை. இக்கடிதத்திற்கு அந்தக் கவிஞரின் மருமகனிடமிருந்து, 'பெரிய அறிஞராகிய தங்களுடைய வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டுமென்ற அவா மாமனாருக்கு மிகுதியாக உண்டு. அவ்வாறு செய்ய உடல்நிலை இடம் தரவில்லையே என்ற வருத்தமும், கவலையும் அதைவிடக் கூடுதலாக உள்ளன...' என்று பதில் வந்தது.

வெண்பா கேட்ட கவிஞர்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

— 'சோமலெ' எழுதிய,  'பிரயாண இலக்கியம்' நூலிலிருந்து...

***

நான் சிறுவயதில் தெருக்கூத்து ஒன்று பார்த்தேன். அதில், விகடமாக நடித்தவர், 'சந்தனக் குடுக்கையிலே விசுவாமித்திரன் தோன்றினான்...' என்று பாடினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொடியைத்தான் காரம் போகாமலிருக்கக் குடுக்கையிலே வைப்பர். சந்தனத்தைக் குடுக்கையிலே வைக்க மாட்டார்களே. அப்படியும் குடுக்கையிலிருந்து எப்படி விசுவாமித்திரன் தோன்ற முடியும் என்ற சந்தேகம் நீண்ட நாளாகவே இருந்து வந்தது. பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் ராமாயணத்தைப் படித்துக் கொண்டு வரும் போது, அரண்மனை விழாவிலே சந்தனத் தாம்பூலம் வழங்கிக் கொண்டிருக்கும் போது, விசுவாமித்திரன் வந்தார் என்பதைப் படித்தேன். அதன் பிறகு தான் பதினைந்து ஆண்டுகளாக எனக்கிருந்த சந்தேகம் நிவர்த்தியானது. ஆம்; சந்தனங் கொடுக்கையிலே... என்பதையே, 'சந்தனக் குடுக்கையிலே' என்று பாடி இருக்கிறார் அந்தக் கூத்தாடி. கொடுக்கையிலே என்பது குடுக்கையிலே என்று மாறியதோடல்லாமல், 'சந்தனங்' வரவேண்டிய இடத்தில், 'சந்தனக்' வந்ததாலும் வந்த கூத்துதான் இது. — கொத்தமங்கலம் சுப்பு ஒரு கட்டுரையில்.

***

திருப்பனந்தாள் கோவிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார் கி.வா.ஜகன்நாதன். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன. இலை போட்ட பின், கி.வா.ஜ.,வும், அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர். பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ.,வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.,வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால், ஒன்றும் விழவில்லை. கி.வா.ஜ., அவனை நோக்கி, 'என்ன?' என்று கேட்க, 'நெய்ங்க... உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது...' என்று சொன்னான். கி.வா.ஜ., நகைச்சுவையாக, 'விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!' என்று சொல்ல, உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.

***

தன்னுடைய மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட அரசியல் தலைவர் ஒருவர், ஒரு பத்திரிகைக் அலுவலகத்துக்குள் வேகமாக நுழைந்தார். பத்திரிகை ஆசிரியரைப் பார்த்து, 'என்னை அவமானப்படுத்தும்படியாக உங்கள் பத்திரிகையில் ஏன் செய்தி போட்டீர்கள்?' எனக் கேட்டார். உடனே பத்திரிகை ஆசிரியர், 'நீங்கள் ராஜினாமா செய்தது உண்மை தானே! அதைத்தானே செய்தியாக வெளியிட்டிருக் கிறோம்...' என்றார். 'செய்தி சரி தான்... 'நகர முன்னேற்றச் செய்திகள்!' என்ற தலைப்பின் கீழ் அல்லவா அதைப் போட்டிருக்கிறீர்கள்...' என்றார், மாஜி மேயர்.                                                                 ***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us