PUBLISHED ON : ஏப் 20, 2025

உலகில், உயிரினங்களில் மிக உயர்ந்த நிலை கொண்டது, மானுடப்பிறவி. மகத்தான காரியங்களை மனம் செய்தால் வெற்றி நிச்சயம். அதற்கான தன்மைகளை உணராமல், 'எப்போதும் இன்பமே இருக்க வேண்டும். துன்பம் ஒரு போதும் வரக்கூடாது...' என, நினைப்பர், பெரும்பாலான மக்கள்.
நல்லவைகளை நாளும் எண்ணி செயல்பட, சிலவற்றை தியாகம் செய்ய வேண்டும். அவை கோபம், பொறாமை, புறம் கூறாமை, கர்வம் கொள்ளாமை, பொய் மற்றும் களவு செய்யாமை.
இறைவனையே எண்ணி, அன்பை பகிர்ந்து, அரவணைத்து, யாவரையும் சமமாக மதித்து, தெய்வத்துணையை நாடினால், இன்பம் தானே வந்து சேரும்.
பதினெட்டாம் நுாற்றாண்டில், மகாராஷ்டிர மாநிலத்தில் வாழ்ந்த ஒரு மகானை, உதாரணமாக கூறலாம். அவர் பெயர், ஏக்நாத். பண்டரிபுரத்து கண்ணன் மீது, அளவிலா காதல் கொண்டு, ஒடிசாவில் வாழ்ந்து வந்தார்.
நாள் முழுவதும் பண்டரிநாதனைப் போற்றி பணிவதும், பாக்கள் இயற்றுவதும், ஆன்மிக பக்தர்களுக்கு கண்ணனை பற்றிய உயர்வான கருத்துக்களை மனமுவந்து சொல்வதும், அவருடைய வழக்கம். அதனால், அவரைப் போற்றி வணங்குவதோடு, அவரது கொள்கைகளையும் கடைபிடித்து வாழ்ந்தனர், பக்தர்கள் பலர்.
இன்பம் என்றால், துன்பமும் உண்டு, நன்மை என்றால், தீமையும் உண்டு. இது, உலக இயல்பு தான். ஏக்நாதரின் பெருமையையும், அவரை நாடிச் செல்லும் மக்கள் மீதும், பொறாமை கொண்டனர், ஒரு சிலர்.
அதுமட்டுமல்ல, ஏக்நாதருக்கு சிறிதளவு கூட கோபம் வராது என்பதையும் அறிந்தனர். எப்படியாவது அவரை கோபப்படுத்தி, அவமானப்படுத்த திட்டம் தீட்டினர்.
ஒருநாள் மாலை, கோதாவரி ஆற்றில் குளித்து, இறைவனை வணங்கி, கரை ஏறி வந்து கொண்டிருந்தார், ஏக்நாதர். அருகில் வந்த அவர் மீது, காரி உமிழ்ந்தனர், பொறாமை பிடித்த நால்வர். எவ்வித சலனமும் இன்றி, மீண்டும் கோதாவரியில் குளித்துவிட்டு திரும்பி வந்தார், ஏக்நாதர்.
மீண்டும், அவர் மீது எச்சிலை துப்பினர். மீண்டும் குளித்து வந்தார். இவ்வாறு அவருக்கு கோபம் வரும்படியாக ஒவ்வொருவரும், 27 முறை எச்சிலைத் துப்பினர். பொறுமையின் சின்னமாக, மீண்டும் மீண்டும் குளித்து கரை ஏறி வந்தார், ஏக்நாதர்.
சலித்து போய், 'நாங்கள் நால்வரும் உம் மீது, 108 முறை எச்சிலை துப்பியும், சிறிதும் கோபம் கொள்ளாது, கோதாவரியில் குளித்து வந்தீர்களே... உங்களால் எப்படி இது முடிந்தது?' என கேட்டனர்.
'எனக்கு, நீங்கள் மிக உயர்ந்த நன்மை அல்லவா செய்தீர்கள். நான் தினமும், இரு முறை மட்டுமே கோதாவரியில் குளித்து வருவேன். உங்களின் பேருதவியால் இன்று, கோதாவரியில், 108 முறை குளித்து, 108 முறை வழிபடச் செய்த மகான்கள் அல்லவா நீங்கள்...' என, சிரித்தபடி பதில் கூறினார், மகான்.
பொறாமை கொண்ட நால்வரும், மனம் மாறி அவர் காலில் பணிந்து, தங்கள் தவறை மன்னிக்கக் கோரினர். தவிர, அன்று முதல் அவரது சீடர்களாகவும் மாறினர்.
கோபத்தை ஒழித்து, அன்பால் அனைவரையும் தன்பால் இழுக்க முடியும். கோபத்தை விட்டு விட்டு, குணத்தை கை கொண்டால், இன்பம் தானே வரும், துன்பம் துார விலகிப் போகும் என்பதை, இச்சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.
எல்லா உயிர்களிடத்திலும் அன்பு கொண்டால் ஆண்டவனின் அருளை பெறலாம்.
வாழ்க வையகம்; வளர்க அன்பு நெறி!
அருண் ராமதாசன்