sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

டைட்டானிக் காதல்! (16)

/

டைட்டானிக் காதல்! (16)

டைட்டானிக் காதல்! (16)

டைட்டானிக் காதல்! (16)


PUBLISHED ON : டிச 20, 2020

Google News

PUBLISHED ON : டிச 20, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை சுருக்கம்: புவனாவை பெண் பார்க்க மாப்பிள்ளை ராஜாராமன் வீட்டார் வருவதால், அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. பட்டு புடவை உடுத்துமாறு புவனாவின் அம்மா கூற, தம்பி குமரேசனை அனுப்பும்படி கேட்கிறாள். அவன் வந்ததும், அவனிடம் மாப்பிள்ளையின் மொபைல்நம்பரை வாங்கி தருமாறு கேட்க, அவன் உற்சாகமாக புன்னகைக்கிறான் -

அன்றைய மாலை மிக அழகாக, அமைதியாக போயிற்று. மிக பூரிப்படைந்தான், ராஜாராமன்.

புவனேஸ்வரியின் எளிமை நிறைந்த அழகு, முன்னை விடவும் இப்போது அவன் மனதை அதிகம் கொள்ளை கொண்டது.

'இவளை அடைந்தால் அனைத்தும் பெற்ற மாதிரி ஆகிவிடும். வாழ்க்கை பூர்ணத்துவம் அடைந்து விடும்...' என்று நினைத்தான். அவனது பெற்றோரான, சாம்பசிவமும் - ராஜாம்பாளும் கூட மனம் நிறைந்து காணப்பட்டனர்.

புவனேஸ்வரியும், குருமூர்த்தி சிவாச்சாரியாரின் குடும்ப சூழலும் இதமாய் தெரிந்தது. தாங்கள் தேடியிருந்தால் கூட இதுபோன்ற பெண்ணும், சம்பந்தமும் கிடைத்திருக்காது என்கிற அசைக்க முடியாத முடிவிற்கு வந்தனர்.

மிக சுவாதீனத்துடன், குமரேசனை கூப்பிட்டு அருகில் உட்கார வைத்துக் கொண்டான், ராஜாராமன். தோள் மீது கை போட்டு, உரிமையோடு பழகினான்.

''எங்க படிக்கிற?'' என்று கேட்டான்.

''பி.எஸ்., ஹைஸ்கூல்,'' என்றான், குமரேசன்.

''பக்கத்துல இருக்கா?''

''நடந்து போகிற துாரம்.''

''என்ன படிக்கிற?''

அக்கேள்விக்கு பதில் சொன்ன குமரேசன், சற்று தயக்கத்தோடு, ''உங்க மொபைல் நம்பர் தர முடியுமா?'' என்றான்.

''உங்கிட்ட மொபைல் இருக்கா?''

''அக்காகிட்ட இருக்கு.''

''நம்பர் உனக்கா, அக்காவுக்கா?''

''அக்கா தான் கேட்க சொன்னா.''

உற்சாகமும், சந்தோஷமும் ததும்ப, அம்மாவின் அருகில் உட்கார்ந்திருந்த, புவனாவை பார்த்தான். அதே நேரத்தில் அவளும் தலை நிமிர்ந்து இவனை பார்த்ததில், உள்ளம் சிலிர்த்தான்.

''ஒரு பேப்பர் எடுத்து வா, எழுதி தரேன்.''

யாரும் அறியாதவாறு குமரேசன் எடுத்து வந்த காகிதத்தில், எண்களை எழுதி, மடித்து கொடுத்தான்.

''ஜாக்கிரதை. தொலைக்காமல் அக்காகிட்ட கொடுத்துடு.''

பாக்கெட்டில் பத்திரப்படுத்தியவாறே தலையாட்டினான், குமரேசன்.

காரில் ஏறியபோது, குமரேசனிடம் கிசுகிசுத்தான், ராஜாராமன்.

''மறக்காமல் அக்காவை போன் பண்ணச் சொல்லு.''

''அப்போ, நாங்க புறப்படறோம். நல்ல நாள் பார்த்து நிச்சயதார்த்தத்தை வச்சுக்கலாம்,'' என்றார், சாம்பசிவம்.

எல்லாம் நல்லபடியாக முடிந்த திருப்தியில், கை கூப்பிய, குருமூர்த்தி சிவாச்சாரியார், ''அம்பாள் உத்தரவு,'' எனக் கூறி விடை கொடுத்தார்.

கார் கிளம்பி போனதும், உள்ளே வந்தவர், ''என்ன பர்வதம்?'' என்றார்.

''இத்தனை நாள் நீங்க அம்பாளுக்கு பண்ணின கைங்கர்யத்துக்கு, ஈஸ்வரனும் - ஈஸ்வரியும் சேர்ந்து அருள் மழை பொழிஞ்சுட்டா,'' என்றாள், பர்வதம்.

''புவனா, என்ன சொல்றா?''

''அவ என்ன சொல்ல போறா... சொல்ல என்ன இருக்கு... எல்லார் மனசும் நிறைஞ்சு கிடக்கிற மாதிரி, அவ மனசும் நிறைஞ்சு தான் இருக்கும்.''

''மன்னி என்ன சொன்னா?''

''மன்னிக்கு பூரண திருப்தி. இந்த சம்பந்தம் கிடைக்க, புவனா கொடுத்து வச்சிருக்கணும்னா.''

துண்டை உதறி தோளில் போட்டவர், ''நான், கோவிலுக்கு போயிட்டு வரேன்,'' என்று, படி இறங்கினார்.

அதே சமயம், அறையினுள் தன் பாக்கெட்டிலிருந்து மடிக்கப்பட்ட காகிதத்தை எடுத்து நீட்டினான், குமரேசன்.

''இந்தாக்கா...''

''என்னதுடா?''

''நீ கேட்ட அத்திம்பேர் நம்பர்.''

''அதுக்குள்ள அத்திம்பேராயிட்டாரா?''

''பின்ன... அவருக்கென்ன குறைச்சல்... ஜாம் ஜாம்ன்னு ராஜா மாதிரி இருக்கார்.''

''ராஜா மாதிரி இருந்தா, கல்யாணம் பண்ணிக்கணுமா?''

சட்டென்று எதுவோ இடறிற்று குமரேசனுக்கு.

''என்னக்கா இப்படி சொல்ற?''

''உடனே நீ வீடு பூரா டமாரம் அடிச்சுடாத... சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்.''

''அதானே பார்த்தேன்,'' என்று திருப்திகரமாக வெளியேறினான், குமரேசன்.

அவன் போனதும், ராஜாராமனின் எண்ணை, தன் மொபைலில் பதிவு செய்து கொண்டாள்.

'நாளை ஆபீஸ் போனதும், முதல் வேலையாக அவனிடம் பேச வேண்டும்...' என, முடிவு செய்தாள்.

காலையில் எழுந்ததும், அவளிடம் யாரும் ஒன்றும் கேட்கவில்லை. அவரவர் வேலையில் உற்சாகமாக ஈடுபட்டிருந்தனர். அப்பா, வழக்கப்படி கோவிலுக்கு போயிருந்தார். புவனாவும் சீக்கிரமே அலுவலகத்திற்கு கிளம்பினாள்.

''என்ன, இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட. இன்னும் சமையல் ஆகலையே,'' என்றாள், பர்வதம்.

''பரவாயில்லம்மா... வெளில பார்த்துக்கறேன்... நேத்திக்கே மதியம் ஆபீஸ் விட்டு வந்தாச்சு...'' என்றபடி படியிறங்கினாள்.

அலுவலகம் வந்து தன் கேபினில் உட்கார்ந்த பின், அமைதியாக அடுத்து செய்ய வேண்டியதை யோசித்தாள். இதற்கு மேலும் பேசாதிருக்க கூடாது என்று முடிவு செய்தாள்.

கார்த்திகேயன் வீட்டாருக்கே தெரிந்தாயிற்று; இனி, தெரிய வேண்டியது தன் வீட்டுக்கு மட்டும் தான். சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு வந்தாயிற்று. தைரியமாக செயலில் இறங்க வேண்டும். தயங்கக் கூடாது; பயப்படக் கூடாது.

மொபைலை எடுத்து, ராஜாராமனை அழைத்தாள்.

''சொல்லு புவனா...'' என்ற அவன் குரலில், காதல் மிகுந்திருப்பது புலப்பட்டது.

அதனால், பாதிக்கப்பட்டவளாக, ''நான் தான் என்று எப்படி தெரியும்?'' என்று கேட்டாள்.

''ஒரு யூகம் தான்.''

''உங்களிடம், 'பர்சனல்' ஆக கொஞ்சம் பேச வேண்டுமே?''

''பேசு, புவனா.''

''நேரில் பேச வேண்டும்.''

''என்ன புவனா...'' அவன் குரலின் உற்சாகம் சற்று மங்கியது.

''நேரில் தான் சொல்ல முடியும்.''

''புறப்பட்டு வரட்டுமா?''

''வர முடியுமா?''

''நாம் என்ன வர முடியாத துாரத்தில் வெளிநாட்டிலா இருக்கிறோம்... காரை எடுத்தால், நான்கு மணி நேரத்தில் சென்னை...''

''தாங்க்ஸ்... எப்போது வருகிறீர்கள்?''

''இப்போது, மணி என்ன... காலை, 10:20 மணி. 11:00க்கு கிளம்பினால், 3:00 - 3:30 மணிக்கெல்லாம் அங்கு இருப்பேன். எங்கு வரவேண்டும்... வீட்டுக்கா?''

''இல்லை. நான் போன் செய்வது கூட வீட்டுக்கு தெரியாது.''

அவன், கால் விநாடி பேசாதிருந்தான்.

''என்ன பேச்சே இல்லை?''

''எங்கு வரவேண்டுமென்று சொல் புவனா?''

''ம்... பார்க் ஷெரட்டன்?''

அவன் தயங்கி, ''அந்த ஹோட்டலுக்கெல்லாம் நீ போவாயா, புவனா?''

''இல்லை. இதுவரை போனதில்லை. ஹோட்டலுக்கெல்லாம் அதிகம் போக மாட்டேன். இன்று, உங்களுக்காக தான், அந்த பெரிய ஹோட்டல். மரியாதைப்பட்ட மனிதருக்கு, அந்த ஹோட்டல்தானே சரியாக இருக்கும்.''

அவன் குரலில் மீண்டும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

''ஓ.கே., புவனா... சரியாக, 4:00 மணிக்கு நான் அங்கிருப்பேன்.''

''நானும், 4:00 மணிக்கு உங்களுக்காக, 'ரிசப்ஷனில்' காத்திருப்பேன்.''

சொன்னபடி சரியாக, 4:00 மணிக்கு பார்க் ஷெரட்டன் ஹோட்டலின், 'ரிசப்ஷனுக்குள்' நுழைந்தான், ராஜாராமன்.

சோபாவில் அமர்ந்திருந்த புவனாவை கண்டதும், அவன் முகம் தானாக மலர்ந்தது. மனது, அவன் கட்டுப்பாட்டை மீறி துள்ளியது. அருகில் போகும் வரை, அவளுடன் இருந்த அவனை கவனிக்கவில்லை; கண்ணிலேயே படவில்லை.

அருகில் போனவுடன், அவளுடன் கூடவே எழுந்து நின்ற கம்பீரமான இளைஞன், கண்ணில் பட்டான்.

''ஐயம் கார்த்திகேயன்.''

நீட்டப்பட்ட கையை பற்றி, ''ஐயம் ராஜாராமன்,'' என்றபோது, அவன் குரல் சுரத்தின்றி கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போல் ஒலித்தது.

— தொடரும்

இந்துமதி







      Dinamalar
      Follow us