
'நிறைகுடம் தளும்பாது; குறை குடம் கூத்தாடும்...' என்று, பழமொழி உண்டு. நிறைவான ஞானம் பெற்றவர்கள், அவசியமில்லாத விஷயங்களில் தலையிட்டு, ஆரவாரம் செய்ய மாட்டர்கள். இதை விளக்கும், கதை இது:
ஒருசமயம் பூமியிலிருந்த, மூன்று துறவிகளுக்கு, அவர்கள் செய்த தவத்தின் பயனாக, சொர்க்கம் போகும் வாய்ப்பு கிடைத்தது.
துறவிகளின் இலக்கணமே, அளவோடு பேசி, மவுனமாக இறைவனை சிந்திப்பது தான். அப்படி, மூவரும் சொர்க்கத்தை நோக்கி வான் வழியே போய் கொண்டிருந்தனர். அப்போது, வழியில் ஒரு கருடனைக் கண்டனர். அது, தன்னுடைய அலகில், பாம்பைக் கவ்வியவாறு, வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
'அநியாயமாக இந்தப் பாம்பு, பருந்து வாயில் அகப்பட்டு விட்டதே...' என்று கவலைப்பட்டார், துறவிகளில் ஒருவர்.
அடுத்த கணமே, மறுபடி பூமிக்கே வந்து விழுந்து விட்டார்.
'நன்றாக வேண்டும் இந்த பாம்புக்கு...' என்று திருப்தி பட்டார், இன்னொருவர். உடனே அவரும் பூமியில் வந்து விழுந்தார்.
எதைப் பற்றியும் கவலைப்படாமல், மவுனமாக, எல்லாவற்றையும் கண்களால் பார்த்தும், 'எல்லாம் இயற்கையின் நியதி, இறைவனின் விருப்பம். நாம் யார் விமர்சனம் செய்ய...' என்று எண்ணியபடி, மவுனத்தை கைவிடாது, சொர்க்கம் போய் சேர்ந்தார், மூன்றாவது துறவி.
மவுனம் என்பது, ஞானத்தின் முழுமை. எல்லை என்று கூட சொல்லலாம். இறையருளைப் பெற, மவுனமே சரியான வழி. புகழ்பெற்ற பல மகான்கள், மவுனமாகவே செயல்பட்டு இருக்கின்றனர்.
துறவிகளுக்கு மட்டுமல்ல, நம்மைப் போன்ற, சாதாரண மனிதர்களுக்கும் மவுனம் தேவை. அது, பல தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து காப்பாற்றும் என்பதை, நாம் உணர வேண்டும்.
பி. என். பி.,
அறிவோம் ஆன்மிகம்!
எலுமிச்சம் பழ விளக்கு வீட்டில் ஏற்றக்கூடாது. கோவிலில் மட்டுமே ஏற்ற வேண்டும்.