
அன்புள்ள அம்மா —
என் வயது: 34. கணவர் வயது: 38; தனியார் நிறுவன ஊழியர். எனக்கு ஒரு மகன். பள்ளியில் படிக்கிறான்.
சிறுவயது முதலே பள்ளி ஆசிரியையாக ஆக வேண்டும் என்பது லட்சியம். என் விருப்பப்படி பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். மாணவர்களுக்கு படிப்பையும், பண்பையும் ஊட்டி, அனைவரின் அபிமானத்தையும் பெற்றுள்ளேன்.
பள்ளியில் எனக்கென தனி மதிப்பும், மரியாதையும் உள்ளது. இவை அனைத்துக்கும், பள்ளி ஆசிரியராக இருந்த என் அப்பாவின் வழிகாட்டலும், ஆசிர்வாதமும் தான் காரணம்.
கணவருக்கு, தாழ்வு மனப்பான்மை அதிகம். 'ஈகோ'வும் சேர்ந்து கொள்ள, என் மீது அதிக ஆத்திரத்தை காட்டுவார். சில நேரங்களில், வன்முறையும் கட்டவிழ்த்து விடுவார். மகன் முன், என்னை இழிவாக பேசுவது, மட்டம் தட்டுவது என்றிருப்பார்.
எதிர்த்து ஒரு வார்த்தை பேசிவிட்டால், இறுதி ஆயுதமாக, 'உன் பள்ளிக்கு வந்து, எல்லார் முன்னிலையிலும், நீ தரம் கெட்டவள், மனைவியாக இருக்க தகுதி இல்லாதவள் என்று கூறி, தலைகுனிய வைப்பேன்...' என்பார்.
பள்ளியில் எனக்கிருக்கும் கவுரவம் கெட்டுவிடும் என்று அடங்கி போகிறேன். இது எதையும் மாமனார் - மாமியார் கண்டுக்கொள்ளாமல் இருந்து விடுவர்.
இப்படி சண்டை நடக்கும் போதெல்லாம், நிலைகுலைந்து, இரண்டு, மூன்று நாட்களுக்கு யாருடனும் பேசாமல், மன அழுத்தத்துடன் இருப்பான், மகன். இது, அவனது எதிர்காலத்தை பாதிக்கும் என, நானாகவே எல்லாவற்றையும் மறந்து, சமாதானமாக இருப்பது போல் காட்டிக் கொள்வேன்.
சமீபகாலமாக கணவர், யாரோ ஒரு பெண்ணுடன், பழகி வருவதாக அரசல் புரசலாக காதில் விழுகிறது. அது உண்மையாக இருக்குமோ என்பதும் தெரியவில்லை.
மகனது எதிர்காலத்தையும், என் பணியையும் காப்பாற்றிக் கொள்ள, நான் என்ன செய்ய வேண்டும், அம்மா.
— இப்படிக்கு
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
கணவரின், 'ஈகோ'வுக்கு எதாவது ஒரு நதிமூலம், ரிஷிமூலம் இருக்கும். உன் சுயமரியாதை கெடாமல் கணவரின், 'ஈகோ'வை அகற்ற முடியுமா என, பார்.
மிகமிக முக்கியமான ஆலோசனை ஒன்று சொல்கிறேன் கேள்.
தீர்வு இல்லாத பிரச்னை உலகில் இல்லை. கணவனும், மனைவியும் மனம் விட்டு பேசினாலே ஆயிரம் அபிப்ராய பேதங்களை களையலாம்.
கணவரை பேச்சு வார்த்தைக்கு கூப்பிடு.
'இருவரில் யாருமே குரலை உயர்த்தி கோபப்படக் கூடாது. அமைதியாக அவரவர் ஆவலாதிகளை பட்டியலிடுவோம். நாம் ஏற்படுத்தும் சமாதான உடன்படிக்கை ஆயுளுக்கும் செல்லுபடி ஆகும் வண்ணம் பார்த்துக் கொள்வோம்...' என முன்நிபந்தனை விதித்து, பேச்சுவார்த்தையில் இறங்கு.
'நான் உங்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் ஆசிரியப் பணியில் இருப்பது உங்களுக்கு உறுத்துகிறது என்றால், பணியை விட்டுவிடவா? ஒற்றை சம்பளத்தில் கடன் இல்லாமல் குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா உங்களால்?
'நீங்கள் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பழகி வருவதாக கேள்விப்பட்டேன். நான் ஓர் அந்திய ஆணுடன் பழகினால், உங்கள் மனம் ஒப்புமா?
'நமக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. திருமணபந்தம் மீறிய உறவுகள் படு ஆபத்தானவை. கொலை-, தற்கொலை- குடும்பங்கள் சிதறி குழந்தைகளின் எதிர்காலம் பாழ். மனைவி - -கணவன்-, மாற்றான் மனைவி-, மாற்றாள் கணவன் எத்தரப்பும் சுகப்படாது.
'சமாதான உடன்படிக்கைக்கு நீங்கள் ஒத்து வராவிட்டால், நான் சில பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும்.
'நான் பணிபுரியும் பள்ளி நிர்வாகத்தில் உங்கள் துர்நடத்தையை பற்றி சொல்லி, பள்ளி நேரத்தில் நீங்கள் பள்ளிக்கு வந்தால் வாசலிலேயே தடுக்கப்பட்டு விரட்டப்படுவீர்கள்.
'மகளிர் காவல் நிலையத்தில் உங்கள் மீது புகார் செய்வேன். நம்மிருவர் பிரச்னை, நம் மகனை வெகுவாக பாதிக்கிறது. தற்காலிகமாக நானும், மகனும் உங்களை விட்டு பிரிகிறோம். ஆறு மாதம் உங்களுக்கு அவகாசம் தருவேன். திருந்தி வந்தால் ஒன்று சேர்வோம்.
'அப்போதும் நீங்கள் மாறவில்லை என்றால், சட்டப்படி விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் விண்ணப்பிப்பேன். முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியில் நூற்றுக்கணக்கான பயணிகளில் ஒருத்தியாக நசுங்கி கசங்கி பயணிப்பதை விட, ரயிலை விட்டு இறங்குவது மேல்.
'பிச்சையாக, தானமாக கிடைக்கும் திருமண வாழ்க்கையை விட, சுயகவுரவமும், சொந்த அடையாளமும் உன்னதமானவை என, பெண்களாகிய நாங்கள் நன்கு புரிந்து வைத்துள்ளோம்.
'திருமணம் என்பது ஒரு ஆணுக்கு, ஒரு பெண் எழுதி கொடுக்கும் அடிமை சாசனமல்ல. இரு சம அதிகாரமுள்ள மாலுமிகள் இயக்கும், சம்சார சாகரத்தின் பெரும் கப்பலே, திருமணம்.
'சமூக கட்டமைப்பையும், மனித உயிர் தொடர்ச்சியையும், பரஸ்பர காமதகனத்தையும் உன்னதபடுத்தும் பங்குதாரர்களே, கணவன் - மனைவிகள்...' என கூறு.
ஒத்து வந்தால் ஒட்டிக் கொள்; எட்டிப் போனால் வெட்டிக் கொள் மகளே!
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.