தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தெய்வ அருளைப் பெற...

தெய்வ அருளைப் பெற...

தெய்வ அருளைப் பெற...


PUBLISHED ON : செப் 27, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வங்கியில், நம் கணக்கில் ஏராளமான பணம் இருக்கிறது. இந்த ஊரடங்கு காலத்தில், யாரோ

புண்ணியவான், நம் கஷ்டம் தெரிந்து போட்டிருக்கிறார் போலிருக்கிறது. இருந்தாலும், அந்தப் பணத்தை நம்மால் எடுக்க முடியவில்லை. ஏன்? அதற்குண்டான வழி என்ன என்பதை விவரிக்கும் நிகழ்வு இது:

பண்டரிபுரத்தில், சாதுக்கள் சிலர் கூடி, சமையல் செய்து கொண்டிருந்தனர். முந்தைய தினம் ஏகாதசியாக இருந்ததால், விரதம் இருந்தவர்கள், மறுநாளான துவாதசியன்று பாரணைக்காக சமைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த ஒரு கறுப்பு நாய், சாதுக்கள் தயாரித்து வைத்திருந்த ரொட்டிகளை பார்ப்பதும், நெருங்கி வருவதுமாக இருந்தது. அதைப் பார்த்த சாதுக்கள், நாயை அடித்து விரட்டினர்.

அடிபட்ட நாய் ஓடியது; வழியில், ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்தார், நாமதேவர். அதைப் பார்த்ததும் நாய், நாமதேவர் தயாரித்து வைத்திருந்த ரொட்டியை வாயில் கவ்வி, ஓடியது.

அதைப் பார்த்த நாமதேவர், நெய் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, நாயின் பின்னாலேயே ஓடி, 'வெறும் ரொட்டியைத் தின்காதே, வயிறு வலிக்கும்; இந்த நெய்யில் தோய்த்துத் தருகிறேன். சாப்பிடு...' என்று கூவினார்.

அதைக்கேட்ட நாய் நின்றது; அதன் வாயிலிருந்த ரொட்டியை வாங்கி, தன்னிடம் இருந்த நெய்யில் தோய்த்துக் கொடுத்தார், நாமதேவர்.

அதைக்கண்ட மற்ற சாதுக்கள் எல்லாம் சிரித்தனர்; 'நாமதேவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது...' என, ஏளனம் செய்தனர்.

அப்போது, மனிதக் குரலில், 'நாமதேவா... பகவானான நான், உன்னை சோதனை செய்வதற்காகவே, இப்படி நாய் வடிவில் வந்தேன். உனக்கு மட்டும் தான் எல்லா ஜீவராசிகளையும் சமமாகப் பார்க்கும் மனோபாவம் இருக்கிறது...' என்றது, அந்த நாய்.

அதே விநாடியில், நாய் வடிவில் வந்த பகவானும் அங்கிருந்து மறைந்தார்.

நாமதேவரைக் கேலி பேசிய மற்ற சாதுக்கள் எல்லாம் வருந்தி, 'தெய்வம் வந்துமே, அதை உணர்ந்து, அந்தத் தெய்வத்திற்கு தொண்டு செய்யும் பாக்கியம் நமக்குக் கிடைக்க வில்லையே...' என்று சொல்லி புலம்பினர்.

என்ன செய்ய... வங்கிக் கணக்கில் பணம் இருந்தாலும், அதை எடுப்பதற்கான வழிமுறைகள் தெரிந்து செயல்பட்டால், பலன் கிடைக்கிறதல்லவா. அதுபோல, அன்பின் வழி உணர்ந்து செயல்பட்டால், தெய்வ அருளைப் பெறலாம் என்பது ஆன்றோர் அனுபவம்.

ஆன்மிக தகவல்கள்!

பூஜை செய்யும்போது, கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தை, பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்த நிலையில் இருக்க வேண்டும்.

பி. என். பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us