
பழ வியாபாரியின் பலே ஐடியா!
எ ங்கள் ஊரின் மார்க்கெட் பகுதியில், பழக்கடை நடத்தி வருகிறார், மாற்றுத்திறனாளி நண்பர் ஒருவர். அவர் கடையின் அருகிலும், நிறைய பழக்கடைகள் இருப்பதால், போதிய வருமானம் கிடைக்கவில்லை. இந்நிலையில், பழ விற்பனையை அதிகரிக்க, புது யோசனையை கையாண்டார், நண்பர்.
அதன்படி, தனியார் மருத்துவமனை கேன்டீன் மற்றும் தனியார் பள்ளிகள் கேன்டீன் நிர்வாகத்தினரை அணுகி, 'பிரெஷ்' ஆன சத்துள்ள பழங்களின், 'புரூட் சாலட்' விற்பதற்கு அனுமதி கோரினார்.
'இப்போதுள்ள விலைவாசியில், ஆப்பிள், மாதுளை, அன்னாச்சி போன்ற பழங்களை தனித்தனியாக வாங்க யோசிப்பர். அந்த பழங்களையே சிறு சிறு துண்டுகளாக, 'புரூட் சாலட்' ஆக கொடுக்கும் போது வாங்கி சாப்பிடுவர். 'புரூட் சாலட்' விலையும் குறைவு, ஆரோக்கியமும் அதிகம்...' என, பள்ளி கேன்டீன் மற்றும் தனியார் மருத்துவமனை கேன்டீன் நிர்வாகத்தினரிடம் என் நண்பர் விளக்கமளித்தது, அவர்களை வெகுவாக கவர்ந்தது.
நண்பரின் கூற்றில் இருந்த உண்மையை உணர்ந்து, உடனடியாக அனுமதி அளித்தனர். இப்போது, சுகாதாரமான முறையில், 'புரூட் சாலட்'டை தயாரித்து, பாக்ஸில் அடைத்து கேன்டீன்களில் கொடுத்து வருகிறார், நண்பர். மேலும், திருமண விசேஷங்களுக்கு, 'புரூட் சாலட் ஆர்டர்' பெற்றும், மாதம் கணிசமாக சம்பாதிக்கிறார்.
எந்தவொரு தொழிலிலும் வருமானம் வரவில்லையே என, புலம்புவதை விட, அத்தொழிலில் லாபம் கிடைக்க மாற்றி யோசித்தால், என் நண்பரை போல லாபம் ஈட்டலாம்.
— டி.சுதாகர், ராமநாதபுரம்.
வாழ்க்கை வாழ்வதற்கே!
பெ ற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டாள், என் தோழி. காதலிக்கும் போது கண்ணியமாக நடந்து கொண்டவன், கல்யாணத்துக்கு பின், தட்டிக் கேட்க ஆளில்லை என்பதால், குடி, சிகரெட், கெட்ட பெண்களின் சகவாசம் என, மோசமாக நடந்து கொண்டான்.
அவனை திருத்த எவ்வளவோ முயன்றாள், முடியவில்லை. மாறாக தினமும் அவளை, அவன் அடித்து துன்புறுத்தினான்.
விஷயத்தை கேள்விப்பட்ட அவளின் பெற்றோர், 'எங்க பேச்சை மீறி வேற ஜாதிக்கார பயலோட போனியே, சீரழிஞ்சு சாவு...' என, இரக்கமில்லாமல் பேசினர்.
தானாக முடிவெடுத்தோம், அது தவறாகப் போய் விட்டது. அதற்காக விலைமதிப்பில்லா வாழ்க்கையை இழக்கலாமா என, சிந்தித்த தோழி, அதிரடியாக தன் காதல் கணவனை விவாகரத்து செய்தாள்.
தன் கல்வி தகுதியை வைத்து, வேலை தேடிக் கொண்டு, அஞ்சல் வழியில் மேற்படிப்பு படிக்க ஆரம்பித்தாள். இரண்டு ஆண்டுகளில், திருமண தகவல் மையம் மூலம், மனைவியை இழந்த இளைஞர் ஒருவரை தேர்வு செய்தாள். தீர விசாரித்து, அவரை பதிவு திருமணம் செய்து, இப்போது நலமாக, நிம்மதியாக வாழ்ந்து வருகிறாள்.
தோழியின் அதிரடியான செயல்பாடு கண்டு அவளது பெற்றோர், ஆச்சரியப்பட்டு வாயடைத்து போய் விட்டனர்.
தோழிகளே... நம் எதிர்காலம் கருதி, தானாக எடுக்கும் முடிவுகள், சில நேரம் தவறாகி போகலாம். அதற்காக சோர்ந்து போவதோ, தற்கொலை செய்து கொள்வதோ கூடாது. வாழ்க்கை வாழ்வதற்கே. அதனால், அடுத்து நடக்க வேண்டியவற்றை செய்வதற்கு துணிச்சலுடன் களம் இறங்கி, வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டும்.
— பே.ராமலட்சுமி, விருதுநகர்.
தூக்கில் தொங்கும் மதுபாட்டில்கள்!
ச மீபத்தில், வெளியூரில் நடைபெற்ற நண்பரின் இல்ல விழாவில் கலந்து கொண்டு, நாங்கள் மூன்று நண்பர்கள் காரில் திரும்பி வந்தபோது, டயர் பஞ்சர் ஆகிவிட்டது. 'ஸ்டெப்னி' டயரை பொருத்தும் வேலையில் ஈடுபட்டார், கார் ஓட்டுனர்.
இடைப்பட்ட நேரத்தில் நாங்கள், வயல் சூழ்ந்த அந்த இடத்தை சுற்றிப் பார்க்க கிளம்பினோம். அங்கே ஒரு மரத்தில், மூன்று காலி மதுபாட்டில்கள், துாக்கு மாட்டியது போல, கயிற்றில் தொங்க விடப்பட்டிருந்தன.
'மது குடிப்பவர், தற்கொலைக்கு தயாராகிறார் என, அர்த்தம்!' என்ற வாசகத்தோடு கூடிய அட்டையும், மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது.
இதுபற்றி வயலில் வேலை செய்த பெரியவரிடம் கேட்டோம்.
'எதிரே உள்ள தேக்கு தோப்பிற்கு சில இளவட்ட பசங்க, அடிக்கடி வந்து மது குடித்துவிட்டு, பாட்டில்களை போட்டுவிட்டு செல்வர். வயல் வரப்பு வழியே தான் மெயின் ரோட்டுக்கு போவர்.
'அதனால், அவர்கள் துாக்கிப் போட்டுவிட்டு போன, காலி பாட்டில்களை தான், இப்படி கட்டி தொங்க விட்டுள்ளேன். இதை பார்த்தாவது அவர்களுக்கு புத்தி வரட்டுமே...' என, ஆதங்கத்துடன் கூறினார், பெரியவர்.
பெரியவரின் இந்த உத்தி இளைஞர்களை திருத்துமா?
— அ.சுகுமார், வேலுார்.

