
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 34 வயது ஆண். படிப்பு: பி.காம்., எனக்கு இரண்டு சகோதரிகளும், ஒரு தம்பியும் உள்ளனர். இரு சகோதரிகளுக்கும் திருமணமாகி, வெளியூரில் வசிக்கின்றனர். கல்லுாரியில் படிக்கிறான், தம்பி. சமீபத்தில் இறந்து விட்டார், அப்பா.
எனக்கு, 26வது வயதில் திருமணமாகி, ஒரு பெண் குழந்தை பிறந்தது. மனைவி, என்னுடன் வாழ பிடிக்கவில்லை எனக் கூறி, குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு, வேறொருவருடன் சென்று விட்டாள்.
குழந்தையை என் பெற்றோர் பொறுப்பில் விட்டு, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வேலைக்கு சென்றேன். போதிய வருமானமும் இல்லாததால், அங்கிருந்து விலகி, கம்ப்யூட்டர் பயிற்சி எடுத்து, வீட்டிலேயே, 'ஜாப் டைப்பிங்' செய்து கொடுக்க ஆரம்பித்தேன்.
நாளடைவில், அரசு அனுமதியுடன், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை புதுப்பித்தல் போன்ற வேலைகளை செய்து கொடுக்க ஆரம்பித்தேன். அக்கம்பக்கத்தினர் மின்சார கட்டணம் கட்டுவதற்கு என்னிடம் கொடுப்பர். அதற்கு தனியாக பணம் கொடுத்து விடுவர். ஓரளவுக்கு வருமானம் கிடைத்தது.
பத்திரப்பதிவு ஆவணங்களை, 'டைப்' செய்தும், கல்லுாரி மாணவர்களின், 'புராஜெக்ட்'டும் செய்து கொடுத்து வந்தேன்.
எங்கள் பகுதியில் வசிக்கும், 40 வயது பெண் ஒருவர், புதிய வீடு வாங்கி, அதன் பத்திரப்பதிவு செய்ய வேண்டி, ஆவணங்களை, 'டைப்' செய்து, கொடுக்க சொன்னார்.
இது சம்பந்தமாக அடிக்கடி என்னை சந்திக்க வருவார். அவர் கணவனை இழந்தவர். குழந்தைகள் இல்லை. பூர்வீக சொத்தில், இவர் பங்குக்கு ஒரு தொகை கிடைக்கவே, புது வீடு வாங்குவதாக கூறினார்.
வீட்டுக்கு வரும்போதெல்லாம், என் அம்மாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு செல்வார். என் குழந்தையை கொஞ்சுவார். வேண்டாம் என்று கூறினாலும், ஏதாவது வாங்கி வந்து குழந்தையிடம் கொடுத்து விட்டு செல்வார்.
ஒருநாள், வீட்டில் யாரும் இல்லாதபோது, உணர்ச்சி வேகத்தில் எல்லை மீறி விட்டோம். அதன்பின், அப்பெண்ணை நேருக்கு நேராக பார்க்கவும் தயக்கமாக இருக்கிறது.
இப்போது பிரச்னை என்னவென்றால், 'உன் வீட்டுக்கு வருகிறேன். ஜாலியாக இருக்கலாம்...' என்கிறாள்.
என் குழந்தையை நினைத்து, அப்பெண்ணை விட்டு விலக நினைக்கிறேன். ஆனால், அவள், என் மீது வீண் பழி சுமத்தி விடுவேன் என, பயமுறுத்துகிறாள். அப்படி ஏதாவது செய்தால், என் குடும்பம் என்னாகுமோ என, பயப்படுகிறேன்.
அப்பெண்ணிடமிருந்து நிரந்தரமாக விலக, எனக்கு நல்ல வழி கூறுங்கள், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு —
திருமணமான ஒரே ஆண்டில் பெற்ற குழந்தையை உன்னிடமே கொடுத்துவிட்டு, இன்னொரு துணையுடன் போய் சேர்ந்து விட்டாள், உன் மனைவி.
அப்படி அவள் ஓடிப் போவதற்கு, உன் எதிர்மறை குணங்களும் காரணமாய் இருந்திருக்கலாம்.
சுயபரிசோதனையில் ஈடுபடு.
ஓடிப் போன மனைவியிடமிருந்து முறைப்படி விவாகரத்து வாங்கினாயா? இல்லையெனில், குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து, முறைப்படி விவாகரத்து செய். இது, உனக்கும், உன் ஏழு வயது மகளுக்கும் நல்லது.
அடுத்து, உன்னுடன் தொடர்பில் இருக்கும், 40 வயது பெண்ணை பற்றி பார்ப்போம்...
* அவளுடன் தொடர்பு கொள்ளும் போது நீ, மகளை பற்றி கவலைப்படவில்லை. அவளை ஆசைக்கு ஒருமுறை தொட்டால் போதும் என, நினைத்திருப்பாய். வேதாளம் பின் தொடர்கிறது. மீண்டும் அவளுடன், நீ தொடர்பு கொள்ள விரும்பாததற்கு காரணம், வேறெதுவோ ஒளிந்திருக்கிறது
* உனக்கு முன், இரு தெரிவுகள் உள்ளன. முதலாவது, அவள், குழந்தைகள் இல்லாத விதவை. உன்னை விட, ஆறு வயது மூத்தவள். அவளை திருமணம் செய்து கொள்ளாமல், 'லிவ்விங் டு கெதர்' வாழ்க்கை வாழலாம். இருவருக்கும் உறவு சலித்து போகும் போது, பரஸ்பரம் கைகுலுக்கி விலகிக் கொள்ளலாம்.
இரண்டாவது தெரிவு, முறைப்படி திருமணம். உங்களுக்கு இடையே ஆன உறவை, திருமணம் வரை கொண்டு போகவே, உன்னை பயமுறுத்துகிறாள். குழந்தை இல்லாத அவளிடம், உன் மகள் ஒட்டிக் கொள்வாள்.
* இந்த இரண்டு தெரிவுகளுக்கும், அவள் ஒத்து வரவில்லை என்றால், அவளிடம் சமாதானமாக பேசு.
'நாம் இருவரும் விரும்பி, உறவு வைத்துக் கொண்டோம். போதும் நிறுத்திக் கொள்வோம் என, நான் நினைக்கிறேன். நாம் பிரிந்தாலும், நல்ல நண்பர்களாக இருப்போம். பஞ்சாயத்தையோ, காவல் நிலையத்தையோ நான் அணுக விரும்பவில்லை.
'உன்னை பற்றி நான், தவறாக எதுவும் விமர்சனம் செய்ய மாட்டேன். நீயும், என்னை விமர்சனம் பண்ணாதே. பலவந்தம், பயமுறுத்தல் மூலம், உலகில் எந்த உறவையும் ஒட்டி வைக்க முடியாது. சமரசம் இருபக்க வெற்றி என்பர். 'ஒன்ஸ் பார் ஆல் குட்பை' சொல்லி பிரிவோம்...' எனக்கூறு. 95 சதவீதம், இந்த சமாதான உடன்படிக்கைக்கு அவள் ஒத்துக் கொள்வாள்.
நீ கோவில் காளை மாதிரி சுற்றிக் கொண்டிருக்காமல், தகுந்த வரன் பார்த்து, மறுமணம் செய்து கொள்.
உன்னிடமிருக்கும் கெட்ட குணங்களை விட்டொழி.
அம்மாவிடமும், சகோதர, சகோதரிகளிடம் தகவல் தொடர்பை மேம்படுத்து.
—என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.