
அன்பு சகோதரிக்கு —
நான், 46 வயது பெண். டுடோரியல் கல்லுாரி நடத்தி வருகிறார், கணவர். எங்களுக்கு இரு மகன்கள். இருவரும் படித்து முடித்து, வெவ்வேறு மாநிலங்களில் நல்ல வேலையில் இருக்கின்றனர். மூத்த மகனுக்கு திருமணமாகி விட்டது. இரண்டாவது மகனுக்கு பெண் பார்த்து வருகிறோம்.
எங்களது திருமணம், பெற்றோர் பார்த்து நடத்தி வைத்தது தான். கூட்டுக் குடும்பமாக தான் முதலில் இருந்தோம். கணவருடன் கூட பிறந்தவர்கள், இரு அண்ணன்கள், ஒரு அக்கா மற்றும் ஒரு தங்கை.
அண்ணன்கள் இருவரும், நன்கு படித்தவர்கள். மூத்தவன், கல்லுாரி பேராசிரியராகவும், இளையவன், வங்கி பணியிலும் இருக்கின்றனர். ஒரு அக்கா, பள்ளி ஒன்றில், கணித ஆசிரியை. தங்கை, அரசு பணியில் உள்ளார். அனைவருக்கும் திருமணமாகி, நல்ல வசதியுடன் இருக்கின்றனர்.
ஆரம்பத்தில், கணவர், எம்.ஏ., படித்திருந்தும், சரியான வேலை அமையவில்லை. அண்ணன்கள் உயர் பதவியில் இருப்பதால், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, வேலை வாங்கி விடலாம் என்று நினைத்திருக்கிறார். ஆனால், அது நடக்கவில்லை. இதற்கிடையில், நல்ல வரன் என்று, எங்கள் வீட்டில், என்னை திருமணம் செய்து வைத்தனர்.
முதலில், அனைவரும் கூட்டுக் குடும்பமாக தான் இருந்தோம். அப்பா மற்றும் அண்ணன்கள் தயவில் வாழ வேண்டியுள்ளதே என்று மிகவும் வருந்துவார், கணவர். அவருக்கு ஊக்கமளித்து, மேற்கொண்டு எம்.பில்., படிக்க கூறினேன். அவரும் ஆர்வமாக, பல்கலை கழகம் ஒன்றில் சேர்ந்து, படிக்க ஆரம்பித்தார்.
இதற்கிடையில், எங்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தனர். பகல் முழுவதும் வீட்டு வேலை என்று இருப்பேன். இரவு அவர், படிக்க வேண்டும் என்பதற்காக, டீ போட்டு கொடுத்து, நோட்ஸ் எழுதிக் கொடுப்பேன்.
கணவரும் பொறுப்பு உணர்ந்து, நன்கு படித்து, எம்.பில்., மற்றும் பி.எச்டி., முடித்தார். வெளி மாநில கல்லுாரி ஒன்றில் வேலை கிடைத்து, அங்கு சிறிது காலம் பணிபுரிந்தார்.
இந்நிலையில், மாமியார், மாமனார் அடுத்தடுத்து இறந்து விட, கூட்டுக் குடும்பம் பிரிந்து, தனித்தனியாக சென்று விட்டனர். இருந்த வீட்டை, மூத்தவர் எடுத்துக் கொண்டார்.
நான் பெற்றோர் வீட்டில் இருந்தபடி, பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தேன்.
'இருவரும் பிரிந்து இருக்க வேண்டாம். இதே ஊரில் வாடகைக்கு வேறு வீடு பார்த்து, சொந்த தொழில் செய்யலாமே...' என்று, யோசனை கூறினார், அப்பா.
கணவரும் அதை ஏற்று, சொந்த ஊருக்கு வந்து, டுடோரியல் கல்லுாரி ஆரம்பித்து, கடுமையாக உழைத்தார், வாழ்வில் உயர்ந்தார்.
இப்போது, பிரச்னை என்னவென்றால், இதுவரை, எங்களை ஒதுக்கி வைத்த அவரது உடன்பிறப்புகள், வலிய வந்து உறவு கொண்டாடி, என்னிடமிருந்து அவரை பிரிக்க சூழ்ச்சி செய்கின்றனர். கணவரது தங்கை மகளை, என் இளைய மகனுக்கு திருமணம் செய்து வைக்கவும் முயல்கின்றனர்.
பழசை எல்லாம் மறந்து, அவர்களுடன் உறவாடி வருகிறார், கணவர். என்னை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. தன்னுடன் வந்துவிடும்படி என்னை அழைக்கிறான், மூத்த மகன். நான் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் தவிக்கிறேன். எனக்கு ஒரு நல்ல யோசனை தாருங்கள், சகோதரி.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
பிரம்மபிரயத்தனம் செய்து கணவரை, கல்வியிலும், பொருளாதார நிலையிலும் உயர்த்தி, வெற்றி பெற்றுள்ளாய். வாழ்த்துகள்!
கணவரை குறைவாக மதிப்பிடாதே. பூர்வீக வீட்டை சமமாய் பங்கு பிரிக்காமல் தனக்கு எடுத்துக் கொண்ட அண்ணனின் சுயநலம், கணவருக்கு தெரியாதா? தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி அண்ணன்கள், வேலை வாங்கிக் கொடுக்காதது, கணவர் அறியாதவரா!
வேலை வெட்டி இல்லாமல் கூட்டுக்குடும்பத்தில் செல்லாக்காசாய் அவமானப்பட்டதை, எளிதில் மறந்து விடுவாரா, கணவர்?
உலகில் உள்ள எல்லா உறவு முறைகளும், சுயநலத்தால் பின்னப்பட்டவையே. பணமிருந்தால், சொந்த பந்தங்கள் கூட்டமாய் வந்து கும்மி அடிப்பர். பணமில்லா விட்டால், அற்ற குளத்தில் அறுநீர் பறவை போல ஓடி ஒளிந்து விடுவர்.
உறவுகளில் சுயநலம் ஜவ்வூடு பரவல் செய்வதால் அதை அறுத்து விட்டு, நாம் தனி மரமாக வாழ முடியுமா?
உன் பயம் அர்த்தமற்றது. இத்தனை ஆண்டுகளுக்கு பின், கணவரிடமிருந்து, உன்னை பிரிப்பதால் அவர்களுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது?
கணவருடன் அவர்களை சேர விடாமல், நீ எதாவது பண்ணுவாயோ என்று வேண்டுமானால் அவர்கள் பதற்றப்படுவர். அவர்கள், உன் வீட்டுக்கு வந்தால், நன்கு விருந்து உபசரி. தேவையற்றவைகளை கணவரோ, அவர்களோ பேசாமல் இருக்க, நீ கவனமாய் பார்த்துக் கொள்.
முதலில், கணவரின் தங்கை மகளை விரும்புகிறானா என, இளைய மகனிடம் விசாரி. கணவரின் தங்கை மகள் என்ன படித்திருக்கிறாள், வயது என்ன, அவளது குணாதிசயம் எப்படி, திருமணம் செய்து வைத்தால் உன்னுடன் இணக்கமாக நடந்து கொள்வாளா...
கணவரின் அபிப்ராயம் என்ன, உன் பெற்றோர் உயிருடன் இருந்தால், கணவரின் தங்கை மகள் பற்றி என்ன அபிப்ராயப்படுகின்றனர், எடுத்தேன் கவிழ்த்தேன் என, முடிவு எடுக்காமல், தீர்க்கமாக ஆழமாக அலசி ஆராய்ந்து, ஒரு முடிவு எடு. மூத்த மகன், என்ன சொல்கிறான் என்றும் பார்.
கணவரின் தங்கை மகள், மகனுக்கோ, குடும்பத்துக்கோ பொருந்தி வர மாட்டாள் என்பது உறுதியானால், கணவர் வீட்டாரிடம் பொட்டென்று போட்டு உடைத்து விடாதே.
வெளி வரன்களை தீவிரமாக பார்க்கத் துவங்கு. உறவுக்காரர்களின் கொஞ்சலில் கொஞ்சமேனும் கணவர் மதிமயங்கி போயிருந்தால், பேசி, யதார்த்தத்துக்கு வரவழை.
நீ வெளியில் வரன் பார்க்கும் விஷயம், கணவர் வீட்டாருக்கு தெரிந்து, அவர்கள் கேட்டால், 'பையன், அவளை தங்கச்சி மாதிரி பாவிக்கிறான். பொண்ணு வெளியிலயே பாருங்கன்னு சொல்லி விட்டான். பொண்ணு எடுத்தா தான் உறவு தொடருமா என்ன? உறவு எப்போதும் போலவே சீராய் பலப்படும்...' எனக்கூறி, நடி.
உறவுகளை கையாளும்போது, கொஞ்சம் நடிப்பதில் தவறல்ல.
மூத்த மகனிடம் போக வேண்டாம், கணவருடனேயே இரு. உனக்கு நான், எனக்கு நீ என, நீயும் கணவரும் வாழ்வீராக!
— என்றென்றும் பாசத்துடன்,சகுந்தலா கோபிநாத்.