
பா - கே
'தினமலர்' நாளிதழ், பெங்களூரு பதிப்பு அலுவலகத்தில் பணிபுரியும் செய்தி ஆசிரியர் ஒருவர், ஆசிரியரை சந்திக்க சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவருடன் பேசும்போது, 'பெங்களூரு வாசம் எப்படி இருக்கிறது?' என்றேன். 'இந்தியாவிலேயே, மும்பைக்கு அடுத்து, சுபிட்சமான நகரமாக பெங்களூரு மாறிவிட்டது, மணி...' என்றவர், தொடர்ந்து கூற ஆரம்பித்தார்: ஐ.டி., நிறுவனங்கள் நிறைந்து, 'ஹை-டெக்' சிட்டி மட்டுமல்லாமல், நெருக்கடி மிகுந்த நகரமாகவும் காணப்படுகிறது. இளைய தலைமுறையினர், இங்கு வர துடிக்கின்றனர். அதற்கேற்ப, விதவிதமான வசதிகள் ஏற்படுத்தப் படுகின்றன.
கடந்த, இரண்டு ஆண்டுகளில், பெங்களூரில் புதிய அலையாக உணவகத்துடன், நுாலகங்களும் திறக்கப்படுகின்றன. பெங்களூரு சாகர் நகரில், கடந்த, 2023ல், முதன் முதலில் நுாலகத்துடன், 'கிதாப்' என்ற உணவகம் திறக்கப்பட்டது.
இங்கு, 3,500 புத்தகங்கள் உள்ளன. கன்னடம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி புத்தங்கங்கள் இதில் அடக்கம். இவற்றில், 30 சதவீதம் குழந்தைகளுக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
புத்தகங்களை படித்தபடியே, உணவை சுவைக்க ஏதுவாய் சீன, கான்டினென்டல் மற்றும் தாய்லாந்து உணவு வகைகள் கிடைக்கும். இலவச, 'வை-பை' வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மருத்துவ முகாம்கள், கலை வகுப்புகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளையும் வழங்கும்.
இந்திரா நகரில், கடந்த 2024ம் ஆண்டு முதல், 'காமிக்ஸ் கபே' இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில், காமிக்ஸ், நாவல்கள், வணிகப் பொருட்கள் மற்றும் பழம்பொருள் சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
'பேட்மேன், ஸ்பைடர் மேன், டி.சி.மார்ஷெல்' தலைப்புகளில் பிரபல ஆங்கில கார்ட்டூன் புத்தகங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தகங்களை வீட்டுக்கு வாங்கி சென்று, படித்து திருப்பி தரும் வசதியும் இங்கு உண்டு.
வாரத்திற்கு, 250 ரூபாய் அல்லது ஒரு நாளைக்கு, 100 ரூபாய்க்கு உணவு, 'ஆர்டர்' செய்தும், புத்தகங்களை வாடகைக்கு எடுக்கலாம்.
இந்த ஹோட்டலில் சனிக்கிழமைகளில், மினியேச்சர் ஓவியம் மற்றும், '3டி பிரின்டிங்' போன்ற பட்டறை பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
கம்மனஹள்ளி, 'ஸ்டோரி காபி' என்ற உணவகம், 2023ல், துவங்கப்பட்டது. இது, சினிமாவை சுற்றி இயங்குகிறது. இங்கு, ஹாரிபாட்டர், லார்ட் ஆப் தி ரிங்ஸ், இன்பர்னோ ஷைனிங் உட்பட சினிமாவாக எடுக்கப்பட்ட, சுமார் 100 நாவல்களின் தொகுப்புகள் உள்ளன.
நாவல்கள், திரைப்படத்துறை சம்பந்தமான வரலாற்று நுால்கள், கலைக்களஞ்சியங்கள் மற்றும் காபி டேபிள் புக்ஸ் என, எல்லா வகை புத்தகங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. 80 - 90 ஆண்டுகளில் புகழ்பெற்றிருந்த ராக் இசை நிகழ்ச்சி, அதே ஸ்டைலில் நடத்தப்படுகிறது. இலவச, 'வை-பை' வசதிகளையும் வழங்குகிறது.
பெங்களூரு ஜே.பி. நகரில், 'பேக்கு கபே' என்ற உணவகத்தில், 2,000 புத்தகங்களுடன் பேக்கரி பொருட்களை வழங்குகிறது. பெண்ணீய மற்றும் ஓரினச் சேர்க்கை பற்றிய புத்தகங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தக வாசிப்பு மற்றும் பட்டறை பயிற்சி போன்றவையும் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் சில நெடுஞ்சாலைகளில், அமைந்துள்ள, 'மோட்டல்'களில் உணவு வகைகள் விற்பனையோடு, பேக்கரி பொருட்கள், பழம் பொருட்கள் மற்றும் சிறுதானிய உணவு வகைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. நகரங்களில், உணவகங்களில் விரைவில் இதுபோன்ற நுாலகங்கள் மற்றும் பயிற்சி பட்டறை வகுப்புகள் ஏற்படுத்தபடலாம்.
- எனக் கூறி முடித்தார், செய்தி ஆசிரியர். 'மணி... ஆசிரியரிடம், 'பர்மிஷன்' வாங்கு. இரண்டு நாட்கள் பெங்களூரு சென்று வரலாம்...' என்றார், லென்ஸ் மாமா. உணவகங்களில், நுாலகம் வைத்திருப்பது போல், அங்குள்ள, 'பார்'களில் என்ன மாற்றம் வந்திருக்கும் என்று தெரிந்து கொள்வதற்கு தான் மாமா இந்த, 'பிட்' போடுகிறார் என, புரிய, மையமாக தலையசைத்தேன்.
ப
ஜப்பானில், ஐஸ்கிரீம் கண்டுபிடிக்கப்பட்ட நேரம். பெரிய கம்பெனி ஒன்று, நிறைய ஐஸ்கிரீம்களை தயாரித்து அனுப்பியது; அது, நிறைய விற்பனையும் ஆனது. ஆனால், அவர்களுக்கு என்ன பிரச்னை என்றால், இந்த ஐஸ்கிரீம் வைப்பதற்கான கண்ணாடி பாத்திரங்கள், கண்ணாடி கப்களை நிறைய தயார் செய்ய வேண்டியிருந்தது.
விற்பனை செய்வதற்கும், அங்கு வருகிறவர்களுக்கு பரிமாறுவதற்கும் இவை தேவைப்பட்டன. கண்ணாடி கப்களை பாதுகாக்க முடியவில்லை என்பது, அடுத்த பிரச்னை. கையாளும் போது அடிக்கடி உடைந்து போயின. வெளி இடங்களுக்கு அனுப்பும் போது சேதாரம் அதிகமானது.
வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட பின், கண்ணாடி கப்களை சுத்தமாக கழுவி வைக்க வேண்டும். சரியாக கழுவவில்லை என, நிறைய புகார்களும் வந்தன. இத்தகைய காரணங்களால், ஐஸ்கிரீம் விற்பனையில் தேக்கநிலை உருவானது.
உடனே, ஐஸ்கிரீம் நிறுவனத்தாரும், ஊழியர்களும், கண்ணாடி கப்களுக்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டுமே என்ற யோசனையில் இறங்கினர்.
'கப்பை, பிளாஸ்டிக்கில் செய்யலாம். அப்படி செய்தால் அதை அப்படியே துாக்கி எறிந்து விட்டு போகலாம்...' என்றார், ஒருவர்.
'கனமான அட்டையில் பண்ணலாம்...' என்றார், இன்னொருவர்.
அப்போது, நெற்றியை தடவி கொண்டு யோசித்து கொண்டிருந்த ஒருவருக்கு, திடீர் யோசனை ஒன்று தோன்றியது.
'கப்பிலே ஐஸ்கிரீம் வைத்து கொடுக்கிறோம். அந்த கப்பையும் சேர்த்து சாப்பிடுகிற மாதிரி தயார் செய்தால், ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் அந்த கப்பையும் சேர்த்து சாப்பிடுவர். பிரச்னை அத்துடன் முடிந்து போய் விடும்...' என்றார்.
எல்லாருக்கும் அந்த யோசனை சரியாக பட்டது. பிஸ்கட்டால் ஆன கப்களை தயாரித்தனர். அது தான் தற்போது, நாம் சாப்பிடும், கோன் ஐஸ்கிரீம்.
- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது!

