
அன்புள்ள அம்மா —
நான், 25 வயது பெண். 'பேஷன் டெக்னாலஜி' படித்துள்ளேன். வெளிநாட்டில், நல்ல வேலையில் உள்ளார், அப்பா. நிறைய சம்பாதித்து, பங்களா, கார் என, எங்களை வசதியாக வாழ வைக்கிறார். எனக்கு ஒரு தங்கை. கல்லுாரியில் படித்து வருகிறாள்.
அப்பாவுக்கு, 'ஈகோ'வும், பிடிவாதமும் அதிகம். அவர் சொல்வதை தான் கேட்க வேண்டும், நடக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பார். அவர் குணம் அறிந்து நானும், அம்மாவும் அனுசரணையாக நடந்து கொள்வோம்.
நான், பேஷன் டிசைனில் ஈடுபட்டு, நிறைய சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அதற்கு அப்பா சம்மதிக்கவில்லை. எனவே, வீட்டிலிருந்தபடியே, தெரிந்தவர்களுக்கு மட்டும், உடைகளை, 'டிசைன்' செய்து கொடுப்பேன்.
வெளிநாட்டில் வேலை செய்யும், தன் நண்பரது மகனை எனக்கு நிச்சயம் செய்தார், அப்பா. எனக்கு, உள்ளூர் மாப்பிள்ளையாக இருந்தால் நன்றாக இருக்குமே என்றபோது, வழக்கம் போல், மறுப்பு தெரிவித்தார், அப்பா.
சரி என, விட்டு விட்டேன். திருமணத்துக்கு, எட்டு மாதங்கள் இடைவெளி இருக்க, தினமும் என்னுடன் பேசுவார், மாப்பிள்ளை. நாளடைவில், நானும் அவரை விரும்ப ஆரம்பித்தேன்.
இதில் ஒரு சிக்கல் வந்தது. என்னவென்றால், மாப்பிள்ளையும், என் அப்பாவை போல், 'ஈகோ' பிடித்தவராக இருந்தார். என் அப்பா அளவுக்கு தீவிரமாக இல்லை என்று சந்தோஷப்பட்டேன்.
நாங்கள் சுமூகமாகவே பழகி வந்தோம். ஆனால், என் அப்பாவுக்கும், மாப்பிள்ளைக்கும் ஆகாமல் போய் விட்டது. எந்த விஷயத்திற்காகவோ, இருவருக்கும் முட்டிக் கொண்டது. இப்போது, 'அந்த மாப்பிள்ளை வேண்டாம். வேறு மாப்பிள்ளை பார்க்கிறேன்...' என்று கூற, அதிர்ந்து போனோம், நானும், அம்மாவும்.
மாப்பிள்ளையின் பெற்றோரும், நல்லவர்களாக, பெண்களை மதிக்கக்கூடியவர்களாக, பண்பானவர்களாக இருந்தனர். மாப்பிள்ளை பற்றி ஓரளவு புரிந்து, காதலிக்க ஆரம்பித்தவுடன், இதென்ன சோதனை என்று தவிக்கிறேன்.
'உன் அப்பாவை நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம். இந்த திருமணத்தை நடத்த வேண்டியது எங்கள் பொறுப்பு...' என்றார், மாப்பிள்ளையின் அப்பா.
'நீ எதற்கும் கவலைப்படாதே. நீ தான் என் மனைவி...' என்று, நம்பிக்கை அளிக்கிறார், மாப்பிள்ளை.
என் அப்பாவின் பிடிவாதத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. இதில் நான் என்ன செய்ய வேண்டும், அம்மா. ஆலோசனை தாருங்கள்.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
இரண்டு மகள்களில் மூத்தவளான உன்னை, 'பேஷன் டெக்னாலஜி' படிக்க வைத்திருக்கிறார், அப்பா. உன்னை செல்வ செழிப்பில் திணறடித்துள்ளார்.
என்ன ப்ளஸ் பாயின்ட்களை பார்த்தாரோ, வெளிநாட்டு மாப்பிள்ளையை உனக்கு பார்த்து வைத்திருக்கிறார். எட்டு மாதங்கள் நீயும், வெளிநாட்டு மாப்பிள்ளையும் போனில் பேச அனுமதித்துள்ளார். என்ன மைனஸ் பாயின்ட்களை பார்த்தாரோ, அதே வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம் என்கிறார்.
அடுத்து, 'உள்ளூர் மாப்பிள்ளையை பாருங்கள் அப்பா...' என கூறி, நீ அமைதி காக்க வேண்டியது தான் சாலச்சிறந்தது.
உன் அப்பாவை, 'ஈகோ' பேர் வழி என விமர்சித்திருக்கிறாய். தன் இளமையை தொலைத்து, மனைவி, மகள்களுக்காக அயல்நாட்டில் உழைத்துக் கொண்டிருக்கிறார் அப்பா என்பதை, நினைவில் கொள்.
மகன், மகள் மீது பாசாங்கு இல்லாத கட்டாற்று வெள்ளமாய் பாசத்தை கொட்டுவர், சில தந்தையர். நன்மை மட்டுமே செய்யும் சர்வாதிகாரியாய் நடந்து கொள்வர். 'பேஷன் டிசைனிங்'கை வீட்டளவில் செய்யும் நீ, மனமொத்த கணவர் கிடைத்தால், அதே பணியை முழுமையாக விரிவுபடுத்தலாமே... அதற்குள் என்ன அவசரம்?
பதின்ம வயதில், 'ஹீரோ'களாய் தெரியும் அப்பாக்கள், கல்யாண வயதில் வில்லனாய் தெரிகின்றனர்.
வெளிநாட்டு மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளையின் பெற்றோரை நேரில் பார்த்திருக்கிறாயா? அவர்கள் உள்ளூரில் இருக்கின்றனரா, வெளிநாட்டில் இருக்கின்றனரா என, உன் கடிதத்தில் குறிப்பிடவில்லை.
மாப்பிள்ளையுடன், அவர்களது பெற்றோரும் வெளிநாட்டில் தான் இருப்பதாக யூகிக்கிறேன். நேரில் பார்த்து, 10 ஆண்டுகள் பழகியவர்களே எளிதாக நம்பிக்கைத் துரோகம் செய்கின்றனர். இவர்கள் எம்மாத்திரம்?
எனக்கென்னவோ மாப்பிள்ளையும், அவரது பெற்றோரும் நல்லவர்களாக தெரியவில்லை. நல்லவர்களாய் இருந்தால், 'உன் பெற்றோரின் அனுமதியும், ஆசிர்வாதமும் இல்லாமல் இந்த கல்யாணம் நடக்காது.
'நாங்களும், உன் அப்பாவிடம் பேசி அவர் மனதை மாற்ற முயற்சிக்கிறோம். நீயும், உன் அப்பாவிடம் பேசி அவரை சமாதானப்படுத்து. இல்லை என்றால் அவரவர் வழியை பார்ப்போம்...' என, அவர்கள் கூறியிருக்க வேண்டும்.
மாப்பிள்ளையும், அவரது பெற்றோரும் நல்லவர்கள் என, வைத்துக் கொள்வோம். நீ வீட்டை விட்டு ஓடி, திருட்டுக் கல்யாணம் செய்து என்ன சாதிக்கப் போகிறாய்? உன் பெற்றோருக்கு தலைகுனிவு-, அப்பாவுக்கு உடல் சுகவீனம், அப்பா வழி சொத்து மறுப்பு, -தங்கையின் எதிர்காலம் பாதிப்பு... இதெல்லாம் அரங்கேறும்.
உலகத்திலேயே இந்த வெளிநாட்டு மாப்பிள்ளை தான் சிறப்பானவனா? இவனை விட்டால் வேறு மாப்பிள்ளையே கிடைக்காதா? குடும்ப மாண்பை பணயம் வைத்து சூதாடாதே. 25 வயது வரை உன் வாழ்க்கையை, அப்பாவிடம் ஒப்படைத்திருந்தாய். அடுத்த, 50 ஆண்டு எதிர்காலத்துக்கு அவரையே சார்ந்திரு.
உன் அப்பா நல்ல மூடில் இருக்கும்போது, அவரிடம் உன் எதிர்பார்ப்புகளை, ரசனைகளை பதவிசாக தெரிவித்திடு.
உரையாடல் முடிவில், 'அப்பா உங்களையே முழுக்க சார்ந்திருக்கிறேன். எனக்கு நன்மையானதையே செய்வீர்கள் என நம்புகிறேன். ஐ லவ் யூ டாடி!' எனக் கூறு. உன் அப்பாவின், 'கிங் சைஸ் ஈகோ' (இருந்தால்) உருகி ஓடிவிடும்; வாழ்த்துகள்!
— -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.