
பாண்டிச்சேரியில் இருந்தபோது, வீதி வழியே நடந்து சென்று கொண்டிருந்தார், பாரதியார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார், ஆசிரியர் ஒருவர்.
ஆசிரியர் சொல்வதை, மாணவர்கள் திருப்பிச் சொல்ல வேண்டும்.
'இளமையில் கல்' என்று, ஆசிரியர் கூற, ஒருமித்த குரலில் கூறினர், மாணவர்கள்.
நடந்து சென்று கொண்டிருந்த, பாரதி சட்டென்று நின்று, 'முதுமையில் மண்' என்று உரக்க கூறினார்.
இளமையில் கல் என்ற உடன், முதுமையில் மண் என்ற சொற்றொடர் கணப்பொழுதில் நெஞ்சத்தில் அமர்ந்து, புடைத்து பாரதியின் உதடுகளில் வெடித்து விட்டது. ஆனால், எவ்வளவு பொருள் பொதிந்த சொல்.
இளமையில் கற்பது, கல்லில் மேல் எழுதிய எழுத்துப் போல நிலைத்து தங்கிவிடும். முதுமையில் கற்கும் கல்வி, மணல் மீது எழுதியது போல் கலைந்துவிடும்.
இளவயது உடல், கல் போல் உறுதியாக இருக்கும். முதுமையிலோ உடம்பு, நரை, திரை கூடி மண் போல் நெகிழ்ந்து தளர்ந்து விடும். இளமையில் கல் போல் இருக்கும் இந்த உடம்பு, முதுமை அடைந்து மரணமுற்று மண்ணோடு மண்ணாகிறது என்ற அர்த்தத்தில், முதுமையில் மண் என்று குறிப்பிட்டார், பாரதி.
*****
ஒருமுறை, வரி கட்டுவதற்காக அரசாங்க அலுவலகம் ஒன்றிற்கு சென்றிருந்தார், எடிசன்.
அப்போது வரிசையில் நின்று, கவுன்டர் அருகில் சென்றதும், அங்கிருந்த பணியாளர், இவரிடம் அவர் பெயரை கேட்டார். பெயர் மறந்து போய், திருதிருவென்று முழித்தார், எடிசன்.
அப்போது, 'என்ன எடிசன்... வந்த வேலையைப் பார்க்காமல் ஏதோ சிந்தனை செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என, அவரது நண்பர் கேட்டதும் தான், தன் பெயர் அவருக்கு ஞாபகம் வந்தது.
****
ஒருமுறை, வெற்றிலை பாக்கு வியாபாரிகள் சங்கத்தார் நடத்திய நிகழ்ச்சிக்கு, ஈ.வெ.ரா.,வை அழைத்தனர். அவரும் அந்நிகழ்ச்சிக்கு சென்றார். ஈ.வெ.ரா.,வைப் பாராட்டி பேசினர்.
இறுதியாக பேச துவங்கியவர், 'நீங்கள், கூப்பிட்டீர்கள். தட்ட முடியாமல் நான் வந்திருக்கிறேன். நான் வரவில்லை என்றால் ரொம்ப வருத்தப்படுவீர்கள். எனக்கு வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் கிடையாது.
'ஆனாலும், நீங்கள் என்னை அழைத்துள்ளீர்கள். நான் சில கருத்துக்களை சொல்கிறேன். ஏன்டா இவனை போய் கூப்பிட்டோம் என்றும் வருத்தப்படாதீர்கள். வருத்தப்பட்டாலும் பரவாயில்லை.
'நீங்கள் புகையிலை விற்கிறீர்கள். அதை சாப்பிடுவதால் தான், பொதுமக்களுக்கு புற்றுநோய் வருகிறது. நீங்கள் பல இடங்களில் வெற்றிலைப் பாக்கு கடை வைத்திருப்பதால், அவனவன் வெற்றிலைப் பாக்கு வாங்கிப் போட்டு, கண்ட இடத்தில் எச்சிலை துப்புகிறான்.
'முதலில் நீங்களெல்லாம் இந்த தொழிலை விட்டு விட்டு, வேறு நல்ல தொழிலை செய்யுங்கள்...' என்றார், ஈ.வெ.ரா.,
இதற்கும் அவர்கள் கை தட்டினர்; அதுதான் வேடிக்கை!
நடுத்தெரு நாராயணன்