sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : செப் 08, 2024

Google News

PUBLISHED ON : செப் 08, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 22 வயது பெண். கிராமத்தில், விவசாய கூலிகளாக உள்ளனர், பெற்றோர். நான், பி.இ., படித்து, சென்னையில், ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்துள்ளேன். எனக்கு ஒரு அக்கா; உள்ளூர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக உள்ளார்.

நான், சென்னையில் ஹாஸ்டலில் தங்கியுள்ளேன். வயதான பெற்றோரை, ஓரளவுக்கு வசதியாக வாழ வைக்கவும், அக்காவின் திருமணத்துக்கு என்னால் முடிந்த பண உதவி செய்யவும் நினைத்துள்ளேன்.

மிகவும் இரக்க சுபாவம் கொண்ட நான், அதிர்ந்து கூட பேச மாட்டேன். யாராவது இருவர் சண்டை போட்டால் கூட, அந்த இடத்தை விட்டு அகன்று விடுவேன்.

ஹாஸ்டலில், என்னுடன் தங்கியிருக்கும் பெண்ணும், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியில் இருக்கிறாள். அவளும் மிகவும் சாதுவாகதான் இருப்பாள். இருவர் குணமும் ஒத்துப்போனதால், தோழிகள் ஆனோம்.

சமீபத்தில், ஊரில் உள்ள அவள் அம்மாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட, மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

செலவுக்காக என்னிடம் கடனாக, பணம் கேட்டாள், தோழி. அச்சமயம் என்னிடம் பணம் இல்லாததால், மோதிரத்தை கழற்றி கொடுத்தேன். அவள் அம்மா ஓரளவு உடல்நலம் தேறி, வீட்டிற்கு திரும்பினார். தோழியும், வழக்கம் போல், வேலைக்கு சென்று வந்தாள்.

பலமுறை என் மோதிரத்தை திருப்பி கேட்டும், பதில் சொல்லவில்லை.

'அடகு வைத்திருந்தால் சொல், நானே மீட்டுக் கொள்கிறேன் அல்லது விற்றிருந்தால், அதற்குரிய பணத்தையாவது திருப்பிக் கொடு...' என்று கேட்டேன்.

இதோ, அதோ என, காலம் கடத்துகிறாளே தவிர, எனக்குரிய பொருள் திரும்ப கிடைக்கவில்லை.

என் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பிளஸ் 2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றதற்காக, அந்த மோதிரத்தை கஷ்டப்பட்டு வாங்கித் தந்திருந்தனர், பெற்றோர்.

அவளிடமிருந்து எப்படி என் மோதிரத்தை வாங்குவது என்று புரியவில்லை. இதனால், எங்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுகிறேன்.

தங்களது ஆலோசனையை எதிர்பார்க்கிறேன், அம்மா.

— இப்படிக்கு,உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —

நீ பன்னாட்டு நிறுவனப் பணியில் சேர்ந்து ஒரு ஆண்டு ஆகும் என, யூகிக்கிறேன். உன் மாத சம்பளம், 25 -- 30 ஆயிரத்துக்குள் இருக்கும் என, கணிக்கிறேன்.

உன் பெற்றோருக்கு மாதா மாதம் ஒரு தொகை அனுப்புகிறாயா... உன் அக்கா திருமணத்துக்கு வங்கியில் மாதாந்திர வைப்புத்தொகை கட்டி வருகிறாயா... இந்த ஒரு ஆண்டில் உன் தனி சேமிப்பு என்ன?

இந்த ஒரு ஆண்டில் நீ குறைந்தபட்சம், ஒரு லட்சம் ரூபாயாவது கையில் வைத்திருக்க வேண்டும். நீ எந்த பணமும் சேமித்து வைக்கவில்லை என்றால், அம்மாவுக்கு அதை செய்வேன், அக்காவுக்கு இதை செய்வேன் என, கற்பனையில் கோட்டை கட்டுவதாக அர்த்தம்.

கடிதத்தில் உன்னை பற்றி பெருமையாய், சில பல குணாதிசயங்களை கூறியுள்ளாய். அவற்றை சுய தம்பட்டமாக கருதி, புறம் தள்ளுகிறேன்.

உன்னுடன் தங்கியிருக்கும் பெண், மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவாள் என, நினைக்கிறேன்.

உன் கடிதப்படி பார்த்தால், அவள் எல்லாரிடமும் கடன் வாங்கி செலவு செய்யும் ஊதாரி அல்ல என்பது தெள்ளத் தெளிவாகிறது.

உன் மோதிரம் அரை பவுனிலிருந்து, அதிகபட்சம் ஒரு பவுன் இருக்கக் கூடும். உன் மோதிரத்தை தோழி, அடகு வைத்திருக்க மாட்டாள்; விற்றிருப்பாள். 30 - - 35 ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்கும்.

அம்மாவுக்கான மருத்துவ செலவை அந்த பணத்தில் செய்திருப்பாள். இன்னுமே அம்மாவுக்கு உன் தோழி மருத்துவ செலவு செய்து கொண்டிருப்பாள். இந்த இக்கட்டான தருணத்தில், மோதிரத்துக்கான பணத்தை எப்படி திருப்பித் தருவாள், தோழி?

அடகு வைக்க கொடுத்த மோதிரத்தை, தோழி விற்றது தப்பு தான். விற்று, தாய்க்கு செலவு செய்ததால், அவளை மன்னிக்கலாம்.

உன் தோழி கடன் கேட்கும் போது, நீ மோதிரத்தை கழற்றிக் கொடுக்காமல், 5,000 ரூபாய் வரை புரட்டி, திருப்பி தர வேண்டாம் என கூறி, கொடுத்து ஒதுங்கியிருக்க வேண்டும்.

அடுத்து நீ செய்ய வேண்டியது என்ன?

தோழியிடம் மனம் விட்டு பேசு. உன் மோதிரத்தை என்ன விலைக்கு விற்றிருக்கிறாள் என்பதை தெரிந்து கொள். மாதம், 2,000 வீதம், 15 மாதங்களில் திருப்பி செலுத்துகிறாளா என கேள்.

மோதிரத்தை கடனாய் வாங்கும்போது, திருப்பி தரும் எண்ணத்துடன் தோழி வாங்கி இருக்கிறாளா என ஆராய். தோழியின் தற்சமய நிதி நிலைமையை உளவறி.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தோழிக்கு மோதிரத்தை கடனாய் கொடுத்ததை, உன் பெற்றோரிடம் போட்டு உடைத்து விடு. நான் ஒரு யோசனை கூறுகிறேன், கோபித்துக் கொள்ளாதே.

'மோதிரத்துக்கான பணத்தை உன்னால் எப்போது கொடுக்க முடிகிறதோ அப்போது கொடு. நீயாக கொடுக்கும் வரை, நான் இனி ஒரு வார்த்தை மோதிரத்தை பற்றி கேட்க மாட்டேன். மோதிர பணத்தை நீ கொடுக்க முடியாத நிலை தொடர்ந்தால், உன் அம்மா சிகிச்சைக்கு கொடுத்த தர்மமாக நினைத்துக் கொள்கிறேன்.

'நீ மோதிர பணத்தை திருப்பி தர வேண்டாம், ரத்து செய்கிறேன். நான் ஒரு விவசாயக் கூலிகளின் மகள். பொருளாதார நிலையில் ஏறக்குறைய நீயும், நானும் ஒன்று தான். இனி, என்னிடம் கடன் கேட்டு என்னை துன்புறுத்தாதே...' எனக் கூறு.

அறையை காலி செய்து, வேறு அறைக்கு வாடகைக்கு போ. சம்பளத்தில் மாதாந்திர செலவு போக மீதியை மூன்றாக பிரி. ஒரு பங்கு, உனக்கு, ஒரு பங்கு, பெற்றோருக்கு, மூன்றாவது பங்கு, உன் அக்காவுக்கு.

பகுதி நேர படிப்பு படித்து, கல்வித்தகுதியை உயர்த்து. கூடுதல் சம்பளம் பெறுவதற்கான வழி வகைகளை செய். மோதிரத்தை கழற்றிக் கொடுத்து, ஒரு தாயின் உயிரை காப்பாற்றி விட்டோம் என பெருமிதம் கொள்; புலம்பாதே.

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us