
அன்பு சகோதரிக்கு —
எனக்கு, 62 வயது. கணவருக்கு வயது: 66. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். நடுத்தர குடும்பம் தான். சொந்தமாக சிறிய வீடு ஒன்று உள்ளது. எங்களுக்கு ஒரு மகன். வயது: 26. டிப்ளமோ படித்து, கார் நிறுவனம் ஒன்றில், 'டெக்னிக் அசிஸ்டென்ட்' ஆக பணிபுரிந்தான்.
காலை 7:00 மணிக்கு சென்று, இரவு தான் வருவான். தினமும், மதியம் சாப்பாட்டு வேளையில் போன் செய்து பேசுவான். கம்பீரமாக, அழகாக இருப்பான்.
அவனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக, பெண் பார்த்து வந்தோம். ஒருநாள் மதியம், போன் செய்து, 'சாப்பிட்டீர்களா? நான் இப்போது தான் சாப்பிட போகிறேன். சாப்பிட்ட பின், பேக்டரிக்கு போகணும். சாயந்திரம் பார்ப்போம்...' என்று கூறினான்.
சிறிது நேரத்தில், அவன் போனில் பேசிய ஒருவர், 'உங்கள் மகன் விபத்து ஒன்றில் சிக்கி, மயக்கமாக உள்ளான்...' என்று தகவல் தெரிவிக்க, பதறி அடித்து ஓடினோம். மருத்துவமனையில், தலையில் கட்டுடன் ஆபத்தான நிலையில் இருந்தவனைப் பார்த்து, கதிகலங்கி போனோம்.
காலை, 7:00 மணிக்கு வேலைக்கு போன மகன், மாலை, 7:00 மணிக்கு, சடலமாக வீடு சேர்ந்தான். அவனது இழப்பை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. இந்த அதிர்ச்சியில், கணவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு, படுத்த படுக்கையானார். நானும், நடை பிணமாக இருந்து வருகிறேன்.
யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காத எங்களுக்கு ஏன் இந்த நிலைமை என, வருந்தாத நாட்கள் இல்லை.
அக்கம்பக்கத்தினர் உதவியாக இருந்தாலும், மனது நிலை கொள்ளாமல் தவிக்கிறது. மனதுக்கு ஆறுதல் கிடைக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும், சகோதரி.
— இப்படிக்கு, உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
உங்களின் ஒரே மகனை விபத்தில் இழந்து தவிப்பது புரிகிறது.
சகோதரி! வாழ்க்கை ஒரு கேள்வி, யாரும் விடை தரமுடியாது; மரணம் ஒரு விடை, யாரும் கேள்வி கேட்க முடியாது என்பர். மரணம், உயிர்களின் முற்றுப்புள்ளியா அல்லது இன்னொரு வாழ்க்கைக்கு எடுத்து செல்லும் காற்புள்ளியா? அவரவர் இறந்தால், விடை கிடைக்கும்.
மரணம், கொள்ளுத்தாத்தா, தாத்தா, தந்தை, மகன், பேரன் என்ற வரிசையில் வந்தால், இழப்பு கொஞ்சமாய் வலிக்கும். வரிசை மாறினால் ஒப்பாரியில் வானம் வெடிக்கும். இந்த உலகத்தில் இலவசமாக கிடைப்பது அறிவுரை தான்.
உங்களுக்கு மிக எளிதாக நான் அறிவுரையும், ஆறுதலும் கூறிவிட முடியும். என் வார்த்தைகள் உங்களுக்கு ஆறுதல் அளிக்குமா என தெரியவில்லை. இனி, நீங்கள் செய்ய வேண்டியது...
* படுத்த படுக்கையாய் கிடக்கும் கணவருக்கு தகுந்த மருத்துவம் பார்த்து, 'பிசியோதெரபி' கொடுத்து, மீண்டும் அவரை நடமாட வையுங்கள். நீங்களும் துக்கங்களை தொலைத்து மீண்டு வாருங்கள்.
* மகன் வயதுள்ள உறவினர் பையன் யாரையாவது மானசீகமாக தத்தெடுத்து, பாசமழையால் அவனை நனைய வையுங்கள்.
* அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு நேரில் சென்று, ஒருநாள் செலவை, 'ஸ்பான்சர்' செய்யுங்கள்.
* மாதம், ஐந்து இளைஞர்களுக்கு, 'ஹெல்மெட்' வாங்கிக் கொடுத்து, மிதமான வேகத்தில் செல்ல அறிவுறுத்துங்கள்.
* நீங்களும், உங்கள் கணவரும் தனிமையில் இருந்தால், துக்கம் பலமடங்காகும். வெளியில் எங்காவது சென்று வாருங்கள்.
* உறவினர், நண்பர் வீட்டு திருமணங்களுக்கு சென்று, அட்சதை துாவி மணமக்களை வாழ்த்தி விட்டு வாருங்கள்.
* உங்களுக்கு விருப்பமானதை செய்து, துக்கத்தை மறக்க முயற்சியுங்கள்.
— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.