
மெய். முருகப்பா, காரைக்குடி: அந்துமணியாரிடம் உதவியாளராக வர விரும்பும் என் நண்பனின் ஆசையை நிறைவேற்றுவீர்களா?
நானே, பொறுப்பாசிரியருக்கு உதவியாளர் தானே!
வி. திருமுகில், கள்ளக்குறிச்சி: 'இயற்கை பேரிடர்களுக்கு, நாமே காரணம்.உரிமைகளைப் பற்றி பேசும் மக்கள், தங்கள் கடமைகளைப் பற்றி கவலைப் படுவதில்லை...' என்ற, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளின் ஆதங்கம் சரிதானே!
மிகச் சரியே! பொது வெளியில் சமூக அக்கறையுடன் செயல்பட, நாம் கற்றுக் கொள்ள வேண்டும்!
* எஸ். பழனிவேல், திருமாளம், திருவாரூர்: அமைச்சர் பொன்முடி மீது, மக்கள் சேற்றை வீசியது, ஆட்சிக்கு எதிரான அவர்கள் புரட்சியின் ஆரம்பமா?
இருக்கலாம்; மக்கள் அவ்வளவு விரக்தி அடைந்துள்ளனர்!
* பெ. பொன்ராஜபாண்டி, மதுரை: 'அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை...' என்கிறாரே, முதல்வர் ஸ்டாலின்?
பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவராச்சே... முதல்வர் பதில் சொல்லித் தானே ஆக வேண்டும்!
க.கல்பனா, சென்னை: நம் நாட்டில், எந்த ஒரு வேலையாக இருந்தாலும், அதற்கு வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லையே...
அரசியல்வாதிகளுக்கும் வயது உச்சவரம்பு, மிக அவசியம். இளைய சிந்தனைகள் நாட்டை வழிநடத்த வேண்டும், பெரியவர்களின் ஆலோசனையுடன்!
த.சிந்தாமணி, வெண்கரும்பூர்: மது பாட்டிலின்விலையை, பல மடங்கு உயர்த்தினால், மது பிரியர்கள் குடிக்காமல் இருப்பரா?
இருக்கவே மாட்டார்கள்; சம்பாதிக்கும் மொத்த பணத்தையும், குடியிலேயே செலவிடுவர்!
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி: 'மாணவியரிடம் அத்துமீறினால், இனி, ஆசிரியர் வேலை பறிபோகும்...' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கூறியிருப்பது குறித்து...
மிக நல்ல உத்தரவு; மிகச் சரியாக அமல்படுத்த வேண்டும்!
பி.ஜி.பி. இசக்கி, சென்னை:கோபத்தை குறைக்கணுமா, ஒழிக்கணுமா?
ஒழித்துவிட வேண்டும். பொறுமையாக இருந்தால், மலையளவு பிரச்னையையும் சமாளித்து விடலாம்!