sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்

/

அன்புடன் அந்தரங்கம்

அன்புடன் அந்தரங்கம்

அன்புடன் அந்தரங்கம்


PUBLISHED ON : அக் 27, 2024

Google News

PUBLISHED ON : அக் 27, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 37 வயது பெண். படிப்பு: பி.ஏ., கணவர் வயது: 45. எண்ணெய் வியாபாரம் செய்கிறார். சொந்தமாக எண்ணெய் எடுக்கும், 'செக்கு' வைத்துள்ளார். எங்களுக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர். பள்ளியில் படித்து வருகின்றனர்.

மாமனார் - மாமியார், கணவரது தம்பி, அவர் மனைவி என, கூட்டு குடும்பமாக வசித்து வருகிறோம். கணவருடன், அவரது தம்பியும் இணைந்தே எண்ணெய் வியாபாரம் செய்து வருகின்றனர்.

வரவுக்கு, செலவுக்கும் சரியாக இருக்கும். சொந்தமாக ஓட்டு வீடு ஒன்று இருக்கிறது. ஆனாலும், குழந்தைகளின் படிப்பு செலவுக்கு அவ்வப்போது கடன் வாங்குவதும், திருப்பி செலுத்துவதுமாக இருப்போம்.

கூடுதல் வருமானத்துக்காக, மகளிர் சுய உதவி குழுவில் இணைந்தேன். மளிகை பொருட்கள் மொத்தமாக வாங்கி வந்து, சிறு சிறு பாக்கெட்டுகளாக போட்டு, கொஞ்சமாக லாபம் வைத்து விற்றோம்.

பண்டிகை தினங்களில், ஜாக்கெட் பிட், புடவையை மொத்தமாக வாங்கி விற்பது, மண்புழு உரம் தயாரிப்பது என, பல தொழில் செய்து, வருமானம் ஈட்டி வந்தோம். ஆனாலும், பற்றாக்குறை தான். சீட்டு நடத்த தீர்மானித்து, நான், மகளிர் குழுவில் இருந்து விலகினேன். அக்கம்பக்கத்து வீட்டு பெண்களிடம் மாதாந்திர சீட்டு பணம் பிடிக்க ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் ஆர்வமாக சேர்ந்தவர்கள், பணம் கட்டாமல் இழுத்தடித்தனர். பணம் கட்டியவர்களுக்கு உரிய தொகையை திருப்பி கொடுக்க முடியாமல் திண்டாடினேன். சீட்டு கட்டியவர்கள் நெருக்க ஆரம்பித்தனர்.

கணவரிடம் சொல்ல, ஏகத்துக்கு திட்டி தீர்த்தார். கடன் வாங்கி, ஒரு வழியாக பணத்தை திருப்பி கொடுத்து மீண்டு வந்தேன். கடனை அடைப்பது என் தலையில் விடியவே, வயல் வேலைக்கும், சித்தாள் வேலைக்கும் சென்று வருகிறேன்.

குழந்தைகளை சரிவர கவனிக்க முடியாததால், படிப்பில் பின் தங்கினர். குடும்ப நிலைமை சீரடையவும், குழந்தைகளை மேற்படிப்பு படிக்க வைக்கவும், நான் என்ன செய்ய வேண்டும் என்று தக்க ஆலோசனை கூறுங்கள், அம்மா.

— இப்படிக்கு உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —

தனியாக ஒரு பெண், ஏலச்சீட்டு நடத்த வேண்டும் என்றால், அவள், 'பொம்பிளை தாதா'வாக இருந்தால் தான் நடத்த முடியும். நுாறு ரூபாய் கைமாத்து வாங்கினாலே யாரும் திருப்பித் தருவதில்லை.

தனி மனித ஒழுக்கம், சொன்ன சொல் தவறாமை ஆகிய பண்புகள், அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டிய குணங்களாக போய் விட்டன. ஒரு விஷயத்தில் உன்னை பாராட்ட வேண்டும். சீட்டு கம்பெனி திவாலாகி விட்டதாக கூறி ஊரைவிட்டு ஓடாமல், கடனை வாங்கி செட்டில் செய்ததற்கு ஒரு சபாஷ்!

அடுத்து நீ, செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...

* கூட்டுக் குடும்பமாய் நீங்கள் இருப்பது, மிகப்பெரிய சந்தோஷம். ஆனால், எண்ணெய் செக்கு வரவு, செலவு கணக்கையும், வீட்டு வரவு, செலவு கணக்கையும் தினசரி இரவு சரி பார். செக்கு எண்ணெய் வியாபாரத்தை முழுமையாக விரிவுபடுத்து. உங்கள் செக்கில் எடுக்கும் எண்ணெய்களின் தரத்தையும், மணத்தையும் மேம்படுத்து. உள்ளூரில் உங்கள் எண்ணெய் வியாபாரம் பற்றி விளம்பரம் செய்யுங்கள்.

* நீ மேற்கொண்டு தபாலில் படி. தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு போ. மாலையில் மாணவ - மாணவியருக்கு டியூஷன் எடு. சுய உதவிக் குழு பணிகளை, மாமியார் செய்யட்டும். ஒரு ஐந்தாண்டு திட்டத்தில் முதுகலை பட்டபடிப்பும், ஆசிரியர் பயிற்சியும் முடி.

* ஏலச்சீட்டு எடுத்து விட்டு, பணம் கட்டாமல் விட்டவர்களை, சாம, தான, பேத, தண்ட முறையில் நெருக்கி பணம் பெறு. பணத்தை திருப்பி செலுத்தாதவர் மீது, மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடு. பாதிக்கு பாதி பணம் திரும்ப கிடைத்து விடும்.

* வாராவாரம் சனிக்கிழமை இரவு, குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் கூடி, அந்தந்த வார பின்னேற்றம் மற்றும் முன்னேற்றங்களை விவாதியுங்கள்.

* கடன் வாங்குவது ஒரு தொற்றுநோய். கடன் வாங்காமல் தினசரி பிரச்னைகளை தீர்க்கப்பார்.

* ஆடம்பர மற்றும் தேவையற்ற செலவுகளை ஒழித்து கட்டு. கணவருக்கோ, கணவரின் தம்பிக்கோ குடிப்பழக்கம் இருக்கிறதா என ஆராய். போராடி தான் ஜெயிக்க வேண்டும். குழந்தைகளின் நடத்தை மீதும், படிப்பின் மீதும் கண்காணிப்பை தொடர். வெற்றி உனதே!

என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us