தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நீங்காத நினைவுகள்!

நீங்காத நினைவுகள்!

நீங்காத நினைவுகள்!


PUBLISHED ON : மார் 12, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவின், கலிபோர்னியா நகரம் —

காரை, 'பார்க்' முன் நிறுத்தியவர், பின்னால் உட்கார்ந்திருக்கும் தங்கை லட்சுமியையும், அவர் கணவரையும் பார்த்து, ''நீங்க இந்த, 'பார்க்'கில இருங்க... நான், 'மீட்டிங்' முடிச்சு, ரெண்டு மணி நேரத்தில் வர்றேன்; அப்படி, பெஞ்சில் உட்கார்ந்து, பிள்ளைகளை வேடிக்கை பாருங்க... வீட்டில் இருந்தா, உங்க மனசு, எப்பவும் நடந்ததை நினைச்சே வேதனைப்பட்டுட்டு இருக்கும்,'' என்று கூறி கிளம்பிச் சென்றார் லட்சமியின் அண்ணன்.

அங்கிருந்த பெஞ்சில் கணவனுடன் அமர்ந்தாள் லட்சுமி. சுற்றிலும், பச்சைப் பசேலென்ற புல்வெளிகள்; அழகழகான, அந்த நாட்டுக் குழந்தைகள், ஊஞ்சலிலும், அங்கிருந்த விளையாட்டு சாதனங்களிலும் ஏறி, விளையாடியபடி இருக்க, இது எதையும், ரசிக்க தோன்றாமல், லட்சுமியின் மனம் அலை பாய்ந்தது.

மறக்கக் கூடிய நிகழ்வா அது! மனமெல்லாம், வேதனையில் தவித்தது.

'கொஞ்ச நாள் எங்களோடு வந்து, அமெரிக்காவில் இருங்க; உங்களுக்கும், ஒரு மாறுதல் தேவை...' என்று, அண்ணன் தான் வற்புறுத்தி, அமெரிக்கா அழைத்து வந்தார். சினிமா, ஷாப்பிங் மால், சான்பிரான்சிஸ்கோ என, எத்தனையோ இடங்களுக்கு அழைத்து சென்றாலும், அடம் பிடிக்கும் குழந்தையாய் மனம் ஏக்கத்தில் தவித்தது.

ஜீன்ஸ் பேன்ட், டீ ஷர்ட் அணிந்து, குழந்தையை தள்ளியபடி வந்தவள், இவர்களை பார்த்து, ஆச்சரியத்தில் கண்கள் விரிய, ''ஆன்ட்டி நீங்களா... வாட் எ சர்ப்ரைஸ்...'' குதூகலத்துடன், அவர்களை நோக்கி வர, யார் என்பது புரிபடாமல், அவளை பார்த்தனர்.

''ஆன்ட்டி... என்னை தெரியலயா.... நான் தான் சுபத்ரா; வினோவுடைய பிரெண்ட்; ஹாஸ்டலில், ஒரே ரூமில் இருந்தோமே... மறந்துட்டீங்களா...''

ஞாபகம் வர, ''அட சுபத்ராவா... நல்லா இருக்கியா, இது உன் குழந்தையா...''என்று குழந்தையின் கன்னம் தொட்டு முத்தமிட்டவள், ''நீ, கலிபோர்னியாவில் தான் இருக்கியா...''என்று கேட்டாள்.

''ஆமா ஆன்ட்டி... வினோதினி, இங்கே தான் இருக்காளா... அஞ்சு வருஷமா, அவளோட, 'டச்'சே இல்லாம போச்சு; இப்ப, உங்கள சந்திச்சது, எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா... வினோ எங்கே இருக்கா ஆன்ட்டி... நான், அவள உடனே பாக்கணும்; அவ, இங்கே தான் இருக்கான்னு தெரியாம போச்சே...'' என்று படபடத்தாள்.

''இல்லம்மா... அவ, ஐதராபாத்தில் இருக்கா; நாங்க, எங்க அண்ணன் வீட்டுக்கு வந்திருக்கோம்.''

''ஓ...'' என்றவள், ''என்னோடு வீட்டுக்கு வந்துட்டு போங்க; பக்கத்தில் தான் வீடு.''

''இருக்கட்டும்மா... எங்களுக்கு, இந்த ஊர்ல சரியா வழி புலப்படல; அண்ணன், 'மீட்டிங்' போனவர், 'பார்க்கில் இருங்க; ரெண்டு மணி நேரத்தில் வந்து, அழைச்சுட்டு போறே'ன்னு சொல்லிட்டு போயிருக்காரு,'' என்றாள்.

''அதனாலென்ன ஆன்ட்டி... என்னோட வாங்க... அரை மணி நேரத்தில், திரும்ப, நானே பத்திரமா இங்கே கொண்டு வந்து விடறேன். உங்கள பாத்ததே, வினோவை பாத்த மாதிரி சந்தோஷமா இருக்கு,'' என்று கூறி, வற்புறுத்தி அழைக்க, மறுக்க இயலாமல் அவளுடன் கிளம்பினர்.

''சூரஜ்... இவங்க யார் தெரியுமா... என் பிரெண்ட் வினோதினியின் பேரன்ட்ஸ்; கலிபோர்னியாவில் இருக்கிற, அவங்க அண்ணன் வீட்டுக்கு வந்திருக்காங்க...'' கணவனிடம் அறிமுகப்படுத்த, ''உங்கள பார்த்தது ரொம்ப சந்தோஷம்... இவ, உங்க மகளப் பத்தி பேசாத நாளில்ல,'' என்று கூறி, வரவேற்று, சோபாவில் உட்கார வைத்தான்.

வீடு, அழகாக, நேர்த்தியாக, அலங்கரிக்கப்பட்டு, படு சுத்தமாக காட்சியளித்தது.

வெள்ளை நிற, 'கார்பெட்' விரிக்கப்பட்டு, கண்ணை கவரும் சிலைகளும், சுவரில் மாட்டப்பட்டிருக்கும், 'பெயின்டிங்ஸ்'சும், கலைநயத்துடன் மிளிர்ந்தது.

''என்ன ஆன்ட்டி பாக்கிறீங்க... என்னோட ஒவ்வொரு கை வண்ணத்திலும், என் தோழி வினோ இருக்கா... இதெல்லாம், அவ, எனக்கு சொல்லி கொடுத்தது... ஹாஸ்டல் ரூமில், என் பொருட்கள், தாறுமாறாக கிடக்கும்போது, 'சுபா... நம்முடைய சுத்தமும், அழகும் தான் மத்தவங்கள, 'இம்ப்ரஸ்' செய்யும்; எதையும் நேர்த்தியாக, ஈடுபாட்டோடு செய்யும் போது, அதன் அழகே தனி; நாலு சாமான்கள் இருந்தாலும், அதை இருக்க வேண்டிய இடத்தில், ஒழுங்கா வைக்கணும்... சோம்பேறித்தனமும், அசட்டையும் பெண்களுக்கு நல்லதில்ல'ன்னு சொல்லுவா... நான், இன்னைக்கு வாழற வாழ்வு, அவ கொடுத்தது; போக வேண்டிய என் உயிரை, தடுத்து நிறுத்தியவ அவ தான்.''

அவள் சொல்லச் சொல்ல, அவளையே பார்த்தபடி இருந்தனர்.

''படிக்கும் காலத்தில் ஒருத்தரை காதலிச்சேன்; அது, 'பெயிலியர்' ஆயிடுச்சு,'' என்ற போது, லட்சுமி, அவள் கணவன் நிற்பதை பார்க்க, ''அவருக்கு எல்லாம் தெரியும்; எதையும் அவர்கிட்ட மறைக்கல... தூக்க மாத்திரை சாப்பிட்டு, உயிரை விட போன என்னை காப்பாற்றிய வினோதினி, 'இது தப்பான முடிவு சுபா... உன்னை, வேணாம்ன்னு ஒதுக்கினவனுக்காக, உயிரை விடறது, முட்டாள்தனம். அவன் முன், நீ வாழ்ந்து காட்டணும்.

'காதல்ங்கிறது அன்பின் சங்கமம்; இவன், நமக்கு ஏத்தவனாக, கடைசி வரை, துணை வருவான்கிற நினைப்போடு, அவன் தோளில் சாய நினைக்கிறோம்... ஆனா, அது தப்புன்னு உணரும் போது, அதுக்காக, மனம் நொந்து போகாமல், உண்மையான அன்பு, பரிவோடு, நமக்கு தோள் கொடுக்கும் ஒரு நல்லவனுக்காக, நாம தயாரா இருக்கணும்.

'உனக்காக ஒருத்தன், நிச்சயம் பிறந்திருப்பான்; அவனோடு, உன் வாழ்க்கை நிறைவா அமையும்; நம்பு சுபா... இப்படி, பத்தாம் பசலித்தனமாக முடிவெடுத்து, அந்த அற்பனுக்காக, விலை மதிக்க முடியாத, உயிரை இழந்துடாதே'ன்னு, அவ சொன்ன வார்த்தைகள், என் மனதில் தெளிவைக் கொடுத்தது; அந்த நிமிஷமே, அவனை மனசிலிருந்து தூக்கியெறிந்தேன்.

''இன்னைக்கு, நான் வாழும் சந்தோஷ வாழ்க்கைக்கு, அடித்தளம் அமைச்சு கொடுத்தவ, வினோ. அவ கொடுத்த தைரியமும், தன்னம்பிக்கையும் தான் என்னை வாழ வச்சிட்டிருக்கு,'' என்றாள்.

அதை ஆமோதிப்பது போல் சூரஜ், ''ஆமாம் ஆன்ட்டி... என் மனைவி சுபா, தன் பிரெண்ட் மேலே, அன்பும், அபிமானமும் வச்சிருக்கா. அவளுக்கு, 'ரோல் மாடலே' வினோதினி தான். உங்க, மகளோட நம்பர் கொடுங்க; திரும்ப அவங்க, நட்பை புதுப்பிக்கட்டும்,'' என்று சொல்ல, ''நம்பர் கொடுங்க ஆன்ட்டி... இப்பவே, அவள போன்ல கூப்பிடறேன்,'' என்றாள், சுபத்ரா.

''எனக்கு, 'நம்பர்' ஞாபகமில்லம்மா; டைரியில் இருக்கு... நீ, உன் நம்பரை கொடு, வீட்டிற்கு போனதும், போன் செய்து சொல்றேன்,'' என்றாள்.

தேனீர் அருந்திய பின், சொன்னபடி, அவர்களை, 'பார்க்'கில் விட்டுச் சென்றாள் சுபத்ரா.

பெஞ்சில் அமர்ந்திருக்கும் மனைவியைப் பார்த்து, ''ஏன் லட்சுமி... சுபத்ராகிட்ட உண்மைய சொல்லியிருக்கலாம்லே...'' என்றார்,

அவளுடைய கணவர்.

''எப்படிங்க சொல்ல முடியும்... நாலு பேருக்கு தைரியம் சொன்னவ என் மக... கணவனின் ஆணவத்துக்கும், அதிகார மிரட்டலுக்கும் பயந்து, அவனோடு குடும்பம் நடத்த முடியாம, கோழையைப் போல் மண்ணெண்ணெய் ஊத்தி, தன்னையே எரிச்சிக்கிட்டு போய் சேர்ந்துட்டான்னு சொல்லவா... வேண்டாங்க.

''சுபத்ரா மனசில், என் மக, 'ரோல் மாடலாக' வாழ்ந்திட்டிருக்கா; அந்த நீங்காத நினைவுகளில், என் மகள், உயிரோடு வாழட்டும்.''

மனம் உடைய, கண் கலங்கி பேசும் மனைவியை, தோளில் சாய்த்து, ஆறுதல்படுத்தினார்.

லாவண்யா பாலாஜி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us