
அன்புள்ள அம்மா —
நான், 30 வயது பெண். நர்சிங் கோர்ஸ் முடித்துள்ளேன். கணவர் வயது: 33. படிப்பு: பி.இ., துபாய் நாட்டில் பணிபுரிகிறார். திருமணத்துக்கு பின், கணவர் வேலை செய்யும் துபாய்க்கே என்னை அழைத்து சென்றார். அங்கு, மருத்துவமனை ஒன்றில், எனக்கு வேலையும் வாங்கி கொடுத்தார்.
நாங்கள் இருவருமே ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். சென்னையில் சொந்தமாக ஒரு இடம் வாங்கி, வீடு கட்ட எண்ணினோம். அதன்படி இருவரது சேமிப்பு பணத்தில் இருந்து, சிறிது சிறிதாக, ஊருக்கு அனுப்பி, என் பெற்றோரின் மேற்பார்வையில் வீடு கட்ட ஆரம்பித்தோம்.
சில ஆண்டுகளுக்கு பின், வீட்டு வேலை சிறப்பாக முடிய, கிரஹ பிரவேசத்துக்கு ஏற்பாடு செய்தனர், என் பெற்றோர். கணவரது பெற்றோரும் வாடகை வீட்டில் தான் வசிப்பவர்கள். கிரஹப்பிரவேசத்துக்கு பின், தன் பெற்றோரை அங்கு தங்க வைக்க விரும்பினார், கணவர்.
எனக்கும் அதில் சம்மதம் தான். ஏனெனில், எனக்கு ஒரு தம்பி. அவன் குடும்பத்துடன் என் பெற்றோர் இருந்தனர். தம்பிக்கு சொந்த வீடு இருந்தது. என் தம்பிக்கு, இரு குழந்தைகள். தம்பியும், அவன் மனைவியும் வேலைக்கு செல்வதால், குழந்தைகளை இவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கணவரது பெற்றோருக்கு, இவர் ஒரே மகன். 'இதுவரை வாடகை வீட்டில் இருந்தனர். சொந்த வீட்டில் இருக்கட்டுமே...' என்று கூறினார், கணவர்.
ஆனால், என் பெற்றோர் அதற்கு உடன்படவில்லை.
'என் பொண்ணும் சம்பாதித்த பணத்தில் கட்டியது தான் இந்த வீடு. எனவே, இந்த வீட்டில் நாங்களும் வந்து தங்குவோம்...' என்று பிடிவாதம் பிடித்தனர்.
இருதலை கொள்ளி எறும்பு போல் தத்தளிக்கிறேன், நான். என் தம்பியிடம் முறையிட்டு, சமாதானப்படுத்த சொன்னேன். அவன் என்ன சொல்லியும் கேட்கவில்லை, என் அப்பா.
பிரச்னையை வளர்க்க வேண்டாம் என்று, பார்த்து பார்த்து கட்டிய வீட்டை வாடகைக்கு விட்டோம். கணவரது பெற்றோர், ஏற்கனவே இருந்த வாடகை வீட்டுக்கே சென்றுவிட்டனர்.
அன்றிலிருந்து, என்னுடன் பேசுவதை தவிர்க்கிறார், கணவர். காலதாமதமாக வீட்டுக்கு வருவது, பல நேரங்களில் ஹோட்டலில் சாப்பிடுவது என்று இருக்கிறார். அவர் எங்கே பாதை மாறி போய் விடுவாரோ? குழந்தை பாக்கியமும் இல்லாததால் பயமாக இருக்கிறது. பணியில் ஈடுபாடு காட்ட முடியவில்லை. நிம்மதி இழந்து தவிக்கிறேன்.
நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
நீயும், கணவரும் இன்னும் துபாயில் தானே பணிபுரிகிறீர்கள்? எக்காரணத்தை முன்னிட்டும் வேலையை விட்டுவிட்டு இந்தியா வந்து விடாதீர்கள். குழந்தை உருவாவதற்கான மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து செய்யுங்கள்.
உங்கள் பிரச்னைக்கான தீர்வை ஆக்கப்பூர்வமாக யோசிப்போம்.
பொதுவாக பெண் வீட்டார், மாப்பிள்ளையை, சம்பந்தியை திருப்திபடுத்த, பலவிதமான சமரசங்களில் ஈடுபடுவர். ஆனால், உன் தந்தை ஒரு விதிவிலக்கு.
நீங்கள் வீடு கட்டும்போதே இப்படி ஒரு பிரச்னை வரும் என யூகித்திருக்க வேண்டும். வீட்டை மூன்று பகுதிகளாக பிரித்து கட்டி, ஒன்று உங்களுக்கு. இரண்டாவது, உன் மாமனார் - மாமியாருக்கு. மூன்றாவது பகுதி, உன் பெற்றோருக்கு என, ஒதுக்கி இருக்கலாம்.
இனி, நீ செய்ய வேண்டியது-...
கணவரிடம் மனம் விட்டு பேசு.
'உங்கள் அதிருப்தியை போக்க, நான் என்ன செய்ய வேண்டும்...' என, தெளிவாகக் கேள்.
வீட்டை வாடகைதாரரிடமிருந்து பிடுங்கி, உன் மாமனார் - மாமியாரிடம் ஒப்படை.
உன் குடும்பம் முக்கியமா, தந்தையின் சுயநலம் முக்கியமா என்றால், குடும்பமே முக்கியம். இதனால், உன் பெற்றோர் மனஸ்தாபம் கொண்டால் பரவாயில்லை. மனஸ்தாபம் சில பல ஆண்டுகள் நீடிக்கும். அதன்பின் எதாவது ஒரு குடும்ப விழாவில் நீயும், உன் பெற்றோரும் ஒன்று சேர்ந்து கொள்வீர்கள். குஞ்சு மிதித்து கோழி சாகாது!
இன்னொரு யோசனையும் இருக்கிறது. கணவரிடம் பேசி அனுமதி பெறு. 'கான்பரன்ஸ் காலில்' தம்பியிடமும், தந்தையிடமும் பேசு.
'அப்பா! உங்களை உயிருக்கு உயிராய் நேசிக்கிறேன். உங்களின் வீண் பிடிவாதம், என் குடும்பத்தை கலைத்துப் போட்டு விடும். மகன், மருமகள், பேரன், பேத்திகளுடன் இருக்கும் சந்தோஷத்தை புது வீடு தராது.
'விட்டு கொடுத்தவர் கெட்டுப் போனதில்லை. நாங்கள் கட்டிய வீட்டுக்கு குடிபெயர விரும்பும் நீங்கள், தம்பியிடம் அவன் என்ன நினைக்கிறான் என கேட்டீர்களா? அம்மா, உங்கள் பிடிவாதத்துக்கு உடன்படுகிறாரா?
'இதற்கு மேலும், 'மகள் கட்டிய வீட்டில் குடியேறியே தீருவோம்...' என, நீங்கள் முரட்டு பிடிவாதம் பிடித்தால், மூன்றாண்டு காத்திருங்கள். ஒரு மனை வாங்கி, புதிதாக வீடு கட்டுகிறோம். வீடு கட்டியவுடன் அந்த வீட்டுக்கு நீங்கள் குடிபோகலாம்; ஒரே ஒரு நிபந்தனையோடு.
'நாங்கள் எப்போது இந்தியா திரும்பினாலும், வீட்டை நீங்கள் காலி செய்து கொடுக்க வேண்டும். இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொண்டால், இன்னொன்றையும் செய்தாக வேண்டும். எங்களின் இப்போதைய வீட்டில் குடிபோகும், மாமனார் - மாமியார் மற்றும் கணவரிடம், அவர்களை சங்கட படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்...' என, தந்தையிடம் கூறு.
நீ சொல்லும் சமாதான உடன்படிக்கைக்கு கணவரோ, தந்தையோ ஒத்து வராவிட்டால், தற்போதைய நிலையே நீடிக்கட்டும் என, அமைதியாக இரு. உங்கள் வீட்டை வாடகைக்கு விட்டது தான் நிரந்தர தீர்வு.
கூடுதலாய், 30 லட்சம் ரூபாய் செலவழித்து, தந்தையை திருப்திபடுத்த முயல்வது, ஆக்கப்பூர்வமாக யோசித்தால் வேண்டாத வேலை. கணவரின் பெற்றோர், உன் பெற்றோரின் ஆவலாதிகளை விட, கணவரின் ஆவலாதிகளே அதிமுக்கியம். அவரை தொடர்ந்து பேசி சமாதானப்படுத்து.
'உங்கள் உதாசீனம் என்னை காயப்படுத்துகிறது...' என கூறி கதறி அழு. எல்லாம் நல்லதே நடக்கும் செல்ல மகளே!
— -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.