
க.அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை!' நுாலிலிருந்து:
நாடாளுமன்றத்தில், அண்ணாதுரை பேசுகிறார் என்றால், அவரது பேச்சை கேட்க, பல உறுப்பினர்கள் காத்திருப்பர். ஆவலுடன் பலமுறை நேரு மற்றும் அனைத்து உறுப்பினர்களும் சாப்பாட்டு நேரத்தையும் மறந்து கேட்டதுண்டு.
ஒருமுறை நாடாளுமன்றத்தில், தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பேசினார், அண்ணாதுரை.
அதற்கு வட மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், 'கூடவே கூடாது. ஹிந்தியே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்...' என்று, மறுப்பு தெரிவித்தார்.
உடனே, அவரைப் பார்த்து, 'ஹிந்தி மொழி ஏன் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்கிறீர்கள்?' என்றார், அண்ணாதுரை.
'இந்தியாவில், ஹிந்தி மொழி அதிக மக்களால் பேசப்படுகிறது. எனவே, அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்...' என்றார்.
'அப்படியென்றால், இந்தியாவின் தேசிய பறவையாக மயிலை ஏன் வைக்க வேண்டும்... எண்ணிக்கையில் அதிகமாக உள்ள காக்கையை அல்லவா குறிப்பிட வேண்டும்...' என்று, அண்ணாதுரை கேட்க, பதில் பேசாமல் மவுனமானார், அந்த உறுப்பினர்.
*****
சென்னை அடுத்த, தாம்பரம் கிறிஸ்தவ கல்லுாரியில் பேரவை விழா நடைபெற்றது. அதில், அண்ணாதுரை பேசிய போது, 'எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று கேட்பீர்களானால், சூரிய - சந்திர சுழற்சிக்கும் அப்பாற்பட்ட, அண்டவெளி இயக்கத்தின் சுழற்சியில் ஏதோ ஒரு மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருப்பதாகவே உணர்கிறேன்.
'அதனால், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு. மேலும், பிரார்த்தனையில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று, எவரும் கருத வேண்டாம். பிரார்த்தனைகளில் பலவகை உண்டு. உள்ளத்திலேயே பிறர் அறியா வண்ணம் பிரார்த்தனை செய்பவன் நான்.
'அதுமட்டுமல்ல எனக்காக பிரார்த்தனை செய்பவர்கள் பலருண்டு என்றும் எனக்கு தெரியும். அவர்கள் எனக்காக செய்யும் பிரார்த்தனை பலன் அளிக்கும் எனவும் எனக்கு தெரியும்...' என்றார், அண்ணாதுரை.
*****
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற சொல்லுக்கு உரியவர், அண்ணாதுரை. முதல்வராக பதவி ஏற்றதும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார், அண்ணாதுரை.
முதல்வராக பதவி ஏற்ற அன்று, தலைமை செயலகத்தில், அரசு ஊழியர்களிடம் பேசும்போது, 'கானம் பாடும் வானம்பாடியைப் போல, திரிந்தவர்கள் நாங்கள்.
'எங்களைப் பிடித்து கூண்டிற்குள் அடைப்பது போல், பதவியில் அமர்த்தி இருக்கிறீர்கள். பொறுப்பு தீர்ந்துவிட்டதாக கருதி போய் விடாதீர். பொறுப்பு இனிமேல் தான் அதிகமாகப் போகிறது. என்னை உங்கள் சகோதரனாக எண்ணிக் கொள்ளுங்கள்.
'ஆட்சிக்கு முற்றிலும் புதியவர்கள் நாங்கள். எனவே, தவறு நிகழ்ந்தால் தயங்காமல் எடுத்து கூறுங்கள். என்னுடைய கடமையை நிறைவேற்ற உதவுங்கள். தேவைப்படும் போது என்னை திருத்துங்கள். முதலில் நான் மக்கள் தொண்டன். பிறகு தான் முன்னேற்றக்கழகத்தின் முதல்வர்...' என்று கூறினார், அண்ணாதுரை.
****
அண்ணாதுரை முதல்வராக இருந்த சமயம், பஸ்களில் திருக்குறள் எழுதியதை பார்த்து பாராட்டினர், பலர்; எரிச்சல்பட்டு கேலியும், கிண்டலும் செய்தவர்களும் உண்டு.
'யாகாவராயினும் நாகாக்க என்ற குறள், பஸ்களில் எழுதப்பட்டுள்ளதே, அது யாருக்காக? கண்டக்டருக்கா, டிரைவருக்கா?' என்று கேட்டார், காங்கிரஸ் கொறடா, கே.வினாயகம்.
'நாக்கு உள்ள எல்லாருக்கும் தான்...' என்று சுருக்கமாகவும், விளக்கும் வகையிலும் பதில் அளித்தார், அண்ணாதுரை.
- நடுத்தெரு நாராயணன்