
பாரம்பரிய கலையை காப்பாற்றலாமே!
சமீபத்தில், என் வீட்டு தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய யாரை அழைப்பது என்று தெரியாமல், என் தோழியை கேட்டேன். அவளுக்கு தெரிந்த ஒருவரின் மொபைல் போன் எண்ணை அனுப்பி வைத்தாள்.
அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு, வர சொன்னேன். இரண்டு பேர் வந்தனர். அதில், ஒருவருக்கு, 60 வயதிற்கு மேல் இருக்கும். அவர்கள் பாடிக்கொண்டே வேலை செய்தனர். அவர்களது பாட்டு இனிமையாக இருந்தது.
'இனிமையாக பாடுகிறீர்களே... நீங்கள், முறைப்படி பாட்டு கற்றுக் கொண்டீர்களா...' என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், 'நாங்கள் கூத்து கட்டி நாடகம் நடிப்போர். இப்போது, கூத்து நாடகம் எல்லாம் யாரு பார்க்குறாங்க. அதனால், எங்களுக்கு வருமானம் இல்லை. இப்படியே போனா பசியும், பட்டினியுமாதான் இருக்கணும்ன்னு இந்த வேலைக்கு வந்துட்டோம்.
'இதே மாதிரி நிறைய பேர், சொந்த தொழிலான கூத்து கலையை விட்டுட்டு, வேற வேற வேலைக்கு போறாங்க...' என்று வருத்தத்துடன் கூறினர்.
வாசகர்களே... பாரம்பரிய கூத்து கலையை அழிவில் இருந்து மீட்டு எடுக்க, ஊர் திருவிழா மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சியில் கூத்து கலையை இடம்பெற செய்ய முயற்சிக்கலாம். இந்த கலையை நம்பி உள்ளோர், வாழ்வில் முன்னேற வழி செய்யலாமே!
- கு.லதா, விருதுநகர்.
நாங்களும் வாழ வேண்டாமா?
நான், எலக்ட்ரிக்கல் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளேன். முன்பெல்லாம் வீட்டில் ஒரு பொருள் பழுதாகி விட்டால், அதை அப்படியே எடுத்து வந்து, சம்பந்தப்பட்ட மெக்கானிக்கிடம் கொடுத்து சரி செய்து செல்வர். இப்போதெல்லாம், வீட்டிலேயே பிரித்து அலசி ஆராய்ந்து, பிரச்னையை மேலும் சிக்கலாக்கி, எங்களிடம் எடுத்து வருகின்றனர்.
அதற்கு காரணம், 'யு - டியூப்' சேனலில், 'மின்விசிறி ஓடவில்லையா? செலவு இல்லாமல் சரி செய்யலாம்...' என்பது போன்ற வீடியோக்களை பார்த்து, உரிமையாளர்களே பிரித்து விடுகின்றனர்.
செலவு செய்யாமல் எப்படி சரி செய்ய முடியும் என்று எனக்கு தெரியவில்லை.
ஒரு, 'பீல்டை' பற்றி தெரியாமல் அதில் கை வைப்பது நமக்கு தான் ஆபத்து, பொருள் சேதம் ஆகும். மேலும், மின் சாதனங்களை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. உயிர் சம்பந்தமானது, ஆபத்து நிறைந்தது.
மின் விசிறி மற்றும் கிரைண்டரில், சிக்கலான மின் இணைப்பு இருக்கும். அது தெரியாமல், கை வைத்துவிட்டால், 'ஷாக்' அடிக்கும் வாய்ப்பு அதிகம்.
'யு - டியூப்' சேனல்களை நான் குறை கூறவில்லை. மின்சாதன பழுது பற்றிய அடிப்படை எதுவும் தெரியாமல், கை வைத்து ஆபத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
நாங்கள் அது சம்பந்தமாக படித்து, கடையில் எடுபிடி வேலை செய்து, தொழிலை முழுமையாக கற்று பின், சொந்தமாக ஒரு கடையை வைத்து உள்ளோம்.
நாங்களும் வாழ வேண்டாமா? யோசியுங்கள், நண்பர்களே!
- செ.ஞானபாண்டியன், புவனகிரி, கடலுார்.
ஒரே கல்லில் மூன்று மாங்காய்
கிறிஸ்துமஸ் விடுமுறையில், குடும்பத்தோடு அமெரிக்காவிலிருந்து வந்திருந்தான், நண்பரின் மகன். நண்பரது பக்கத்து வீட்டில், கல்லுாரி படிக்கும் மாணவி, விடுமுறையில் வீட்டில் இருந்தாள். அவளுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். நண்பரின் பேரக் குழந்தைகளுக்கு விளையாட்டு காண்பிப்பது வழக்கம்.
அப்பெண்ணிடம், 'தினமும், இரண்டு, மூன்று மணி நேரம் குழந்தைகளைப் பார்த்துக் கொள். அவர்களுடன் விளையாடுவதோடு, அவர்களுக்கு விருப்பமான ஏதாவது கற்றுக்கொடுக்க முடியுமா? நான் உங்களுக்கு பணம் தருகிறேன்...' என்றார், நண்பரின் மகன். அப்பெண்ணோ பணம் வாங்கத் தயங்கினாள்.
'அமெரிக்காவில், கல்லுாரி மாணவர்கள் சிலர், இதுபோல் தினமும் சில மணி நேரம் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள சம்மதித்து, தங்கள் படிப்புக்கு, பணத்தை சேமிப்பர். மற்றவர்களை விட, சற்று குறைவான தொகை வசூலிப்பர், மாணவர்கள்.
'ஆதலால், மாணவர்களிடம், குழந்தைகளை பார்த்துக் கொள்ள கூறுவதுண்டு. இதுபோன்ற மாணவர்கள், முதலுதவி செய்வதற்கான பயிற்சி எடுத்து, சான்றிதழும் வைத்திருப்பர். மிகவும் பொறுப்பாக அக்கரையோடு குழந்தைகளைப் பார்த்துக் கொள்வர்.
'மாணவர்களின் பெற்றோரும், தங்கள் மகன் அல்லது மகள் நேரத்தை வீணடித்து, கெட்ட சகவாசம், தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடாமல் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதை மிகவும் விரும்புவர்...' என்றார்.
அதை ஏற்று, குழந்தைகளை கவனித்துக் கொண்ட மாணவிக்கும், கணிசமான தொகை கிடைத்தது. குழந்தைகளின் பெற்றோருக்கும் தங்கள் வேலைகளை கவனிக்க நேரம் கிடைத்தது. குழந்தைகளும் விளையாட்டுப் போக்கிலேயே சுலபமாக நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டனர். இப்படி ஒரே கல்லில், மூன்று மாங்காய்.
வாய்ப்பு கிடைத்தால், நாம் கூட இது போன்ற முறையைத் தேவையானபோது பின்பற்றலாமே!
- மீனலோசனி பட்டாபிராமன், சென்னை.