/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கோடை காலத்தில் வரும் கண் வறட்சி நீங்க...
/
கோடை காலத்தில் வரும் கண் வறட்சி நீங்க...
PUBLISHED ON : ஏப் 20, 2025

இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் கணினிக்கு முன் அமர்ந்து, பல மணி நேரம் பணி செய்கின்றனர். இன்னும் சிலர், 'லேப்-டாப்' மற்றும் மொபைல்போன்களை பல மணி நேரம் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் விளைவு, கண்கள் வறட்சி அடைவது, கண் எரிச்சல் மற்றும் கண்களில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். கோடைகாலத்தில் இது இன்னும் அதிகரிக்கும். இப்பிரச்னைக்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.
வைட்டமின் சி, பயனுள்ள, ஆன்டி-ஆக்சிடண்ட். இது, நம் கண்களை புத்துணர்ச்சியாகவும், புற ஊதாக் கதிர்களில் இருந்தும் காப்பாற்றுகிறது. சிட்ரஸ் பழங்கள், பப்பாளி, அன்னாசி, ப்ரோக்கோலி மற்றும் மாம்பழத்தில் இது நிறைந்திருக்கிறது. இவை, கண்களுக்கு மிகச்சிறந்த உணவுகளாகும். வைட்டமின் சி நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடுவதால், கண் புரை எனும், 'காட்ராக்ட்' குறைபாடுகளை, 84 சதவீதம் தடுக்கலாம்.
ஆரஞ்சு, கேரட் போன்ற ஆரஞ்சு நிற உணவுகளில், பீட்டா கரோட்டின் அதிகமுள்ளது. இந்த சத்தை எடுத்துக் கொள்ளும் போது, அது வைட்டமின் ஏ ஆக மாறுகிறது. வைட்டமின் ஏ, இரவு பார்வையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கேரட், தக்காளி, தர்பூசணி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்றவற்றில் இந்த வைட்டமின் ஏ அதிகம் காணப்படுகிறது.
தினமும் ஒரு கேரட், ஒரு சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தர்பூசணி சாப்பிட, எளிதில் வைட்டமின் ஏ கிடைக்கும்.
'கிளைக்கோமா' எனப்படும், கண் திரவ அழுத்த நோய், கண் பார்வையை பாதிக்கும். கண் திரவ அழுத்தத்தை தணிக்க மஞ்சளில் உள்ள, 'குர்குமின்' என்ற பொருள் பயன்படுவதாக கண்டறிந்துள்ளனர், விஞ்ஞானிகள்.
தினசரி ஒருமுறை சூடான டீ குடிக்கும் நபர்களுக்கு குளுகோமா பாதிப்பு குறைகிறது என்கின்றனர், அமெரிக்காவின் நேஷனல் ஹெல்த் சர்வே ஆராய்ச்சியாளர்கள்.
துத்தநாக சத்து, விழித்திரை தொடர்பான சிதைவுகளில் இருந்து, பாதுகாக்கிறது. கோழி கறி, கடல் சார்ந்த உணவுகள், பட்டாணி, பீன்ஸ் - ராஜ்மா, வேர்க்கடலை, பாதாம், சிவப்பு அரிசி, பால் ஆகியவற்றிலும் துத்தநாக சத்து அதிகமாக உள்ளது. வாரம் இருமுறை இந்த உணவுகளை சாப்பிடுவதால், கண் திசுக்களின் ஆரோக்கியம் காக்கப்படும்.
பசலைக்கீரை மற்றும் புரோக்கோலி போன்ற பச்சை நிற கீரைகளில், லுாட்டின் மற்றும் ஜியோஸாந்தின் என்ற, இரண்டு பிரதான ஆன்டி ஆக்சிடண்ட் சத்துக்கள் உள்ளன. இவை, வயதானவர்களின் பார்வை குறைபாட்டை நீக்குகிறது.
இரவில், இருட்டில் மொபைல் போனை படுத்துக் கொண்டே இயக்குபவர்களுக்கு, தற்காலிக பார்வை இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, அந்த பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேல், சூரிய வெளிச்சத்தில் வெளியில் பொழுதை கழிக்கும் குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்னை வருவது குறையும்.
வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு என, இவற்றில் ஏதாவது ஒரு காய்கறியை வெட்டி துண்டுகளாக்கி, கண்களின் மீது வைக்கலாம் அல்லது தேங்காய் பால் சிறிது எடுத்து கண்களின் மேற்புறம் தேய்க்கலாம். வெளிப்புறமாக இவ்வாறான முயற்சிகளை எடுத்தாலும், ஆரோக்கியமான உணவும், முறையான துாக்கமும், நிறைய தண்ணீர் குடிப்பதும் தான், கண்களை காக்கும்.
- கி. ராஜன்