
அன்புள்ள அம்மாவுக்கு —
வயது: 36. கணவர் வயது: 38. நான், பி.காம்., பட்டதாரி. பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் எங்களது. எங்களுக்கு, ஒரே மகன். பள்ளியில் படிக்கிறான்.
ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர், கணவர். மொத்தமாக பழ வியாபாரம் செய்து வருகிறார். மாமனார் - மாமியார் எங்களுடன் தான் வசிக்கின்றனர்.
காலை, 6:00 மணிக்கு லாரியில் வரும் பழ லோடுகளை இறக்கி, சில்லரை வியாபாரிகளுக்கு வினியோகித்து, 11:00 மணி அளவில் வீட்டுக்கு வருவார், கணவர். குளித்து சாப்பிட்டு விட்டு, மீண்டும் மண்டிக்கு சென்று விடுவார்.
மதிய உணவுக்காக, 3:00 மணிக்கு வருவார். மீண்டும் மாலை, 4:00 மணிக்கு சென்றால், கணக்கு வழக்குகள் எல்லாம் பார்த்து, இரவு, 10:00 மணிக்கு வந்து, சாப்பிட்டு துாங்கி விடுவார். என்றைக்காவது வீட்டில் இருந்தால், மகனுடன் சிறிது நேரம் கொஞ்சி பேசுவார், அவ்வளவே.
இப்படியே மிஷின் மாதிரி ஓடிக்கொண்டிருக்கிறார். என்னுடன் மனம் விட்டு பேச மாட்டாரா, பிறந்த நாள், திருமண நாள் அன்று, எனக்கு ஏதாவது பரிசு கொடுக்க மாட்டாரா என்று, மனது ஏங்கும். நாங்கள் வெளியே சென்று, பல ஆண்டுகள் ஆகின்றன.
கணக்குகளை நான் பார்த்து தருவதாக கூறினாலும், மறுத்து விடுவார். இரண்டு நாள், எங்காவது வெளியூர் சென்று வாருங்கள் என்று, மாமனார் கூறினாலும், 'வேலை கெட்டுடும்...' என்று கூறி, மறுத்து விடுவார்.
சாப்பாடும், பணம் மட்டும் தான் வாழ்க்கையா? எங்கள் வீட்டுக்கு எதிரில், ஏழ்மையான ஒரு குடும்பம் உள்ளது. கணவன் - மனைவி, இரண்டு குழந்தைகள் இருப்பர். மாலை நேரமானதும், வீட்டுக்கு வெளியே, கட்டிலில் அமர்ந்து, குழந்தைகளுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பர்.
இந்த அந்நியோன்யம் எதுவும் நமக்கு இல்லையே என்று ஏக்கம் வரும். சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார். 'இப்போது சம்பாதித்தால் தான் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்...' என்பார்.
'வயசு காலத்தில் வாழாத வாழ்க்கையை பிற்காலத்தில் வாழ முடியுமா?' என்று கேட்க தோன்றும். ஏதோ நான் தான் அலைவதாக நினைத்துக் கொள்வாரோ என்று தயக்கம் வந்து விடும்.
மனைவியும் ஒரு மனுஷி தான். அவளுக்கும் ஆசாபாசங்கள் உள்ளதை, இந்த மாதிரியான ஜடத்துக்கு எப்படி புரிய வைப்பது என, தெரியவில்லை. நல்ல வழி சொல்லுங்கள், அம்மா!
— இப்படிக்கு, உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
கணவர் எனும் ஜடம், பழமண்டி வேலையை விட்டு விட்டு, ஒரு ஆண்டின் எல்லா நாட்களும் உன் கூடவே இருக்கிறார் என, வைத்துக் கொள்வோம். இரவில், மொட்டை மாடியில் கயிற்றுக்கட்டில் போட்டு உன்னுடன், 'நிலா காயுதே நேரம் நல்ல நேரம்' பாடச் சொல்வோம்.
ஒவ்வொரு நாளும் எதாவது காரணம் கூறி, உனக்கு பரிசுகள் கொடுக்கச் சொல்வோம். விளைவு என்னவாகும்? வியாபாரம் பாதிக்கும், வருமானம் நின்று போகும். பழமண்டி வியாபாரத்தை பக்கத்து மண்டிகாரன் கைப்பற்றி விடுவான். அப்போது, நீ என்ன சொல்வாய்?
'சம்பாதிக்க தெரியாத சோம்பேறி, பொண்டாட்டி புடவையை பிடிச்சுக்கிட்டே சுத்துது...' என்பாய். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை, நினைவில் கொள் மகளே!
உனக்கு சில உபாயங்கள் சொல்கிறேன், அதன்படி செய்.
* காலையில், 15 நிமிடம் மாலையில், 15 நிமிடம், கணவருடன் வீடியோகால் போட்டு பேசு. அவர் முகத்தை தினம் அரைமணி நேரம் பக்கத்தில் பார்த்த திருப்தி கிடைக்கும்.
* இரண்டு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக் கொண்டு, தினம் ஒரு மணி நேரம் பழமண்டியில் போய் உட்கார்; கணவர் தடுத்தாலும் போ.
* வாரத்தில் ஒரு சனிக்கிழமை இரவில், நீயும், கணவரும் இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு போங்கள். ஞாயிறு மதியம், பழமண்டிக்கு கட்டாயம் விடுமுறை விடச் சொல்லி, அரை நாள் எங்காவது சென்று வாருங்கள்.
* கணவர் தடுத்தாலும் பழமண்டி கணக்கு வழக்கை நீயே பார்.
* கணவரை பற்றி யாரிடமும் குறை சொல்லாதே. அதை பிடித்துக் கொண்டு உறவினர் கூட்டம் குறுக்குசால் ஓட்டும்.
* தினசரி சமையலின் தரத்தையும், சுவையையும் கூட்டு. வாரா வாரம் வெள்ளிக்கிழமை எதாவது ஒரு பாயசம் செய்து பரிமாறு.
* உன் எல்லா சந்தோஷங்களும், பழமண்டியின் வியாபாரத்தை துளியும் கெடுக்கா வண்ணம் அமையட்டும்.
* மாமனார் - மாமியாருடனான தகவல் தொடர்பை மேம்படுத்து.
* கிடைத்ததில் திருப்தி படு. தினமும் வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே படுத்திருக்கும் புருஷர்களில் ஒருவர், உனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக, சந்தோஷப்படு.
* மகனுடன் அதிக நேரத்தை செலவழி.
* உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விசேஷங்களுக்கு, நீயும், கணவரும் ஜோடியாக சென்று வாருங்கள்.
— -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.