PUBLISHED ON : ஜூலை 28, 2024

ராஜராஜ சோழன் படத்தில், சிவாஜிக்கு ஜோடியாக நடிக்க, எஸ்.வரலட்சுமியை கேட்டபோது, ஒரு நிபந்தனை விதித்தார்.
'என்ன நிபந்தனை...' என்றார், ஏ.பி.என்.,
'வேறு ஒன்றுமில்லை எனக்கு, படத்தில் கட்டாயம் பாடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வேண்டும்...' என்றார், எஸ்.வரலட்சுமி.
எஸ்.வரலட்சுமி இப்படி கேட்டதும் உடனே, சம்மதித்து விட்டார், ஏ.பி.என்.,
அப்படி, ராஜராஜ சோழன்-படப்பிடிப்பில், பூவை செங்குட்டுவன் எழுதி, வரலட்சுமியால் பாடப்பட்டது, 'ஏடு தந்தானடி தில்லையிலே - அதைப் பாட வந்தேன் அவன் எல்லையிலே...' என்ற பாடல்.
ராஜராஜ சோழன் படத்தில், ராஜராஜ சோழனின் முன்மாதிரி உருவம் தேவைப்பட்டது. முன்மாதிரியாக எதை வைத்து வரையலாம் என்று, நாகராஜன் ஆழ்ந்த யோசனையில் இருந்தார்.
அப்போது, தஞ்சாவூரில், மாமன்னர் ராஜராஜன் கட்டிய கோவிலில் உள்ள சுரங்கத்தில், ராஜராஜன் அவரது குருவுடன் நிற்பது போன்ற ஓவியம் இருப்பதாக கேள்விப்பட்டார். உடனே, புயல் வேகத்தில் செயல்பட்டார், ஏ.பி.என்.,
அறநிலைத்துறையை தொடர்பு கொண்டு அனுமதி வாங்கி, தஞ்சாவூருக்கு புறப்பட்டார். தன்னுடன் கலை இயக்குனர் கங்காவையும் அழைத்துச் சென்றார்.
'டார்ச் லைட்' கூட அனுமதிக்காமல், அகல் விளக்குடன் சென்று, அப்படத்தை பார்வையிட்டனர். அதன்பின், சிறப்பு அனுமதி பெற்று, தாள், எழுதுகோல், துாரிகை, வண்ணங்கள் போன்ற எழுது பொருட்களை எடுத்துச் சென்று, அந்த உருவத்தை பார்த்து வரைந்து வந்தனர். அதன்படியே, சிவாஜிக்கு ராஜராஜசோழன் ஒப்பனை செய்யப்பட்டது.
ஏ.பி.நாகராஜன் இயக்கத்திலும், தயாரிப்பிலும் உருவான இன்னொரு படம், மேல் நாட்டு மருமகள். இப்படத்தில் குறிப்பிடத்தக்கது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி, தமிழ் பேசி, தமிழ் கலாசாரத்தை பின்பற்றுவது போல் காட்டியிருப்பது தான்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து, நம் தமிழ் பண்பாட்டை விரும்பி, அதன்படி வாழ வேண்டுமென்று, தமிழகம் வந்த பெண்ணே, படத்திலும் நடித்தார். அதில் அவர், ஒரு பாட்டு பாடுவது போல் காட்சி. அப்பாடலை, பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், தன் உயிர்ப்பான குரலில் பாடியிருந்தார்.
'முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்...' என்பதே அது.
பொதுவாக, ஏ.பி.என்., படத்தில், பக்தி மற்றும் கலாசாரம் என்ற வட்டத்திற்குள்ளேயே இருக்கும். ஆனால், இப்படத்தில் தமிழ்ப்பண்பாட்டின் சிறப்புகளை எடுத்துரைத்து இருப்பது பெருமைக்குரியது.
சிவாஜியை நடிக்க வைத்து, ஆசை தீர பல படங்களை தயாரித்த, ஏ.பி.என்., எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஒரு படம் தயாரித்தார். அது, நவரத்தினம்.
நவராத்திரி படத்தை அப்படியே தலைகீழாக மாற்றி எடுக்கப்பட்டதே, நவரத்தினம் எனலாம்.
நவராத்திரி படத்தில் கதாநாயகி வீட்டை விட்டு ஓடி, ஒன்பது இரவுகளில், ஒன்பது ஆண் மக்களை சந்திக்கிறாள். நவரத்தினம் படத்தில், கதாநாயகன் வீட்டை விட்டு ஓடி, ஒன்பது இரவுகளில், ஒன்பது பெண்களை சந்திப்பதே, கதை.
இப்படம் எடுத்த அனுபவத்தையும், சிவாஜியை வைத்து படம் எடுத்த அனுபவத்தையும் ஒப்பிட்டு பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு, 'நான் நடிகர் திலகத்தை வைத்து பல படமெடுத்தேன். மக்கள் திலகத்தை வைத்துப் பணமெடுத்தேன்...' என்று ரத்தின சுருக்கமான சொன்னார், நாகராஜன்.
இயக்குனர் ஏ.பி.என்., இறுதியாக இயக்கியது, ஸ்ரீ கிருஷ்ணலீலா படம். படத்தின் கதாநாயகன் சிவகுமார். பாமா, ருக்மணியாக ஜெயலலிதாவும், ஸ்ரீவித்யாவும் நடித்திருந்தனர்.
நாரதர் கலகம் தான் படத்தில் முக்கியம். அவர் பாமாவுக்கும், ருக்மணிக்கும் இடையே கிருஷ்ணனை மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பது போன்று கதை அமைந்திருக்கும்.
பாரிஜாத மலரை எடுத்து வந்து கிருஷ்ணனிடம் கொடுத்து, 'உனக்கு பிடித்தவருக்கு கொடு...' என்று கலகத்தை துவக்குவார், நாரதர். கிருஷ்ணர் அதை ருக்மணிக்கு கொடுக்கவே, பாமாவிடம், 'பார்த்தாயா, பாரிஜாத மலரை உனக்கு கொடுக்காமல், ருக்மணிக்கு கொடுக்கிறார்...' என்று கலகம் மூட்டுவார்.
உடனே, கிருஷ்ணர், பாமாவுக்கு பாரிஜாத மரத்தையே உண்டு பண்ணி கொடுப்பார். பாரிஜாத மரம் பாமா வீட்டில் உள்ளது. ஆனால், பூக்கள் ருக்மணி வீட்டில் வந்து விழுகிறது. இப்படியாக கலகம் தொடர, கிருஷ்ணர் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி எழுகிறது.
முடிவில், துலாபாரம் மூலம் கிருஷ்ணனின் எடைக்கு எடை பொருள் கொடுத்து, அவரை விலைக்கு வாங்க முயற்சிக்கிறாள், பாமா. ஆனால், கிருஷ்ணனை பொருளை கொடுத்து வாங்க முடியாது என்பதுடன், துளசியைத் தட்டில் வைத்து, 'கிருஷ்ணார்ப்பணம்' என்று சொல்லி அன்பால் ஆட்கொள்கிறாள், ருக்மணி.
இதனிடையே குசேலருக்கும், அவர் மனைவி சுசீலைக்கும் கிருஷ்ணர் விஸ்வரூப தரிசனம் கொடுக்கும் கதையும் இணைகிறது. இப்படம் 1972ல் ஆரம்பிக்கப்பட்டு, தயாரிப்பாளரின் நிதி நெருக்கடியால் தாமதமாகி, 1977ல் முடிந்தது. இதற்கிடையில், ஏ.பி.என்., காலமாகி விட்டார்.
எத்த துறையிலும், அதில் சிறப்புப் பெற்றவர்களின் வாழ்க்கையை ஊன்றிப் படித்தால், அவர்களின் கடுமையான உழைப்பும், தனித்திறமையும், தனிப்பாணியுமே அதற்கு காரணமாக இருக்கும். அவர்கள் கடந்து வந்த பாதையும் கரடு முரடாகத்தான் இருக்கும்.
சிறுவயதிலேயே நாடக நடிகனாகி, தானே படித்து, தன்னை அறிவாளியாக்கிக் கொண்டவர், ஏ.பி.என்., சொந்தமாக நாடகமெழுதி, திரைக்கதை ஆசிரியராகி, உதவி ஒளிப்பதிவாளராகி, இயக்குனராகி சொந்தமாக படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளரும் ஆனார்.
தமிழ் திரையுலகில் விரல் விட்டு எண்ணக் கூடிய இயக்குனர்களில் ஒருவரானார். மிக உயர்ந்த நிலைக்கு உயர்ந்து, புராணப் படங்களுக்கு புதிய பாதையையும் வகுத்துக் கொடுத்தார். அவர் பெயர் தமிழ் திரையுலகம் உள்ள மட்டும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை...
இவரது பிள்ளைகள் எவரும், திரைப்படத் தொழிலில் ஈடுபடவில்லை. இரு மகன்களில் வேங்கடசாமி இறந்துவிட்டார்.
இன்னொரு மகனுக்கு, தன் அப்பாவின் பெயரான பரமசிவம் என்ற பெயரையே சூட்டி மகிழ்ந்தார், ஏ.பி.என்., அவர், ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு, பெரிய தொழிலதிபர் ஆகிவிட்டார்.
உலக அளவில் தொண்டு செய்யும், 'ஸ்மைல்' என்ற நிறுவனத்துடன் தன்னை இணைத்தும் தொண்டாற்றி வருகிறார். உலகில் இவர், கால் படாத நாடுகள் இல்லை. இவர், இந்தியாவில் இருப்பதே ஆண்டில் சில வாரங்கள்தானாம்.
அதே போன்று, அவரது மகள் விஜயலட்சுமி, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின், இளைய மகன் முரளி என்பவரை மணந்து சீரும், சிறப்புமாக வாழ்ந்து வருகிறார்.
— முற்றும்
நன்றி: அல்லயன்ஸ் கம்பெனி.
படத்தில், இரண்டு கதாநாயகர்கள். ஒருவர் சிவகுமார், மற்றொருவர் கமலஹாசன். சிவகுமாருக்கு இணையாக நடித்தவர் தான், பிரான்சு தேசத்தைச் சேர்ந்த பெண்மணி லாரன்ஸ். அவருக்கு தமிழ் வசனத்தை பிரெஞ்சு மொழியில் வார்த்தைகளாக எழுதச் சொல்லி, பயிற்சி அளித்தவர், சிவகுமார்.அந்த பெண்மணியும் முயற்சியுடன் கற்று, தமிழை நன்கு பேசினார். அதனால், அப்பாத்திரம் சிறப்பாக அமைந்து, அனைவராலும் பேசப்பட்டது.
- கார்த்திகேயன்

