sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அவளா சொன்னாள்?

/

அவளா சொன்னாள்?

அவளா சொன்னாள்?

அவளா சொன்னாள்?


PUBLISHED ON : அக் 06, 2024

Google News

PUBLISHED ON : அக் 06, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடற்கரை சாலையில் காரில் திவாகர் போகும்போது, பக்கவாட்டில் தெரிந்த நீலக்கடலும், நீல வானமும் கண்களைக் கொள்ளை கொண்டன.

நிருத்யாவின் நினைவு வந்தது. திருமணமான புதிதில், 'ஸீ ப்ளூ' நிறத்தில், குர்த்தி அணிந்திருப்பாள். அவ்வளவு பாந்தமாக, ஒயிலாக, வனப்பாக இருக்கும். கூடவே, ஒவ்வொரு முறை பேச்சை முடிக்கும் போதும் ஒரு மென்சிரிப்பு.

அலுவலகம் வந்து விட்டது. வண்டியை, 'பார்க்கிங்' இடத்தில் விட்டுவிட்டு, அவள் சமைத்து கொடுத்திருந்த, 'டிபன் கேரியர்' எடுத்து, 'லிப்ட்'டில் ஏறினான்.

உள்ளே ஏதோ சாக்லேட் வாசனை இருந்தது. கூடவே கொஞ்சம் கேக் வாசனையும். நண்பர்கள் புடை சூழ யாரோ ஒருவர், 'லிப்ட்'டில் பிறந்தநாள் கொண்டாடி இருக்கலாம் என, கற்பனைக் காட்சியை மனம் உருவகித்து, உதடுகளில் புன்னகையைத் தோற்றுவித்தது.

'குட் மார்னிங், சார்; காலை வணக்கம், எம்.டி., சார்; நமஸ்காரம், முதலாளி...' என, ஊழியர்கள், செக்யூரிடி, அப்ரன்டீஸ் என, சிரித்த முகத்துடன் காலை வணக்கம் சொல்ல, புன்னகையுடன் பதில் சொல்லியபடி தன் அறைக்குப் போனான், திவாகர்.

அடுத்த ஒரு மணி நேரம் பரபரப்பாகவும், வேகமாகவும் ஓடியது. கூடவே, இனிமையான உணர்வுகள்.

ரொம்ப காலமாக இழுத்துக் கொண்டிருந்த, மிடில் ஈஸ்ட் கப்பல் கம்பெனியின், 'ஆர்டர்' அன்று கையில் கிடைத்து விட்டது. அதே போல, மனீஷா டிரேடர்ஸ் கொடுத்த காசோலைகள், வழக்கம் போல திரும்பி வராமல் வங்கியில் போட்டதும் தொகையாக மாறி விட்டன.

மொபைல்போன் அழைத்தது.

''திவா, எப்படிடா இருக்கே? நான் தான், பூபதி பேசறேன்,'' என்று, எதிர்முனை குரல் சற்று இறங்கி ஒலித்தது.

''அட, என்னடா இது சர்ப்ரைஸ்... பூபா, நீயா? ரெண்டு மாசமா எங்கடா ஆளையே காணோம்?'' என்றான் உற்சாகமாக.

''இங்கதாண்டா இருக்கேன்.''

''நான் போன் செய்தேன். ஏன்டா எடுக்கலே?''

''அட போப்பா.''

''ஏய் என்ன ஆச்சு?''

''ஒண்ணுமில்லடா விடு.''

''பூபா, என்னப்பா. எப்பவும் அதிரடியா சிரிச்சு பேசறவன் நீ. சொல்லு என்ன விஷயம்?''

''எல்லாம் வீட்டு பிரச்னைடா. அவளுக்கு ரொம்ப பிடிவாதம், திமிர்டா. இப்பல்லாம் எல்லாத்துக்கும் சண்டை. நான் வாய தொறந்தாலே அவளுக்கு பிடிக்கறதில்லே. ஆபிஸ்லயே கெடக்கேன். வாழ்க்கை வெறுத்துப் போச்சுடா எனக்கு.''

''என்னப்பா, பூபதி இப்படி சொல்றே? வாயேன் கிளப்புக்கு. அப்படியே பீச் வாக், மனசு ஈசி ஆகிடும். எல்லாம் சரியாகிடும்.''

''பார்க்கலாம்டா, திவாகர். சரி முக்கியமான போன் வருது. அப்புறம் பேசறேன்.''

தொடர்பு முடிந்தபோது உள்ளே வந்தார், பரமசிவம்.

''எம்.டி., சார்,'' என்று, தலையை சொறிந்தார்.

''சொல்லுங்க, பரமசிவம்.''

''நாலு நாள், 'லீவு' வேணும் சார்.''

''என்ன, நாலு நாளா... ஏதாவது விசேஷமா வீட்டுல?''

''இல்லே சார். பொண்டாட்டி நச்சரிப்பு தாங்க முடியலே, சார். 'யாத்ரா டிரிப்' போகணுமாம். கர்நாடகா, உடுப்பின்னு, 'புக்' பண்ணி வெச்சிருக்கா. வந்தே ஆகணும்ன்னு ஒரே பிடிவாதம். போன் போட்டுத் தரேன். நீங்களே பேசுங்க சார், ப்ளீஸ்.''

''நோ, நோ அதெல்லாம் எதுக்கு? போயிட்டு வாங்க, பரமசிவம். 'அட்வான்ஸ்' கூட வாங்கிக்குங்க. அந்த லாரன்ஸ் அன் கோ வேலையை மட்டும் இன்னைக்கு முடிச்சுடலாம், ஓ.கே.,யா?''

''ஷ்யூர் சார். ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்,'' என்று, கொஞ்சம் கண் கலங்கி விட்டார், பரமசிவம்.

''ஏன் சார் இவ்வளவு, 'இமோஷனல்' ஆகறீங்க?'' என்றான் சங்கடத்துடன், திவாகர்.

''இல்லே சார். அவ ரொம்ப கோபக்காரி சார். நினைச்சா நினைச்சது நடக்கணும். இல்லேன்னா காளி மாதிரி கத்துவா. வீடே நாலு நாளைக்கு யுத்தகளம் போல இருக்கும். 20 வருஷமா படாத பாடு படறேன் சார். வரேன் சார். தாங்க் யூ சார்,'' என்று கூறி அறையை விட்டு வெளியேறினார், பரமசிவம்.

திகைப்புடனும், புன்னகையுடனும் ஜன்னலுக்கு வெளியே பார்த்தான், திவாகர்.

நிருத்யாவின் முகம், மேகக்கூட்டத்தின் நடுவே தெரிந்தது. என்ன பொறுமையான குணம்... அளந்து பேசுகிற அழகு. எப்போதும் குழந்தை, கணவன் என, தன் உலகத்தைக் கட்டி ஆளுகிற ஆர்வம்.

எம்.எஸ்சி.,யும், பி.ஹெச்டி.,யும் முடித்து, திறமையான லெக்சரர் ஆக இருந்த, இறந்த காலம் பற்றி அலட்டிக் கொள்ளாத அமைதி. அவன் நிழல் போல இருப்பதில் அடைகிற நிறைவு. ஷீலு குட்டிக்கு பேரன்பான தாயாக, தாதியாக, ஆசிரியராக, சாரதியாக பின்னாலே ஓடுகிற வேகம்.

தவம் செய்யாமலே உன்னை அடைந்திருக்கிறேன், நிருத்யா.

மொபைல் போன் அழைத்தது.

அவள் தான், நிருத்யா!

''ஹலோ, நீங்க தானே?'' என்றாள்.

''ஆமாம் நிரூ. என்னம்மா சொல்லு,'' என்றான், மென்மையாக.

ஒரு கணம் இடைவெளி விட்டு, ''திவாகர், நான் ஊருக்குக் கிளம்பலாம்ன்னு இருக்கேன். டிக்கெட் வாங்கிட்டேன். ஜஸ்ட் இன்பார்மிங் யூ,'' என்றாள்.

''என்ன சொல்றே நிரூ புரியலே.''

''நமக்குள்ளே பிரிவு வேணும்ன்னு நினைக்கிறேன். என் பாட்டியோட வீடு வெலிங்டன்ல இருக்கு. உனக்கே தெரியும். அதை தயார் பண்ணி வெச்சுட்டேன். ஷீலுவை பாத்துக்குங்க.''

திவாகருக்கு, கண்கள் இருண்டு பிறகே மீண்டன.

''என்ன, நிருத்யா என்ன சொல்றே நீ. பிரிவா, நமக்குள்ளே பிரிவா. என்னம்மா பேச்சு இது. ஏன், எதுக்காக?''

''ஆமாம், திவாகர். எனக்கு இந்த இடைவெளி தேவைப்படுகிறது. கிளம்பறேன். ப்ளீஸ் வெச்சுடறேன்,'' என்று கூறி, உடனே தொடர்பை துண்டித்து விட்டாள்.

காலடியில் நிலம் நழுவியது போல நின்றான், திவாகர். அவள் குரலா ஒலித்தது? ஆமாம். அவளேதான். பிரத்யேக சில்லிப்புத்தன்மை கொண்ட குரல் அது. இன்று! ஆனால், அது அப்படி இல்லை. பாலைவனத்தின் வெம்மை தெரிந்தது.

ஏன் அப்படிச் சொன்னாள்? காலையில் கூட அவனுக்கு பிடித்த மஷ்ரூம் ரைஸ், கத்திரிக்காய் கிரேவி என, மணக்க மணக்க தயாரித்தாளே. இளம் பச்சை நைட்டியில் அதே புன்சிரிப்புடன் விடை கொடுத்தாளே. தோட்டத்தில் அவளும், வேலாயியும் செடிகளுக்கு நீர் விட்டபடி பேசினரே... எதுவும் இயல்பை மீறி தெரியவில்லையே.

அவன், மறுபடி மறுபடி அவள் எண்ணை அழைத்தான். அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

'தயவு செய்து தொடர்பு கொள்ள வேண்டாம். ஐ யாம் சீரியஸ்...' என, குறுஞ்செய்தி மட்டுமே அவளிடமிருந்து கடைசியாக வந்தது.

இருக்கையை விட்டு எழ முடியாமல் தொடர்ந்து, 'க்ளையன்ட்'களின் சந்திப்புகள் இருந்தன. உண்மையிலேயே அவனால் தேநீர் கூட பருக முடியவில்லை.

மாலை, 4:00 மணிக்கு பிறகே, கொஞ்சம் ஆரவாரங்கள் அடங்கின.

உள்ளே அதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த சூறாவளி வேகம் எடுத்தது. நிரூவை விட்டு எப்படி இருப்பது? ஏன், அப்படி பிரிந்து போக நினைக்கிறாள்? அய்யோ, என்ன தான் பிரச்னை?

''சார், டாக்டர் மிருணாளினின்னு ஒரு பெண் வந்திருக்காங்க. உங்களைப் பாக்கணுமாம்,'' என்று, திவாகரின் அறைக்கு வந்தார், பரமசிவம்.

''யாரு, பெண் டாக்டரா. ஓ.கே., வரச்சொல்லுங்க,'' என்றான், திவாகர்.

கதவை லேசாக, இரண்டு முறை தட்டிய பின், இரண்டு நொடிகள் கழித்து, அவள் உள்ளே வந்தாள்.

நடுத்தரமான உடல்வாகு, கம்பீரமான தோற்றம், புடவையும், ரவிக்கையும், கண்ணியமும், நாகரிகமுமாக மரியாதையான எண்ணத்தை உண்டாக்கின.

''குட் ஈவ்னிங், மிஸ்டர் திவாகர்,'' என்று புன்னகைத்தாள்.

''யெஸ் டாக்டர், ப்ளீஸ் டேக் யுவர் சீட்.''

''தாங்க் யூ. நான் மிருணாளினி. சைக்காலஜிஸ்ட். உங்க மனைவி, நிருத்யாவும், நானும் ஹாஸ்டல்மேட்ஸ். இங்கே அடையாரில்.''

''ஓ, இசிட்? குட் குட். காபி ஆர் பூஸ்ட் மேம்?'' என்றான்.

''தாங்க் யூ சார். இப்ப தான் காபி சாப்பிட்டேன். கொஞ்சம் பேசலாமா? சாரி, முன்னறிவிப்பு இல்லாமல் வந்ததுக்கு.''

''நோ, நோ... நிரூவோட தோழி நீங்கள். சொல்லுங்க, மேம்.''

''நேரடியா விஷயத்துக்கு வந்துடுறேன். நீரூ, ரொம்ப, 'அப்செட்'டாக இருக்கிறாள். டிப்ரஷன். என்கிட்ட, 'கன்சல்டேஷன்' வந்தாள், 10 நாள் முன்பாக உங்களுக்குத் தெரியுமா?''

அதிர்ச்சியில் அவன் விழிகள் விரிந்தன.

''டிப்ரஷனா? என்ன சொல்றீங்க மேம்? நீரூ இஸ் சோ பிரில்லியன்ட்,'' என்றபோது, குரல் தொண்டையில் ஒட்டிக் கொண்டது.

''ஆமாம் மிஸ்டர் திவாகர். விளக்கமாக சொல்கிறேன். உங்களுக்கு வாழ்க்கை வானவில் போல இருக்கு. சுயதொழில், நல்ல லாபம், தினம் தினம் புதுப்புது மனிதர்களை சந்திக்கிற வாய்ப்பு, கடற்கரைச் சாலைகளில் பயணம்...

''ஊழியர்களிடம் மரியாதை, அழகான மனைவி, குழந்தை, அதைவிட அவளின் உபசரிப்பு, பணிவிடை மற்றும் உபசாரம். ஆனால், நிருத்யா எப்படி இருக்கிறாள் என, என்னைக்காவது யோசித்து இருக்கிறீர்களா, திவாகர்?

''வெளியில் செல்லும் வாய்ப்பு இல்லை. மனிதர்களுடன் கலந்து பேசி, சிரித்து, அனுபவங்களை பகிர்ந்து கொள்கிற சந்தர்ப்பங்கள் இல்லை. 'பிக்னிக், ஹாப்பி வீக் எண்ட்ஸ், ரெஸ்டாரன்ட் டின்னர்' என்று, எங்கும் செல்ல வாய்ப்பில்லாத, உங்கள் பிசினஸ் வாழ்க்கைக்கு அவளும் பலி ஆகிற நிலைமை.

''ஒவ்வொருவரும் தனித்தனி மனிதர்கள் இல்லையா, திவாகர்? அவரவருக்கென்று தனித்தனியே, 'சோஷியல் லைப்' வேண்டும். வீட்டுக்குள்ளும், 'பிரைவேட் ஸ்பேஸ்' வேண்டும். தனிமை வேறு, 'பிரைவேட் ஸ்பேஸ்' வேறு.

''அவள் உலகம், கணவன், மகள் என்று, நான்கு சுவருக்குள் சுருங்கி இருக்கிறது. பிரச்னைகள் சிறியதாக இருந்தாலும், அவை சுற்றிச் சுற்றி வந்து அவளை மூச்சடைக்க வைக்கிறது. அவளுக்கென்று சோஷியல் வட்டம் ஒன்று இருந்தால், அதில் இயல்பாக அவள் இயங்கி இருப்பாள்.

''தனக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கும். தனக்கென ஒரு நட்பு வட்டம் உண்டாக்கி, அதில் தன் நிகழ்வுகளை, எண்ணங்களை, லட்சியங்களை வெளிப்படுத்தி இருப்பாள்.

''எப்போதும் உங்களின் மற்றும் குழந்தையின், 'லீவு' நாள், இப்படித்தானே எல்லா திட்டங்களும் போடுகிறீர்கள்? அவளுக்கு என்று எந்த முக்கியத்துவமும் இல்லையே. இதுதான் அவளை நொறுக்கியிருக்கிறது. தினம் தினம் பார்க்கும் இந்த முகங்களை கொஞ்ச காலமாவது பார்க்காமல் விலகி இருப்போம் என்று நினைக்க வைத்து விட்டது.

''அன்பு, காதல், வசதி வாய்ப்பு எல்லாம் திருமண வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு, அங்கீகாரமும் முக்கியம். மற்றவர் கொடுக்கிற சலுகைகளை விட, தான் தனக்காக ஏற்படுத்திக் கொள்கிற சிறு சிறு செயல்கள், சாதனைகள் தான் மனிதனுக்கு ஆன்ம பலம்.

''நிருத்யா, தான் விரும்பியபடி வெலிங்டன் போகட்டும். இங்கே வீட்டை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள், திவாகர். அவள் மனம் சமாதானம் அடையட்டும்; இயல்பாகட்டும். அப்புறம் இங்கே தானே வருவாள்? அது நிச்சயமாக அருமையான அடுத்த, 'எபிசோடாக' இருக்கும், சரியா?'' என்றாள், டாக்டர் மிருணாளினி.

'சரி' என்பதற்கு ஆதாரமாக, உடனே தலையசைத்தான், திவாகர்; ஆனால், கண்கள் கலங்கி இருந்தன.

வி. உஷா






      Dinamalar
      Follow us