PUBLISHED ON : பிப் 06, 2022

ஒருசமயம், மேனகா காந்தி தங்கி இருந்த ஹோட்டல் அருகே, மதிய சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தோம். ஒரு வழி பாதை மற்றும் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று அறிந்ததும், 'நடந்துடலாம் வாங்க...' என்று, கிளம்பி விட்டார்.அறைக்குத் திரும்பும் வழியில் மளிகை ஸ்டோர் தெரிய, சரசரவென உள்ளே போனவர், இரண்டு குடிநீர் பாட்டில்களை எடுத்து வந்தார்.'இது எதுக்கு மேடம்... அறையில் தண்ணி வச்சிருக்காங்க...' என்றோம்.'தெரியும். அது இலவசமா... எவ்ளோ அது?''வந்து... ஒரு பாட்டில், 240 ரூபா, 'பில்' பண்ணுவாங்க...' என்றதும், 'அதே பாட்டில் இங்கே எவ்ளோ?' என்று சொடுக்கினார்.'இங்கே, 25 ரூபா!' சொல்லி முடிக்கும் முன், '25 ரூபாய்க்கு கிடைக்கும் பொருளுக்கு எதுக்கு, 250 தரணும்... முட்டாள் தனம்...' என்றார்.பிரபலங்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தும்போது, ஒவ்வொரு முறையும் எங்களுக்கு புதுப்புது அனுபவங்கள் கிடைக்கும். வரும் விருந்தினரின் சுபாவம், பழக்க வழக்கம், விருப்பு வெறுப்பு அறிந்து அதற்கேற்றபடி நாம் அவர்களை அணுக வேண்டும்.'பிரன்ட்லைனர்ஸ்' புத்தகத்தின் ஒன்பதாம் பாகத்தை வெளியிட, நடிகர் விக்ரமை அழைக்கலாம் என்று முடிவாயிற்று.பத்திரிகையாளரும், அவரது மேனேஜருமான கிரி மூலம் விக்ரமை அணுக, அந்நியன் படப்பிடிப்பில் இருந்தவரை சந்திக்க, ஒரு தேதி சொல்லியிருந்தனர்.அன்று வண்ணப்பட யோகாவுடன் ஸ்டுடியோவுக்கு சென்ற நேரத்தில், எருமை மாடுகளுக்கு நடுவே கேரவனில் இருந்தார், விக்ரம். அப்போதுதான் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு, டில்லியிலிருந்து கசிந்துக் கொண்டிருந்தது.அவருக்கு மட்டுமில்லை-, எங்களுக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை. முதல் ஆளாக விக்ரமுக்கு வாழ்த்தை தெரிவித்து, 'உங்களுக்கு, குவைத்தில் பாராட்டு விழாவே எடுத்து விடலாம்...' என்றதும், மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார்.ஆனால், அந்நியன் படப்பிடிப்பு நீண்டு கொண்டே போக, தேதி தருவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது.பொதுவாக நிகழ்ச்சிக்கு வருபவர்கள் மூலமே, அந்தந்த ஆண்டு நிதியை அறக்கட்டளைக்கு வழங்க செய்வது எங்கள் வழக்கம். விக்ரமிடமும் அதை தெரிவித்து, 'உங்களுக்கு ஏதும் எதிர்பார்ப்பு உண்டா...' என்று கேட்டேன்.ஒரு வாரத்திற்கு அவரிடமிருந்து எந்த பதிலுமில்லாமல் போகவே குழப்பமாயிற்று. பெரிதாய் எதிர்ப்பார்க்கிறாரோ என்ற ஐயம். 'எதுவானாலும் பரவாயில்லை, மனம் திறங்கள்...' என்றபோது, 'எங்களுக்கு எதிர்பார்ப்பு எதுவுமில்லை. விக்ரமிடமிருந்து உங்களுக்கு எதுவும் எதிர்பார்ப்பு உண்டா...' என்றார், கிரி.எனக்குப் புரியவில்லை. 'இல்லை... அறக்கட்டளைக்கு விக்ரம் மூலம் நிதி என்று சொன்னீர்கள். இவர் ஏற்கனவே பல வகையிலும் உதவி வருகிறார். பாராட்டு விழா மூலம் இவர் ஏதாவது தரவேண்டியிருக்குமா...' என்றார்.ஆஹா... இப்படியும் ஒரு சினிமாக்காரரா... நிஜ வாழ்க்கையிலும் கூட, விக்ரம் அப்பாவி தான் போலிருக்கு. பாராட்டு விழாவிற்கே, பண முடிப்பு அல்லது நகை முடிப்பு என கேட்போர் இடையே இப்படியும் ஒருவர்!'ஐயா சாமி, நிதி உங்கள் மூலம் தருவோம் என்றால், உங்களை தரச் சொல்லவில்லை. எங்கள் நிகழ்ச்சிக்காக நேரம் ஒதுக்கி, எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வருகிறீர்கள்.'உங்கள் விழா மூலம் சேகரிக்கும் நிதியை நீங்களே உரியவர்களுக்கு கொடுத்து, அந்த சந்தோஷத்தை நீங்களும் அனுபவிக்கணும்;-- பயனாளிகள் நேராய் உங்களை வாழ்த்தணும் என்று தான் இந்த ஏற்பாடு...' என்று சொன்னதும், குளிர்ந்து விட்டார், விக்ரம்.அப்புறம் தேதி விஷயத்தில் அவருக்கு தடுமாற்றம்.'அந்நியன் படம் முடியட்டும். அந்த முடி, 'கெட் - அப்' ரகசியமாய் வைக்கப்பட்டிருப்பதால் வெளியே வர இயலாது...' என்றார்.அப்புறம்... டில்லியில் ஜனாதிபதி கையால் அவருக்கு, பிப்., 5, 2005ல் விருது கிடைத்தது; பிப்., 10ல், குவைத்தில் அவருக்கு சுடச் சுட பாராட்டு விழா நடந்தது. அவரது பாராட்டு விழாவிற்கு இயக்குனர் பாலா, எஸ்.பி.முத்துராமனும் வந்திருந்தனர். அப்போது, விக்ரம், பாலா இருவருக்கும் ஒரே ஹோட்டல். அதுவும் பக்கத்து பக்கத்துக்கு அறை வேணும் என்று கேட்டு வாங்கிக் கொண்டனர். விக்ரம், பாலா இருவருமே, 'பர்சேஸ்' மற்றும் டெலிபோன் கட்டணம் என, எல்லாவற்றிற்கும் அவர்களே பணம் செலுத்தினர். உடற்பயிற்சி, 'ஜாகிங், ஜிம்' என்பதில் உறுதியாய் இருந்தார், விக்ரம்.பாராட்டு விழா அரங்கு நிறைந்து அமர்க்களமாய் நடந்தது. மறுநாள் பாலைவனம் மற்றும் ஒட்டகப் பண்ணைக்கு அழைத்துச் செல்ல, அவர்கள் மனம் மகிழ்ந்து ரசித்து அனுபவித்தனர். அதிலும் விக்ரம், ரொம்ப அன்யோன்யமாய் ஒட்டகத்தை கட்டிக் கொண்டார். விக்ரமின் அந்த நிகழ்ச்சி மூலம் சுனாமி நிவாரணத்துக்காக, இந்தியா - இலங்கைக்கு நல்லதொரு தொகை அனுப்ப முடிந்தது. அதோடு வழக்கமான படிப்பு, மருத்துவ உதவிகளுக்கான நிதியை விக்ரமின் மூலமே வழங்க, எங்களது சென்னை ஒருங்கிணைப்பாளரான, ரவி தமிழ்வாணன் ஏற்பாடு செய்திருந்தார்.குறிப்பிட்ட அந்த தினத்தன்று, 'நான் அங்கு வரலை. நீங்களே வினியோகம் பண்ணிடுங்க...' என்று அதிர்ச்சி தகவல் அளித்தார்.'பப்ளிசிட்டி'க்காக விக்ரம் அலைவதாக யாரும் பேசி விடக் கூடாது என்ற முன் எச்சரிக்கையால், அப்படி செய்தாக தெரிந்தது. அவர் வராவிட்டாலும், 'துார்தர்ஷன்' முன்னாள் இயக்குனர், நடராஜன், அவ்வை நடராஜன், ரவி தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன், எம்.எஸ்.உதயமூர்த்தி, கே.ஆர்., பொன்னடியான் போன்றவர்கள் மூலம் பயனாளிகளுக்கு நிதி வினியோகிக்கப்பட்டது.இத்தனை வளர்ந்த பின்பும்கூட எந்த விதத்திலும் தன் பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது; தன்னை யாரும் தப்பாக பேசி விடக் கூடாது என்று மிகுந்த எச்சரிக்கையாய் இருக்கிறார், விக்ரம்.இதெல்லாம் போகட்டும்... விக்ரம், குவைத் போலீசிடம் மாட்டின கதை தெரியுமா உங்களுக்கு?— தொடரும்என். சி. மோகன்தாஸ்
