sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

எனக்குத்தான்!

/

எனக்குத்தான்!

எனக்குத்தான்!

எனக்குத்தான்!


PUBLISHED ON : ஆக 24, 2025

Google News

PUBLISHED ON : ஆக 24, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''வீட்டில் இருக்கிற அத்தனை கதவுகளையும் அடைத்தாலும் சரி என்பீர்கள். அப்போது, ஆக்சிஜன் பிரச்னை வராது. இந்த ஜன்னல் கதவை மூட மட்டும் இணங்க மாட்டீர்கள். அப்படி இந்த ஜன்னலில் என்ன மர்மம் பின்னிக் கிடக்கிறதோ,'' என, அலுத்துக் கொண்டாள், ரூபா.

ஜன்னலின் கொக்கி ஒன்றில் தொங்கிக் கொண்டிருந்த முகம் பர்க்கும் கண்ணாடி முன் நின்று, 'ஷேவிங்' செய்து கொண்டிருந்தான், ராஜேஷ்.

''இதுக்கு ஒன்றும் குறைச்சலில்லை. ராஜேஷ் பி.இ., - எம்.பி.ஏ., அவர்களே! ஜன்னலுக்கு அந்த புறம் மறைந்திருந்து பார்க்கும் சாயாவின் கண்களில் படத்தானே இந்த வேஷம்?'' ரூபாவின் அடுத்த அதிரடி.

கடந்த சில தினங்களாகவே, ரூபா இப்படிதான், தன் கணவர் ராஜேஷை சந்தேகப்பட்டு சாட்டையை சுழற்றிக் கொண்டிருக்கிறாள்.

''இப்ப என்ன சொல்கிறாய், ரூபா? இந்த மீசை வேண்டாமா? இதை உருவி போட்டு விடட்டுமா?'' என, பயம் காட்டினான், ராஜேஷ்.

''அய்யய்யோ, வேண்டாம். அந்த அனர்த்தத்தை மட்டும் செய்து விடாதீர்கள். விளக்கெண்ணெய் வழியும் உங்கள் சாது முகத்திற்கு, இந்த அடர்ந்த மீசை மட்டுமே துணைவன். எனக்காக வைத்துக் கொண்ட மீசையை, சாயாவுக்காக, வழித்து விடாதீர்கள்.''

''ஆஹா, யார் அந்த சாயா? கோடிக்கடை டீக்கார நாயரின் சாயா கடை பெண்ணா?'' கண் சிமிட்டினான், ராஜேஷ்.

''அடடா, என்ன நடிப்பு, மிஸ்டர் ராஜேஷ். சாயா அடுத்த வீட்டிற்கு குடி வந்ததிலிருந்து, அலுவலக நேரம் போக, உங்கள் தலையும், கண்களும் இந்த ஜன்னலிலேயே தவம் கிடப்பது எனக்கு தெரியாதா?''

''இது என்ன அபாண்டம், ரூபா. நம் வீட்டின் கிழக்கு பக்கத்து, 'ரதி' பிளாட்டில் யார், யாரோ குடி வருகின்றனர். அதற்காக நம் வீட்டு ஜன்னலை சுவர் எழுப்பி, மூடி விடவா முடியும்?''

''தெரியும், தெரியும். நீங்க பெண்கள் விஷயத்தில் கொஞ்சம், 'வீக்' தான். அதை எங்கம்மாவும் கண்டுபிடித்து விட்டாள். உம்ம, ஜாதகப்படி, ஆள் ஒரு மாதிரிதானாம்.''

''இருக்கட்டும், தெரிந்தும் ஏன் கழுத்தை நீட்டினாய்?''

''உங்கள் படிப்பும், விவேகமும் தான், என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. அது மட்டுமா? ஆறு இலக்க வருமானம், அயல்நாட்டுக்கு போக கூடிய வசதி, இது எல்லாம் என்னை இறுகப் பற்றிக் கொண்டு விட்டன.''

''ரூபா, நானும், உன் அழகிலும், அறிவிலும் சொக்கித்தான் உன்னோடு இணைந்தேன். இப்ப எதற்கு வீண் புயலைக் கிளப்புகிறாய்? அமுதும், தேனும் எதற்கு, நீ அருகில் இருக்கையிலே...''

இதெல்லாம் அடிக்கடி எழும் சண்டைகள் தான். ராஜேஷ் ரசித்தாலும், அவை, அவன் பணியின் பாதையை மறைக்காமல் இருக்க உறுதி செய்து, அலுவலகம் போனான்.

ரா ஜேஷ் வேலை பார்க்கும் அலுவலகம், ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பிராந்திய கிளை. இதில், அவன் தான் தலைவன், அவனது கல்விக்கும், திறமைக்கும் ஏற்ற ஊதியம் வாரி வழங்கப்படுகிறது.

மக்களை ஈர்த்து, விற்பனையில் கோபுரம் அமைக்கும் மார்க்கெட்டிங் பிரிவுக்கு அவன், 'ஹெட்!' மார்க்கெட்டிங் சார்பாக அந்த ஒரு வாரத்திற்கு இசை கச்சேரி மற்றும் நடனம், மேற்கத்திய இசை நிகழ்ச்சிகளை நடத்தி, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பணியில் அரங்கம் ஒன்றில் ஈடுபட்டிருந்தான்.

நிகழ்ச்சியின் துவக்க நாளன்று, த்யோத்ஸ்னா தேவியின் கர்நாடக இன்னிசை. அன்று மாலை, 5:00 மணிக்கே வீட்டுக்கு கிளம்பினான். ரூபாவும் அதிகமில்லாத, 'மேக்-அப்'புடன் இருந்தாள்.

காரை விட்டு இறங்கி, வீட்டுக்குள் நுழைந்த வண்ணம், ''ஹாய், ரூப், ஸவரூப்,'' என, செல்ல குரலில் அழைத்தபடியே வந்தான்.

அங்கே ரூபாவுடன், அவனது அம்மா, தேவாம்பிகை பேசி கொண்டிருந்தார்.

''எப்போம்மா வந்தீங்க?'' என வினவினான், ராஜேஷ்.

''மதியம் வந்தேன்ப்பா. அது, இருக்கட்டும் உனக்கும், ரூபாவுக்கும் என்ன மனத்தாங்கல்?'' என, வினவினார்.

''ஒண்ணுமில்லம்மா. நாங்க ரெண்டு பேரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்.''

''நல்லா இருக்குப்பா, நடிப்பு. நீ இப்ப அடிக்கடி அந்த ஜன்னல்கிட்டையே உட்கார்ந்துகிட்டு சைகை காட்டறியாம், கையைக் குலுக்கறயாம்,'' என, குறைபட்டு கொண்டார்.

''அதெல்லாம் ஒன்றும் இல்லம்மா. உன் பிள்ளை, என்றும் உன் பிள்ளை தான். அதிலே எந்த மாசும் கலக்காது. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்ன்னு, நீதானே எனக்கு தமிழ் போதிச்ச.''

கலையரங்கம் களை கட்டியிருந்தது.

குடும்ப சகிதமாக வந்து இறங்கினான், ராஜேஷ். விழா வாசலில் அவனை எதிர்கொண்டு, ராஜேஷின் நேர்முக உதவியாளர், ஜெயந்தி, அவனை மலர்க்கொத்துடன் வரவேற்றாள்.

ரூபாவின் கண்கள் விரிந்தன. அவை, ஜெயந்தியின் கமலக்கண்களுடன் ஒரு வினாடி மோதி சென்றது.

''ரூபா, மீட் மிஸ் ஜெயந்தி. என் பி.ஏ., வெரி ஸ்மார்ட்,'' என, மனைவிக்கும், அம்மாவுக்கும் அறிமுகப்படுத்தினான்.

அம்மாவின் முகத்தில் அற்புதமான அமைதி. ரூபாவின் வதனம் தணலாக மாறியது. அதில், எள்ளும் கொள்ளும் வெடித்தன. அவை, சொல்லொணாத அருவருப்பை தாளித்து வழங்கின.

விழா முடிந்து வீடு திரும்பியதும், மனைவியின் மோதலுக்கு தன்னை திடப்படுத்தி கொண்டான், ராஜேஷ்.

''நான் உங்களை ஒன்று கேட்கணும். அது என்ன எங்க போனாலும், பெண்கள் சகவாசம் உங்களை விட மாட்டேன் என்கிறதே,'' என, கத்திரி வெயிலாய் தகித்தாள், ரூபா.

''ச்சீ, அசடே, ஜெயந்தி ஒரு பக்கா புராபஷனல்; என் நம்பிக்கைக்குரிய பி.ஏ.,''

''திரும்பத் திரும்ப உங்களால் ஏதாவது பிரச்னை வந்து கொண்டே இருக்கிறது,'' என, கத்தினாள், ரூபா.

பிரபஞ்சத்தில் பிரச்னைகளுக்கு என்ன பஞ்சம் என, எண்ணியபடி, மவுனமாக துாங்கப் போனான், ராஜேஷ்.

புதுமையும், பாரம்பரியமும் கலந்த பன்முகப்பாவை, ரூபா. நீதிமன்றத்திலே தேர்ந்த வழக்காடும் வக்கீல். பெண்ணுரிமையை நிலை நாட்டும் பல வழக்குகளில் நீதிபதிகளே அசந்து போகும் அளவுக்கு, வாதத்தில் ஒரு வல்லமை, ஜொலிப்பு. அதே சமயம் உடும்பு பிடிவாதம்.

பண்டிகைகளை அவள் கொண்டாடும் மாண்பு, ராஜேஷின் அம்மாவையே ஈர்த்து விடும். அதன் கலை நயம் காண்போரை வியப்பில் ஆழ்த்தும்.

அன்று மாலை வீட்டில் இருந்தபடியே தன் மார்க்கெட்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தான், ராஜேஷ்.

பின்புறம் தோட்டத்தில், ரூபா, வேலைக்காரி விமலாவை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது புரிந்தது.

''இந்த நேரத்தில் ஏன் வந்தே. இதெல்லாம் எனக்கு பிடிக்காது என, உனக்கு தெரியாதா?''

''இல்லம்மா, வந்து... வந்து...'' என, மென்று விழுங்கினாள், விமலா. துக்கம் தொண்டையில் அடைத்துக் கொண்டது.

''என்ன இல்லை? அய்யா ஒரு மாதிரி, அவர்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசாத. காரணம் இல்லாம அவர் முன்னே போய் அடிக்கடி நிற்காதேன்னு, எத்தனை தடவை உனக்கு ஓதுறது.''

''அம்மா அம்மா, ஐயா ரொம்ப நல்லவருமா. தங்கமான மனசு அவரை திட்டாதீங்கம்மா,'' என, இறைஞ்சினாள், விமலா.

''ஓகோ, இது புது உறவா, சகிக்கல. நீ இப்போ வந்து, 40 ஆயிரம் ரூபாய் கடனா கேட்டேயில்லை. உயிரே போனாலும் நான் உனக்கு உதவ மாட்டேன். இன்னையோட நீ வேலையை விட்டு நின்று விடு,'' என, உறுமினாள், ரூபா.

''அம்மா, அம்மா என் வீட்டுக்காரர் ரொம்ப சீரியஸா இருக்காரும்மா. உடனே குடல் ஆபரேஷன் செய்யணுமாம். இல்லாங்காட்டி பொழைக்கிறது கஷ்டம். இந்த கடனை நான், சிறுகச் சிறுக அடைச்சுடுறேன்ம்மா,'' என, விமலா கெஞ்ச, ரூபாவின் பிடிவாதம் மேலும் இறுகியது.

விமலா திரும்பி சென்றதும், அவள் மீது அனுதாபம் கொண்டான், ராஜேஷ்.

''ரூபா இங்கு நடந்ததை நான் கேட்டேன். விமலா பாவம் ஏழை. நம் வீட்டிலே பல ஆண்டுகளா வேலை செய்றாள். திருட்டு புரட்டு ஒன்றும் கிடையாது. நம்மிடம் பணம் இருக்கு. கோவில் குளத்திற்கு உதவி செய்கிற மாதிரி, அவள் கேட்ட தொகையை கொடுத்து விடேன். சிறுகச் சிறுக அடைத்து விடுவாள்,'' என, பரிந்துரை செய்தான்.

''அதானே சங்கதி. அப்போதே நினைச்சேன். அழகான பெண் யாராவது உங்க கண்ணுல பட்டுட்டா, எல்லாவித பரிந்துரைகளும் செய்ய வந்துடுவீங்கன்னு எனக்கு தெரியும். இன்னைக்கு, விமலாவின் சீட்டை கிழிச்சுட்டேன்,'' என்றாள்.

பின்புறம் திரும்பி, ஓய்வாக இருந்த அவள் மாமியாரிடம், ''ஏன் அத்தை. உங்க பிள்ளை பண்ற சேட்டை எல்லாம் பாத்தீங்களா? இவரை இந்த விஷயத்தில் எப்படி நம்புறது,'' என, பாய்ந்தாள்.

''இத பாரம்மா நீ, ஒரு பிரபல வக்கீல். சந்தேகத்தின் படி, குற்றத்தை நம்ப வைக்கக் கூடாது. இது, புருஷன் - பொண்டாட்டி விஷயம். இதிலே நீயாச்சு, அவனாச்சு,'' என ஒதுங்கி கொண்டார், மாமியார்.

இரண்டு நாட்களாக, ராஜேஷின் மனம் ஒரு நிலையில் இல்லை. மீண்டும் மீண்டும், விமலா விஷயமே மனதில் வந்து போனது. அவன் மனைவி ரூபா, நல்லவள்; நேர்மையானவள். ஆனால், இந்த பாழாய் போன சந்தேகம், அவளை ஆட்டி வைக்கிறது.

மேலும், விமலா வேலைக்காரியாக இருந்தாலும், அழகாக இருந்தாள். தவிர்க்க இயலாத பணத் தேவை அவளை, தீயவன் எவனிடமாவது சிக்க வைத்து விட்டால்... இந்த நிலையில் சும்மா இருப்பது அதர்மமாகப்பட்டது, ராஜேஷுக்கு.

மறுநாள் காலை, ஒரு ஆட்டோ பிடித்து, விமலா வசிக்கும் குடிசை பகுதிக்கு விரைந்தான், ராஜேஷ். விமலா வீட்டின் முன் நின்றதும், எதிரே வந்தாள், விமலா.

வீட்டினுள் விட்டுவிட்டு இருமல் சத்தம்.

''எங்கே வந்தீங்க சார். அம்மா சொல்ற மாதிரி...'' என, இழுத்தாள்.

''விமலா, நான் உனக்கு உதவி செய்ய தான் வந்திருக்கிறேன். நீ கேட்ட தொகை எனக்கு சோளப்பொரி. ஆனால், அம்மாவை மீறி நான் எதுவும் செய்ய முடியாது. அம்மா நல்லவங்க தான். ஆனால், சந்தேகத்தின் கைப்பாவை,'' என, அவளை அமைதிப்படுத்தி, மெல்லிய குரலில் தன் திட்டத்தை கூறினான்.

''சார், நான் உங்களுக்கு எந்த கஷ்டமும் தர மாட்டேன். உங்க திட்டத்துக்கு நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன்,'' என, மறுத்தாள், விமலா.

''இதோ பாரு விமலா. இதனால் வரும் பிரச்னையை என்னாலே சமாளிக்க முடியும். நீ, உன் கணவரை காப்பாத்தணும்,'' என, இறைஞ்சினான்.

விமலாவின் முகத்தில் தெளிவு பிறந்தது.

மறுநாள் காலை, ராஜேஷ் வீட்டில் ஒரே கூச்சல்.

''ஏம்மா உங்க வீட்டுக்காரரைப்பற்றி நீங்கள் சந்தேகப்பட்டதெல்லாம் நெசம் தான். என் வீட்டாண்டையே வந்து, என்னை கைய புடிச்சு இழுத்து, 'உன் வீட்டுக்காரர் தான் நோயால் இருக்கிறாரே, வா வா ஜாலியா வெளியே போய் வரலாம்'ன்னு கூப்பிட்டாரும்மா. எனக்கு அவமானமா இருக்கும்மா. நான் போலீஸ்ல புகார் கொடுக்க போறேன்,'' என, கோபமாக கூச்சலிட்டாள், விமலா.

ரூபாவுக்கு கை கால் வெலவெலத்து விட்டது. ஹால் பக்கம் தலையை திருப்பி, ''ராஜேஷ் இங்க வா, மேன்,'' என, அழைத்தாள்.

மொபைலை, 'ஆப்' செய்த படியே ஓடி வந்தான், ராஜேஷ்.

''என்ன விஷயம், ரூபா. ஏன் இப்படி கத்தற?''

''எனக்கு மானம் போறது. விமலா உன்னை பத்தி சொல்ற குற்றச்சாட்டு எல்லாம் உண்மை தானா?'' என, கொதித்தாள், ரூபா.

மவுனமாக நின்றான், ராஜேஷ்.

''ஸோ, உன் மவுனம், உன் குற்றத்திற்கு ஒப்புதலாக அமைந்து விட்டது. நீ, இனி என் முன் நிக்காதே போ,'' என, கத்தினாள், ரூபா.

பின், இறைஞ்சும் குரலில், ''விமலா எங்களோடது ரொம்ப கவுரவமான குடும்பம். தயவு செய்து இதை பெரிதுப்படுத்தாதே. அதை இத்தோட விட்டுவிடு. எங்க வீட்டுக்காரர் நல்லவர் தான். ஆனா, 'சபலிஸ்ட் லிஸ்டில்' முதல் இடம்.

''இப்ப நான் உனக்கு, 50 ஆயிரம் ரூபாய், நஷ்ட ஈடா தரேன். இதற்கு பதிலாக நீ, வேற எந்த, 'ஆக்ஷனும்' எடுக்க கூடாது,'' என, கெஞ்சினாள், ரூபா.

''சரிம்மா, நீங்க தான் என்ன செய்வீங்க,'' என, பணத்தை வாங்கிக் கொண்டு வெளியேறினாள், விமலா. ஆனால், கண்ணீருடன், ராஜேஷை திரும்பி, திரும்பி பார்த்தபடி சென்றாள்.

அடுத்த நாள் ரூபா, ராஜேஷிடம் நெருங்கி வந்து, அவன் தோளில் கைகளை போட்டு, முகத்தோடு முகம் பதித்து சல்லாபித்தாள்.

''நோ ரூபா. என்கிட்ட வந்து கொஞ்சாதே. நான் ஒரு கெட்ட பையன்,'' என, முறுவலித்தான்.

''இருக்கட்டும்ங்க. அப்படி ஒண்ணும் நீங்க அடியோட மோசம் இல்ல. அப்பப்ப அப்படி இப்படி இருப்பீங்க அவ்ளோதான். நீங்க நாளைக்கு உங்க பி.ஏ., ஜெயந்தியை மாற்றிவிட்டு, ஒரு ஆண் பி.ஏ.,வை போட்டுக்கோங்க,'' என, குழைந்தாள்.

''அட நீ ஒண்ணு. ஜெயந்தி வேலையை ராஜினாமா செய்து விட்டாள். அவளது கணவர், கலிபோர்னியா போகிறாரு. இப்போ என், பி.ஏ., ஜெயராமன், வயது 50.''

''ரொம்ப சந்தோஷங்க. நீங்க எனக்கு மட்டும் தான்,'' என, குற்றால அருவியின் தென்றலாக அவனை அணைத்து கொண்டாள்.

இ ரண்டு நாட்களுக்கு பின், விமலா, மீண்டும் வந்து வீட்டு வேலைகளை கவனித்து கொண்டிருந்ததை பார்த்தான், ராஜேஷ்.

''என்ன விமலா, இந்த பக்கம். உன்னை வேலையை விட்டு அன்னைக்கே நிறுத்திட்டாங்களே... திரும்ப ஏன் வந்து வீண் வம்பில் மாட்டிக்குற,'' என, விசாரித்தான், ராஜேஷ்.

''அட, போங்க சார். அதெல்லாம் உளவளாட்டிக்கு. அம்மா தான் என்னை வரச் சொல்லி வேலைக்கு சேர்த்துக்கிட்டாங்க. நான் இல்லாம அவங்க வண்டி ஓடாது. ஆனால், ஒரு, 'கண்டிஷன்' போட்டு இருக்காங்க. எந்த காரணம் கொண்டும், நீங்க இருக்கும் பக்கம் வரக்கூடாது, உங்களை பார்க்க கூடாதுன்னு.''

''ஏனாம்?''

''ஏன் என்றால், நீங்க ஒரு மாதிரியாம்,'' என, கண் சிமிட்டி சிரித்தாள், விமலா.

கஸ்துாரி






      Dinamalar
      Follow us