/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (14)
/
அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (14)
PUBLISHED ON : ஆக 24, 2025

அமெரிக்க கரும்பு!
'ப திபக்தி' என்ற நாடகத்தில், எம்.ஆர்.ராதாவுக்கு வில்லன் வேஷம். சிவாஜிக்கு பெண் பிள்ளை வேஷம்.
ஒரு காட்சியில், எம்.ஆர்.ராதாவின் தலை முடியை பிடித்து இழுத்து, கீழே தள்ளி மிதிக்க வேண்டும், சிவாஜி.
'நம்ம அண்ணனை கீழே தள்ளி மிதிக்கணுமா? நான் செய்ய மாட்டேன்...' எனச் சொல்லி மறுத்து விட்டார், சிவாஜி; ஆனால், விடவில்லை, எம்.ஆர்.ராதா.
'என் மேல உனக்கு பாசமும், மரியாதையும் நிறைய உண்டுன்னு, எனக்கு நல்லா தெரியும். இது நாடகத்துல வருகிற காட்சி தானே. இதோ பார், நான் கீழே விழுந்திட்டேன். இப்போ என்னை மிதிக்கிறாப் போல நடி! அவ்வளவு தான்...' எனச் சொல்லி, சிவாஜியை சம்மதிக்க வைத்தார்.
அதன்பின் அந்த காட்சியில், விருப்பமில்லாமல் நடித்தார், சிவாஜி. அப்படி விருப்பமில்லாமல் சிவாஜி நடித்த காட்சி, அதுவாக தான் இருக்கும்.
சிவாஜிக்கு வசதியும், வாய்ப்பும் வந்த பின், தன் பாசத்துக்குரிய ராதா அண்ணனுக்கு திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் ஒரு வீடு ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறினார், சிவாஜி. அது, எம்.ஆர்.ராதாவின் மீது, சிவாஜி கொண்டிருந்த அன்பின் அடையாளம்.
சி வாஜிக்கு காரில் நீண்டதுாரம் பயணம் செய்வதற்கு மிகவும் பிடிக்கும். அமெரிக்காவில் நெடுஞ்சாலைகள் எல்லாம் மிகவும் அகலமானவை. பயணம் செய்வதற்கு மிகவும் வசதியானவை. கார் பயணமே, விமானத்தில் பறப்பது போல சுகமாக இருக்கும்.
சிவாஜிக்கு, அதுபோன்ற நெடுஞ்சாலைகளில் வேகமாக காரில் பயணம் செல்வது ரொம்பவும் பிடித்தமான விஷயம். அப்படி பயணம் செய்கிற போது, ஆங்காங்கே பெட்ரோல் நிலையங்களில் உணவகங்கள் இருக்கும். தவிர, 'ரெஸ்ட் ஸ்டேஷன், புட் ஸ்டேஷன்' என்ற பெயரிலும் ஓய்விடங்களும், உணவகங்களும் இருக்கும்.
வழியில் நிறுத்தினால், அங்குள்ள உணவகங்களில் என்ன இருக்கிறதோ அவற்றைப் பற்றி கேட்டு, ஏதாவது சாப்பிடலாம் என்பார், சிவாஜி. பொதுவாக, அங்கேயெல்லாம், 'பிட்ஸா, பர்கர், சாண்ட்விட்ச், ஹாட்டாக்' போன்றவை தான் கிடைக்கும்.
'நீங்க என்ன சாப்பிடறீங்களோ அதையே எனக்கும் குடுங்க. உங்க ஊரு ஐட்டம் ருசியா இருக்கான்னு, நானும் சாப்பிட்டுப் பார்க்கிறேன்...' என்பார்.
வீட்டில் கல்லில் இருந்து எடுத்து சுடச்சுட தோசை கேட்பவர், இங்கே, விதம் விதமாக அயல்நாட்டு உணவுகளை ருசி பார்க்கிறாரே என, எனக்கு வியப்பாக இருக்கும்.
'உங்க ஊர்காரங்க எல்லாரும் இதைத்தானே விரும்பி சாப்பிடறாங்க. அது எப்படித்தான் இருக்குன்னு நானும், 'டேஸ்ட்' பண்ணிப் பார்க்கணுமில்லையா?' என, அதற்கு விளக்கம் கொடுப்பார்.
அ மெரிக்காவில், சிவாஜி இருந்த போது, ஒரு விஷயத்தை கவனித்திருக்கிறேன்.
நீண்டதுார கார் பயணங்கள் போகும் போது, வழியில் தென்படும் வான் உயர்ந்த, நவீன கட்டடங்களைப் பார்த்து, அவர் அதிசயித்தது இல்லை. ஆனால், வழியில் நீண்ட வயல்வெளிகள் இருக்கும். அவைகள் தான் அவருடைய கவனத்தை ஈர்க்கும். அந்த வயல்களில் கரும்பு, மக்காச்சோளம் எல்லாம் விளைந்திருக்கும்.
ஒருமுறை, நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது, வயல்களில் நீண்டு வளர்ந்திருந்த பயிர்களை பார்த்து, 'இங்கே இவ்வளவு உயரமாக வளர்ந்திருக்கிறதே, அதெல்லாம் என்ன?' என, ஆர்வமாய் கேட்டார்.
'கரும்புத் தோட்டம்...' என்றதும் ஆச்சர்யப்பட்டுப் போனார்.
'தோட்டத்தின் உள்ளே போய் நாம் பார்க்கலாமா, அனுமதிப்பரா?' என்றார்.
உடனே, காரை நிறுத்தி, பண்ணை ஆட்களிடம் அனுமதி பெற்று, பண்ணையின் உள்ளே சென்று பார்த்தோம்.
நம் ஊரில் கரும்பு அதிகபட்சம், 8 அல்லது 10 அடி உயரம் வளரும். ஆனால், அந்த கரும்புத் தோட்டத்தில், 18 முதல் 20 அடி உயரத்துக்கு அபாரமாக வளர்ந்திருந்தது.
அருகிலிருந்த மக்காச்சோள பண்ணைக்கும் சென்று பார்த்தோம். அங்கேயும் சோளம் அபரிதமாய் வளர்ந்திருந்தது. 20 அடி உயர சோளச் செடிகளில், 'மெகா சைஸ்' மக்காச்சோளக் கதிர்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன.
கரும்பு மற்றும் மக்காச்சோளத் தோட்டத்தில், ஒரு குழந்தை போல உயர்ந்து வளர்ந்திருந்த பயிர்களுக்கு நடுவில் நின்று, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார், சிவாஜி. அவரை வைத்து எத்தனையோ படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சிவாஜி விரும்பி எடுத்துக் கொண்ட படங்கள் இவை.
அந்த பண்ணையில் ஒரு பகுதியில் சின்ன விமானம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் குழம்பிப் போனார், சிவாஜி.
'இது விவசாயம் பார்க்கிற இடம் தானே. இங்கே ஏன் விமானம் நிற்குது?' எனக் கேட்டார்.
'நாமெல்லாம் நம் சவுகரியத்துக்காக வீடுகளில் கார் வைத்துக் கொள்கிறோம் இல்லையா? அதுமாதிரி இங்கே சின்ன விமானம் வைத்துக் கொள்வர். கார்களுடன் இதுபோன்ற சின்ன விமானத்தையும் வைத்துக் கொள்கின்றனர், வசதியான பண்ணையார்கள்...' என, அவருக்கு விளக்கம் கொடுத்தேன்.
'அமெரிக்காவில் விவசாயம் பண்றவன் கூட, பெரிய பணக்காரன் தான்...' எனச் சிரித்தார், சிவாஜி.
ஒ ரு சனிக்கிழமை பிற்பகலில், நான் ஓய்வாக இருந்தேன். சிவாஜியை எங்காவது அழைத்து போகலாமா என, யோசித்தேன். ஆனால், அவர் வெளியில் போகத் தயாராக இருப்பாரா, இல்லை வீட்டிலேயே ஓய்வு எடுக்க விரும்புவாரா என, எனக்கு தெரியவில்லை.
நான் அவரிடம் ஏதோ கேட்க விரும்புகிறேன் என்பதை, என் தயங்கிய முகத்திலிருந்தே புரிந்து கொண்டு விட்டார், சிவாஜி.
'என்ன டாக்டர், ஏதோ கேக்கணும்ன்னு நினைக்கறீங்க போல இருக்கு; தயங்காம கேளுங்க...' என்றார்.
'இங்கே பக்கத்தில் ஒரு கடற்கரை இருக்கு. வார விடுமுறை நாட்களில் அந்த கடற்கரைக்கு நிறைய பேர் வருவாங்க. ரொம்ப, 'ரிலாக்ஸ் மூடில்' பிடிச்ச, 'மியூசிக்'கை போட்டு கொண்டு, 'டான்ஸ்' ஆடுவாங்க. சிலர் சாய்வு நாற்காலிகளில் படுத்தபடி, 'வாக்மேனில்' இசையைக் கேட்டு மகிழ்வர்.
'இன்னும் சிலர், 'பிகினி' ஆடையில், மணலில் படுத்தபடி, சூரிய வெப்பத்தில் சூரிய குளியல் எடுத்துக் கொள்வர். வயசானவர்களை விட, நிறைய இளம் வயதினர் தான் அதிகம் வருவர். இந்தியாவில் இப்படிப்பட்ட, 'பீச்' காட்சிகளை காண வாய்ப்பில்லை. அந்த, 'பீச்'சுக்குப் போகலாமா?' எனக் கேட்டேன்.
சந்தேகத்துடன் தான் கேட்டேன். சென்னையில் நீண்ட கடற்கரையைப் பார்த்தவர். அமெரிக்க கடற்கரையை பார்க்க விரும்புவாரா? சனிக்கிழமை மாலை வீட்டிலேயே ஓய்வாக இருக்க விரும்புவாரா?
அதற்கு சிவாஜி சொன்ன பதில்...
— தொடரும்
எஸ். சந்திரமவுலி

