
புவி அமைப்பின் படி, உலகில் புத்தாண்டை முதலில் வரவேற்பவர்கள், நியூசிலாந்து நாட்டு மக்கள் தான். மற்ற நாடுகள் அதன் பிறகே, நேரத்தை பொறுத்து கொண்டாடுகின்றன.
ரஷ்யா: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தை வணங்கி, புத்தாண்டை வரவேற்று, பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்கின்றனர்.
ஸ்பெயின்: டிசம்பர் 31ம் தேதி இரவு, 12 திராட்சைகளை, கடிகாரத்தில், 12:00 மணி அடிப்பதற்குள் சாப்பிட்டு முடித்து, புத்தாண்டை வரவேற்பர்.
கொலம்பியா: 12 திராட்சைகளை புத்தாண்டு பிறப்பதற்கு முன் உண்ணும் வழக்கத்தை கொண்டுள்ளனர், கொலம்பிய மக்கள். அதில், ஆறு பச்சை திராட்சை, மற்ற ஆறு சிவப்பு திராட்சை என, தேவாலயத்தில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒலிக்கும் மணியோசைக்கு ஒன்றாக சாப்பிடுகின்றனர். அதுமட்டுமின்றி, 31ம் தேதி இரவு, மஞ்சள் நிற கால்சட்டை அணிவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆஸ்திரேலியா: டிச., 31 இரவு, 12:00 மணிக்கு, தேவாலய மணி ஒலித்தவுடன், சத்தமாக டிரம்ஸ் மற்றும் டிரம்பெட்ஸ் போன்ற இசை கருவிகளில் ஒலியெழுப்பி, ஒருவருக்கொருவர் வாழ்த்தி மகிழ்கின்றனர், ஆஸ்திரேலிய மக்கள்.
சீனா: ஒரு மாதத்துக்கு புத்தாண்டை கொண்டாடுகின்றனர், சீன மக்கள். ஆண்டில் கடைசி மாத பிற்பகுதியில் துவங்கி, ஆண்டின் முதல் மாத முன்பகுதி வரை, ஒரு மாதம் புத்தாண்டை கொண்டாடு கின்றனர்.
ஜப்பான்: புத்தாண்டு நாளில், வைக்கோலால் செய்த கயிறுகளை, வீட்டின் முன்புறம் தொங்க விடுகின்றனர். இதனால், கெடுதல்கள் நீங்கி, நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர். புத்தாண்டு அன்று வாழ்த்துக்களுடன் பரிசுப் பொருள் தரும் வழக்கம், ஜப்பானியர்களிடையே உள்ளது.
புத்தாண்டு அன்று வீட்டை சுத்தம் செய்தால், அதிர்ஷ்டம் வெளியேறிவிடும் என்று நம்புகின்றனர். ஜனவரியின் முதல் மூன்று நாட்கள், மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.
பிரேசில்: அனைத்து இடங்களிலும் வண்ண விளக்குகள் ஜொலிக்க, ரியோடிஜெனிரோவில் உள்ள பூங்காவில் எல்லாரும் கூடி, வாண வேடிக்கையுடன், வெள்ளை ஆடை அணிந்து புத்தாண்டை வரவேற்று கொண்டாடுகின்றனர். கெட்ட ஆவிகளைத் துரத்த, இந்த வெள்ளை ஆடை அணிவது வழக்கமாக உள்ளது.
ஹங்கேரி: ஊரில் உள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து, வைக்கோலால் உருவம் செய்து, எரிக்கின்றனர். இப்படி செய்வதன் மூலம், சென்ற ஆண்டில் ஊருக்குள் வந்த கெட்ட சக்தி அழிந்து விடும் என்று நம்புகின்றனர்.
வட ஆப்ரிக்கா: புத்தாண்டு அன்று தீ மூட்டி அதை வணங்கிய பின், அதை தாண்டிச் செல்வர். அப்படி தாண்டும் போது, அவர்களது தவறுகள் மற்றும் பாவங்கள் தீக்கிரையாகி விடுவதாக நம்புகின்றனர்.
ஜெர்மனி: புத்தாண்டு அன்று, ஒரு சிறு பனிக் கட்டியை கீழே போட்டு உருக விடுகின்றனர். அது உருகி, இதய வடிவில் அல்லது மோதிர வடிவில் வந்தால், அந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று அர்த்தமாம். கப்பல் வடிவில் வந்தால், பயணம்; பன்றி வடிவில் வந்தால், அந்த ஆண்டு உணவுப் பொருட்களுக்கு பஞ்சம் வராது என்பது, ஜெர்மானியர்களின் நம்பிக்கை.
ரோமானியர்கள்: புது ஆண்டு பிறந்தவுடன் கருமையான, உயரமான மனிதரைப் பார்த்தால், அந்த ஆண்டு தங்களுக்கு அதிர்ஷ்டம் என்று நம்புகின்றனர்.
இங்கிலாந்து: ஜனவரி 1ம் தேதி பொழுது விடிந்ததும், கையில் ரொட்டித் துண்டும், நிலக்கரிக் கட்டியும் எடுத்து, நண்பர்கள் வீட்டுக்கு செல்வது வழக்கம். இப்படிச் சென்றால் ஆண்டு முழுவதும் உணவுக்குப் பஞ்சமே இருக்காது என்கின்றனர்.
இத்தாலி : தலைநகர் ரோமில், 40 நாட்கள் விரதமிருந்து பிறகே, ஜனவரி 1ம் தேதியைக் கொண்டாடி மகிழ்வர். கிறிஸ்துமஸ் அன்று முதல் விரதம் ஆரம்பித்து, ஜனவரி 1ம் தேதியில் விரதத்தை முடித்து, விதவிதமான இனிப்புகளை உண்டு மகிழ்வர்.
கிரிகேரியன் காலண்டர்படி, 16ம் நுாற்றாண்டு முதல், ஜனவரி 1ம் தேதி, உலகம் முழுவதும் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
*****
காலண்டர்!
'காலண்டர்' என்பதற்கு, லத்தீன் மொழியில்,
கணக்கு புத்தகம் என்று பொருள். ரோமானிய மொழியில், 'காலண்டர்' என்றால்,
மாதத்தின் முதல் நாள் என்று பொருள். அதுவே ஆண்டையும், மாதத்தையும்
குறிக்கும் நாள் காட்டிக்கும் பெயராகி விட்டது.
*****
டயரி!
ஆங்கிலபுத்தாண்டு பிறந்தால், சிலர், டயரி வாங்குவது வழக்கம். இந்த, டயரி
முதன்முதலில், 1816ல், வெளிவந்தது. அதை வடிவமைத்தவர், ஜான் லெட்ஸ் என்பவர்.
உலகின் மிகப்பெரிய, டயரி நிறுவனம், 'லெட்ஸ்' என்பது குறிப்பிடத்தக்கது.
- கவி.முத்தமிழன்.