
கே.காசி, வந்தவாசி: 'மருத்துவமனைக்கு வருவோர், இனி நோயாளி அல்ல; மருத்துவ பயனாளி...' என்கிறாரே, முதல்வர்?
இதுபோன்ற பெயர் மாற்றங்களால், மக்களுக்கு ஒரு பயனும் இல்லை. அரசு மருத்துவமனைகளையும், மருத்துவர்களின் தகுதியையும் மேம்படுத்த வழி வகுத்தால் தான், நோயாளிகள் நிஜத்தில் பயனாளிகள் ஆவர்!
**********
ஜி.பாக்கியலட்சுமி, பாலக்காடு: பணம், பதவி, புகழ் - இதில் எது சிறந்தது?
படிப்பு - படிப்பு இருந்தால் நீங்கள் கூறிய அனைத்தும் உங்களை பின்தொடரும். அதற்கு நீங்கள் கடுமையாக உழைக்கவும் தயாராக இருக்க வேண்டும்!
*********
* ப.சோமசுந்தரம், சென்னை: சீனாவின் நில ஆக்கிரமிப்பு பற்றிய, காங்., ராகுலின் சர்ச்சை பேச்சுக்கு, 'ஒரு உண்மையான இந்தியன் இப்படி பேச மாட்டான்...' என, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறதே...
'இந்திய பொருளாதாரம் இறந்து விட்டது; என்னால் தான், பாக்., - இந்தியா போர் நின்றது...' என்ற, அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சுக்கெல்லாம், 'ஆமாம் சாமி' போட்டு, ராகுலும், இன்னொரு டிரம்ப்பாக உருவாகிறார். மக்கள் இவரை நம்பி ஆட்சியை கொடுப்பரா என்ன?
**********
பெ.பொன்ராஜ பாண்டி, மதுரை: பீஹாரை சேர்ந்த, 65 லட்சம் பேர், தமிழக வாக்காளர்களாக சேர்க்கப்பட உள்ளனர் என்ற செய்தி கேட்டு, தி.மு.க., கூட்டணி கட்சிகள் பதறுவதேன்?
அவர்களின் ஓட்டுகள் யாவும், பா.ஜ., ஓட்டுகளாக மாறி விடுமோ என, ஒரு பக்கமும்; அவர்களிடம் எந்த மொழியில் பேசி, ஓட்டு கேட்பது என, மற்றொரு பக்கமும் பயம் பற்றிக் கொள்கிறது. ஆனால், பீஹாரிலிருந்து இங்கு வந்து பணி செய்பவர்களுக்கு தமிழ் நன்றாக புரியும்; பேசவும் தெரியும் என்பது, தி.மு.க.,வினருக்கு புரியவில்லை!
***********
டி.சிவகுமார், திண்டுக்கல்: வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள், காங்கிரஸ் காலத்திலிருந்தே உள்ளது தானே...
ஆமாம். 1980ல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், காங்., சோனியா பெயர் இடம் பெற்றிருந்தது. அந்த காலத்தில் அவர், இந்திய பிரஜையாகவே இல்லை. மூன்றாண்டு கடந்த பின்பே, அதுவும், பிரச்னை வெளியில் தெரிந்த பிறகே, இந்திய குடியுரிமை பெற்றார்!
************
எஸ்.இந்திராணி, புவனகிரி: 'கஞ்சா, கள்ளச் சாராயத்தை, மத்திய அரசு தான் தடுக்க வேண்டும்...' என்ற, அமைச்சர் ரகுபதியின் கருத்து சரியா?
மாநில அரசின் இயலாமையை வெளிப்படுத்தி விட்டார், அமைச்சர் ரகுபதி. தேவையில்லாத திட்டங்களுக்கு நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பதை நிறுத்தி, இதுபோன்ற சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வழியைப் பார்ப்பது நல்லது!
************
எம்.ராஜேந்திரன், திருச்சி: தண்ணீர் லாரியாலும், மணல் லாரியாலும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறதே...
பெரும்பாலானவை காலாவதியான, காயலான் கடைக்கு போக வேண்டிய வாகனங்கள். 'பிரேக்' கூட பிடிக்காது. அவற்றை அசுர வேகத்தில் ஓட்டுகின்றனர். அதனால், விபத்துகள் பெருவாரியாக ஏற்படுகின்றன. ஓட்டுனர்களை கைது செய்வதை விட, ஒப்பந்ததாரர்களை கைது செய்தால் திருந்துவர்!
**********
* ஜி.ராஜ், மயிலாடுதுறை: நாய்க்கடியிலிருந்தும், நாய் பெருக்கத்தையும் தவிர்ப்பது எப்படி?
பொது இடங்களில் இறைச்சி மற்றும் ஆபரேஷன் செய்து அப்புறப்படுத்தப்படும் உடல் கழிவுகளை கொட்டாமல் தவிர்த்தல்; நாய்களுக்கு, 'ரேபிஸ்' தடுப்பூசி போடுதல்; கருத்தடை செய்தல்; முன்பு அமலில் இருந்தது போல், குடியிருப்பு பகுதிகளிலிருந்து நாய்களை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகளை, அவசர காலமாக அரசு மேற்கொள்ள வேண்டும்!

