sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : டிச 29, 2024

Google News

PUBLISHED ON : டிச 29, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா - கே

'மணி, போரடிக்குதுபா... ஆசிரியரிடம், 'பர்மிஷன்' வாங்கு. இன்று சனிக்கிழமை. வேலையெல்லாம் முடிச்சுட்டு, புதுச்சேரி கிளம்பி போகலாம். நாளை ஒருநாள், 'ரிலாக்ஸ்' செஞ்சுட்டு, திரும்பி வந்துடலாம்.

'நம்ம, கோழிப்பண்ணை நண்பர், புது கார் வாங்கியுள்ளார். 'லாங் டிரைவ்' போகலாம்ன்னு கூப்பிட்டார். நானும் ஒப்புக்கொண்டேன்...' என்றார், லென்ஸ் மாமா.

நான் தயங்கவே, 'ரொம்ப யோசிக்காத மணி... என்னைக்கும் இல்லாத திருநாளா, மாமி கூட, போக சொல்லிட்டா. 'டிரஸ்' எடுத்துக்கலையேன்னு கவலைப்படாதே. எல்லாவற்றுக்கும் நான் ஏற்பாடு செஞ்சுட்டேன்...' என்றார், மாமா.

அரைமனதாக ஒப்புக்கொண்டேன். சரியாக, மாலை, 5:00 மணிக்கு புது காருடன் வந்துவிட்டார், நண்பர். சகல வசதிகளுடன் இருந்தது, கார். நாங்கள் பின் சீட்டில் ஏறி அமர்ந்ததும், சிட்டாக பறந்தார், நண்பர்.

காலியாக இருந்த முன் இருக்கையில், ஏகப்பட்ட நொறுக்கு தீனி பாக்கெட்டுகள் குவிந்திருந்ததைப் பார்த்துவிட்டு, 'ஏம்பா... நம்ம ஐட்டம் ஒன்றும் இல்லையா?' என்று கேட்டார், மாமா.

'உங்களை மறப்பேனா, அட்டைப் பெட்டியில் தனியாக வைத்துள்ளேன்...' என்றார், நண்பர்.

மசாலா வேர்க்கடலை மற்றும் முறுக்கு பாக்கெட்டை எடுத்து என்னிடம் கொடுத்தவர், 'சிப்ஸ்' பாக்கெட் ஒன்றை பிரித்து, கொறிக்க ஆரம்பித்தார், மாமா.

முறுக்கு மற்றும் வேர்க்கடலையை ஒவ்வொன்றாக எடுத்து நண்பரிடம் சாப்பிட கொடுத்து, நானும் சாப்பிட ஆரம்பித்தேன். புது கார் பற்றியும், வேறு சில பொதுவான விஷயங்களையும் பேசிக் கொண்டே சென்றோம்.

குளிர்காலம் ஆதலால், சீக்கிரமாகவே இருட்ட துவங்கிவிட்டது. 'மெதுவா, பார்த்து போங்க...' என்றேன் நண்பரிடம்.

'நீ கவலைப்படாதே, மணி. போகும் வழியில், மரக்காணத்தில், என் மாமியார் வீடு இருக்கிறது. இரவு சாப்பாடு தயார் செய்து வைக்க சொல்லியுள்ளேன். அதை வாங்கிக் கொண்டு சென்றுவிடலாம்...' என்றார், நண்பர்.

மரக்காணத்தில், நண்பரின் மாமியார் வீட்டு வாசலில் கார் நின்றது. நண்பரின் மாமியாரும் - மாமனாரும் வந்து அன்பாக விசாரித்து, வீட்டினுள் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் நலம் விசாரித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

லென்ஸ் மாமாவும், நண்பரும் வீட்டை சுற்றிப் பார்க்க செல்ல, வெளியே, குடுகுடுப்பை சத்தமும், 'நல்ல காலம் பொறக்குது...' என்ற குரலும் கேட்டது.

'குடுகுடுப்பைக்காரர்கள் இன்னுமா இருக்கின்றனர்?' என்றேன், நான்.

'பழைய ஆளுங்க சிலர், எப்பவாவது வருவாங்க. கொடுப்பதை வாங்கிட்டு போவாங்க. அடுத்த தலைமுறையை சேர்ந்தவங்க எல்லாம் படிச்சு, வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க...' என்றார், நண்பரின் மாமியார்.

'குடுகுடுப்பைக் காரர்களுக்கு ஒரு வரலாறு இருக்கிறது...' என்று ஆரம்பித்தார், நண்பரின் மாமனார்:

'நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...' என்று, எப்போதும், நல்வாழ்த்துக்களைக் கூறும் குடுகுடுப்பைக்காரர்கள், கம்பளத்து நாயக்கர்களில், நித்திரவார் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

குடுகுடுப்பைக்காரர்கள் பல நுாற்றாண்டுகளாக நாடோடிகளாக திரிந்து, தற்போது ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ்கின்றனர்.

நள்ளிரவு நேரத்தில், ஊரே அடங்கி போனதும், தொலைவில் எங்கோ மெலிதாக, ஓசை கேட்கும். கூடவே, நாய்களின் குரைப்பொலியும், சற்று நேரத்தில் தெருமுனையில் குடுகுடுப்பையும் ஒலிக்கும்.

சித்திரை, வைகாசி மாதங்கள் தவிர, மற்ற மாதங்களில் குறி சொல்வதற்காக இவர்கள், வெளியூர் சென்று விடுவர்.

'ஒரு வாக்கு வெல்லும், ஒரு வாக்கு கொல்லும்...' என்பதில், பெரிய நம்பிக்கை கொண்டுள்ளனர். தாங்கள் சொல்வது, ஜக்கம்மா அருளால் பலிக்கும் என்பதால், யாரையும் திட்ட மாட்டார்கள்.

குடுகுடுப்பைக்காரர்களின் குலதெய்வமாக, ஜக்கம்மா இருந்தாலும், சத்தியம் செய்யும் போது, தாய் தெய்வங்களான மடப்புரம் காளி மற்றும் கொல்லங்குடி காளி மீதே சத்தியம் செய்கின்றனர்.

இரவில், குடுகுடுப்பை அடித்துக் கொண்டு, குறி சொல்லி செல்பவர்களை, சாமக்கோடாங்கி என்றும் கூறுவர்.

முன்பெல்லாம் குடுகுடுப்பைக்காரர்கள், குரைக்கும் நாய்களின் வாயைக் கட்ட, சுடுகாட்டிலிருந்து இரவு கிளம்பும் போது, கம்பளியில் ஒரு முடிச்சு போடுவராம். பிறகு, மறுநாள் காலையில் தான் அந்த முடிச்சை அவிழ்ப்பராம். இப்போது, அப்படி முடிச்சு போடுவதும் கிடையாது. சுடுகாட்டுக்கு போய் வரும் சாமக்கோடாங்கிகளும் குறைவு.

- இப்படி நண்பரின் மாமனார் கூறி முடிக்க, இரவு மணி, 7:30 ஆகியிருந்தது.

'இப்பவே நள்ளிரவு போல் இருக்கிறது. கிளம்பலாம்...' என்றேன், நான்.

இரண்டு பெரிய டிபன் கேரியரை துாக்க முடியாமல் துாக்கி வந்து, காரில் வைத்தார், நண்பர்.

நண்பரின் மாமனார் - மாமியாரிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினோம்.

சிறிது நேரத்தில், புதுச்சேரி வந்துவிட, நண்பர், 'புக்' செய்து வைத்திருந்த ஹோட்டலை அடைந்தோம்.

லென்ஸ் மாமாவும், நண்பரும், 'கச்சேரி'யை ஆரம்பித்தனர். நான், சிறிது துாரம் நடந்துவிட்டு வருவதாக கூறி சென்றேன்.

திரும்பி வந்து, வெந்நீரில் குளித்து முடித்து, 'சாப்பிடலாமா?' என்றேன்.

'உனக்காகத்தான் காத்திருக்கிறோம்...' என்று கூறியவாறே, டேபிள் முன் வந்து அமர்ந்தனர், இருவரும்.

டிபன் கேரியரை பிரித்து வைக்க, இட்லி - மிளகாய் பொடி, சப்பாத்தி - வெஜ் குருமா, ஆனியன் ஊத்தப்பம் - சாம்பார் ஆகியவை இருந்தன.

அவர்களுக்கு, தனியாக சிக்கன் கிரேவி, இறால் தொக்கு, மட்டன் சுக்கா வகைகள் அணிவகுத்திருந்தன.

'விருந்தோம்பலில் உன்னை அடிச்சுக்க முடியாதுப்பா...' என்று, நண்பரை பாராட்டினார், லென்ஸ் மாமா.

களைப்பு மற்றும் பசியில் இருந்ததால், திருப்தியாக சாப்பிட்டு முடித்தோம்.





ரயிலில் பயணம் செய்தனர், சர்தார்ஜி ஒருவரும், தமிழ்நாட்டுக்காரரும். கதவைத் திறக்க முயற்சித்தார், தமிழ்நாட்டுக்காரர்; முடியவில்லை.

வேகமாக எழுந்து வந்து கதவை திறந்து விட்டு, 'ரொட்டி சாப்பிடு பலம் வரும்...' என்றார், சர்தார்ஜி.

அடுத்து, பாத்ரூம் கதவை திறக்க முயற்சித்தார், தமிழ்நாட்டுக்காரர்; முடியவில்லை.

சுலபமாக கதவைத் திறந்து விட்டு, 'ரொட்டி சாப்பிடு பலம் வரும்...' என்று மீண்டும் கூறினார், சர்தார்ஜி.

எப்படியாவது, சர்தார்ஜிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார், தமிழ்நாட்டுக்காரர்.

ரயில் பெட்டியில், ரயிலை நிறுத்துவதற்கான அபாயச் சங்கிலியை பிடித்து இழுப்பது போல் பாசாங்கு செய்தார், தமிழ்நாட்டுக்காரர்.

வழக்கம் போல சர்தார்ஜி வந்து, அபாயச் சங்கிலியை இழுத்தார், ரயில் நின்று விட்டது.

அதிகாரிகள் வந்து சர்தார்ஜியிடம் பணம் வசூலித்தனர்.

அப்போது, 'சோறு சாப்பிடு புத்தி வளரும்...' என்று கூறினார், தமிழ்நாட்டுக்காரர்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.






      Dinamalar
      Follow us