
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 44 வயது பெண். இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் வயது: 58. எலக்டீரிஷியன் வேலை செய்கிறார். நான், பிளஸ் 2 வரை படித்துள்ளேன்.
என் பெற்றோர் வயதானவர்கள். கணவருக்கு பெற்றோர் இல்லை. கணவருடன் பிறந்தவர்கள் எவருடனும் அதிக பேச்சுவார்த்தை இல்லை.
நான், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். பின், கர்ப்பப்பையில் கட்டி உள்ளதால் சிகிச்சைக்காக வேலையை விட்டு விட்டேன்.
தானே குடும்பத்தை கவனித்து கொள்வதாக கூறி, சொந்த ஊரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார், கணவர். கடையில், 50 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, என்னிடமுள்ள நகைகளை கேட்டார். நானும், கடனை அடைத்தால் போதுமென நினைத்து, நகைகளை கொடுத்தேன்.
பின், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். ஒருநாள் அவரது மொபைல் போனை எடுத்து பார்த்த போது, அவர், 'ஆன்லைன்' கடன் நிறுவனம் மூலம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியது தெரிந்து, அதிர்ந்து போனேன்.
'இரண்டு லட்சம் ரூபாயை என்ன செய்தீர்கள்?' என கேட்டால், குடும்பத்திற்கு செலவிட்டதாக கூறினார். ஆனால், அவர் கடன் வாங்கிய மாதங்களில் எல்லாம் நாங்கள் பண பற்றாக்குறையில் தான் இருந்தோம். அவர் வாய் திறந்தாலே பொய் தான் பேசுவார்.
பின்பு ஒருநாள், அவருடைய பையில் மதுபாட்டிலை கண்டேன். 'எதற்காக குடிக்கிறீர்கள்?' என கேட்டால், வேறொருவர் தன் பையில் வைத்ததாக கூறி, மழுப்பினார். 'வாட்ஸ்-ஆப்'பில் பல பெண்களுக்கு தவறான முறையில் குறுஞ்செய்தி அனுப்பியதையும் பார்த்தேன்.
இதுபோன்று அனைத்து கெட்ட பழக்கங்களும் அவரிடம் உண்டு. இதைப் பற்றி ஆதாரத்துடன் கேட்டால், 'இனி இவ்வாறு செய்ய மாட்டேன்...' என, சத்தியம் செய்கிறார். ஆனால், எனக்கு இவர் மேல் சுத்தமாக நம்பிக்கையில்லை. எனக்கு தினமும் மன வேதனையை ஏற்படுத்துகிறார்.
எனக்கு உடல் நிலையும் சரியில்லை. உறவினர்களின் ஆதரவும் இல்லை. இந்த பிரச்னையிலிருந்து எப்படி வெளி வருவது? எனக்கு நல்ல தீர்வு கூறுங்கள், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
உனக்கும், கணவருக்கும் 14 ஆண்டுகள் இடைவெளி. முதல் கோணல் முற்றும் கோணல் என்பர். திருமணத்தில் வயது பொருத்தம் மிகமிக முக்கியம்.
பொதுவாக, மின் பணியாளர்கள் மாத சம்பளத்தினரை விட, அதிகம் சம்பாதிக்கின்றனர். அவர்களுக்கு மாதத்துக்கு, 30 நாளும் வேலை இருக்கிறது. ஒரே நாளில், இரண்டு, மூன்று இடங்களில் பணி செய்வோரும் உண்டு.
சர்வசாதாரணமாக ஒரு மின் பணியாளர், மாதத்தில், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து விடுவார்.
ஏராளமான மின் பணியாளர்கள் திட்டமிட்ட வாழ்க்கை முறையை பின்பற்றி, சொந்த வீடு கட்டி, வாகனம் வாங்கி குழந்தைகளை நன்கு படிக்க வைத்து, வாழ்க்கையில், 'செட்டில்' ஆகி விடுகின்றனர்.
மேலும், 10 ஆண்டுகள் மின் பணியாளர்களாக இருந்தவர்கள், புது வீடுகளுக்கு மின் இணைப்புகள் பொருத்தும் ஒப்பந்ததாரராய் மாறி விடுகின்றனர்.
உன் கணவர், மின் பணியாளர்களில் ஒரு திருஷ்டி பொட்டு. தினம், 1,000 ரூபாய் வருமானம் வந்தால், 1,200 ரூபாய்க்கு குடிப்பார். குடி பழக்கம் வந்தால், பான்பராக் போடும் பழக்கமும், சீட்டாடும் பழக்கமும் ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும்.
இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
தபாலில் மேற்கொண்டு படித்துக் கொண்டே வேலைக்குப் போ.
கணவரை அமர வைத்து, அமைதியாக பேசு. மொத்தம் அவர் வாங்கியுள்ள கடன் தொகையை கணக்கிடு. அந்த கடன்களை அடைக்க கணவர், தினம் எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்து.
கணவர் திருந்தி வாழ, அவகாசம் கொடு. தினம் வரும் வருமானத்தை குடிக்காமல் அப்படியே உன்னிடம் வந்து கொடுக்கச் சொல். தினம் இரவு, அவரது மொபைல் போனை எடுத்து, எந்த பெண்ணுக்காவது குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறாரா என்பதை பரிசோதி.
அவரின் நண்பர்களை தணிக்கை செய்து, கெட்ட நண்பர்களை கத்தரித்து விடு.
தினம் அவர் வேலைக்கு போகும் இடங்களை, வேலைக்கு போவதற்கு முன் தெரிவிக்கச் சொல். கணவருக்கான ஊதியத்தை வேலை வாங்குபவர், உன் வங்கி கணக்கில் போட வற்புறுத்து.
உன் பிரச்னைக்கு நம்பிக்கையுடன் மருத்துவம் மேற்கொள்.
கணவர் திருந்தி வரவில்லை என்றால், சின்னவளை அவரிடம் விட்டுவிட்டு, பெரியவளை நீ அழைத்து கொண்டு, தனியே போய் விடு.
'கணவர் வாங்கின கடனுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை...' என, பகிரங்கமாக அறிவித்து விடு.
பெரும் குடிகாரன், நீண்டநாள் வாழ மாட்டான். அவனுக்காக, இரண்டு சொட்டு கண்ணீரை விட்டுவிட்டு, சுதந்திரமாக வாழ்க்கையில் இறங்கு.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

