
''காமேஷ்... சீக்கிரம் இங்க வாப்பா,'' என்ற, தன் அம்மா லட்சுமியின் குரல் கேட்டு, மாடியிலிருந்து இறங்கி வந்து, அம்மா அருகில் சோபாவில் அமர்ந்தான், காமேஷ்.
''என்னம்மா அவசரமா கூப்பிட்டே?''
''உன்கிட்ட ஒரு விஷயம் கேட்பேன்... ஒளிவு, மறைவு இல்லாம பதில் சொல்லணும்,'' என்றாள், லட்சுமி கண்டிப்புடன்!
''ஏம்மா... இதுவரைக்கும் நான் ஏதாச்சும் உன்கிட்ட மறைச்சிருக்கேனா?''
''யாரையாவது, 'லவ்' பண்ணுறயா? அம்மாகிட்ட மறைக்காம சொல்லுப்பா,'' என, பட்டென்று கேட்டு விட்டாள்.
''என்னம்மா இப்படி கேட்டுட்டே... நான் ஓர் ஓட்டைவாயன், எல்லாத்தையும் உளறிக் கொட்டுவேன். காதலைப் போய் மறைப்பேனா... அதெல்லாம் இல்ல.''
''பின்ன ஏன் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேங்கிறே?''
''வாழ்க்கையில் நல்லா, 'செட்டில்' ஆகிட்டு, பிறகு செய்யலாம்ன்னு தான், 'லேட்' பண்றேன்ம்மா,'' என்றான், காமேஷ்.
''ஏம்பா... நல்ல சம்பளம், நல்ல உத்தியோகம், சொந்த வீடு எல்லாம் இருக்கு. இதுக்குமேல, 'செட்டில்' ஆக என்ன இருக்கு?''
''இந்த வாரம், 'புரமோஷன்' கிடைக்கும்மா... இன்னும் சம்பளம் உயரும்; நல்ல, 'கிரேடு' கிடைக்கும். இனி, நீங்க பொண்ணு பாருங்க,'' என்றான்.
சொன்னது தான் தாமதம்...
''பொண்ணு உனக்கு எப்படிப்பா இருக்கணும்?'' என்று கேட்டாள், உற்சாகமாக!
''உங்கள மாதிரி, உங்க குணம் மாதிரி பொண்டாட்டி வேணும்; அப்பா உங்க கிட்ட நடந்துக்கிற மாதிரி, நானும் என் பொண்டாட்டி கிட்ட நடந்துக்குவேன். நீங்க வாழும் வாழ்க்கை எனக்கு பிடிச்சிருக்கும்மா. ஏன், பொறாமையா கூட இருக்கு...
''எந்த வம்பு தும்புக்கும் போகாம, அக்காவையும், தங்கச்சியையும், அவங்க மாப்பிள்ளைகளையும் நன்கு கவனித்து, வாழ்க்கைய சுகமாக நடத்திட்டு இருக்கீங்கம்மா... இந்த மாதிரி தான், எனக்கும் ஒரு பெண் தேவை,'' என்று அம்மாவை புகழ்ந்தான், காமேஷ்.
உருகிப் போனாள், லட்சுமி.
அதன்பின், பெண் தேடும் படலத்தில் சுறுசுறுப்பாக இறங்கினாள், லட்சுமி.
லட்சுமிக்கு, 50 வயது; இரண்டு மகள், ஒரு மகன். கணவர் நாராயணனுக்கு, 60 வயது. ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.
லட்சுமி - நாராயணன் குடும்பத்தில், லட்சுமியின் ஆதிக்கம் தான். கணவர், மகள், மருமகன்கள் என, அனைவரும் அவளது அன்பிற்கும், ஆளுமைக்கும் அடங்கிப் போயினர்.
திருமணத் தகவல் மையம், தரகர், உறவினர் மற்றும் பேப்பர் விளம்பரம் என, பல வழிகளில் காமேஷுக்கு பெண் தேடினாள்.
இறுதியில், தரகர் மூலம், சில மணமகள் படங்களை வாங்கி வைத்துக் கொண்டாள்.
ஞாயிற்றுக் கிழமை -
ஹாலில், சோபாவில் அமர்ந்து, மகனை எதிர்பார்த்திருந்தாள், லட்சுமி.
சிறிது நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த காமேஷ், கையில் சில பேப்பர் கட்டுடன், அம்மாவின் அருகில் அமர்ந்தான்.
''காமேஷ்... இந்தப் படங்களைப் பாரு,'' என்று புகைப்படங்களை கொடுத்தவள், ''எந்த பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லுப்பா...'' என்றாள்.
''நான் ஏம்மா பார்க்கணும்... நீ பார்த்து, எந்தப் பெண்ணை தேர்ந்தெடுத்தாலும், எனக்கு சம்மதம் தான். முதல்ல இதைப் பாரும்மா,'' என்று சொல்லி, வீட்டு, 'பிளான்' வரைபடத்தை வரிசையாக காண்பித்தான்.
''அம்மா, இதுல, எந்த, 'பிளாட்' நல்லா இருக்கு? ஒன்றை, 'செலக்ட்' பண்ணு,'' என்றான், காமேஷ்.
''என்னடா இது, 'பிளாட்' - வீடுன்னு சொல்ற?'' புரியாமல் கேட்டாள், லட்சுமி.
''அம்மா எனக்கு வீட்டு லோன், வங்கியில, 'சாங்ஷன்' ஆகியிருக்கு. என் பேருல சொந்தமா வீடு வாங்குறேன்மா,'' என்று சந்தோஷமாக சொன்னான்.
''இப்போ எதுக்கு வீடு? தாத்தாகிட்டே ஒரு வீடு இருக்கு; அப்பாவுக்கும் சொந்தமா ஒரு வீடு இருக்கும் போது, நீ ஏன், வீணா வாங்குற?'' சிறிது கண்டிப்புடன் கேட்டாள், லட்சுமி.
''தாத்தாவுக்கு சொந்த வீடு, அப்பாவுக்கு சொந்த வீடு, எனக்கு மட்டும் சொந்த வீடு வேண்டாமா?''
''அந்த ரெண்டு வீடும், உனக்குத் தானே சொந்தம்.''
''யாரு சொன்னா... தாத்தா ரெண்டு பெண்ணுக்கும் கொடுத்தது போக, மீதியை அப்பாவுக்கும், அப்பா தன் இரண்டு பெண்ணுக்கும் கொடுத்தது போக, மீதியை எனக்கும் தருவார்.
''ஆனா, நீங்களே தாத்தா வீட்டை வேணாம்ன்னு சொல்லி, அப்பாவை சொந்தமாக வீடு வாங்க வச்சு, தனிக் குடித்தனம் வந்து, சுதந்திரமாக வாழுறீங்க. அது மாதிரி தாம்மா, என் பொண்டாட்டியும் கேட்பா... அதனால தான், முன்கூட்டியே எல்லா ஏற்பாடும் செய்றேன்,'' என்றான், காமேஷ்.
''அப்ப, நீ கல்யாணம் பண்ணி தனிக்குடித்தனம் போயிடுவியா? எங்க நிலைமை என்னடா?'' குரல் கம்ம கேட்டாள், லட்சுமி.
''அம்மா நீங்களும், அப்பாவும் எப்படியோ, அப்படித் தானம்மா நானும், என் மனைவியும் வாழணும்,'' என்றான்.
''என்னங்க... இங்கே வாங்களேன்... உங்க பையன் என்ன சொல்றான்னு கேளுங்க,'' பஞ்சாயத்துக்கு கணவரை கூப்பிட்டாள், லட்சுமி.
பேப்பர் படித்துக் கொண்டிருந்த நாராயணன், ''நானும் கேட்டுக்கிட்டு தான் இருக்கேன்... அவன் சொல்றது சரி தானடி,'' என்று தைரியமாக, எதிர் பதில் கொடுத்தார்.
''என்னங்க இப்படி சொல்றீங்க... கஷ்டப்பட்டு வளர்த்து, ஆளாக்கி, திருமணம் பண்ணிக் கொடுத்தா, தனிக்குடித்தனம் போக, 'பிளான்' பண்றானே...'' பரிதாபமாக கேட்டாள், லட்சுமி.
''நான் செய்ததை, அவனும் பண்றான். வாழையடி வாழையா நடக்குற விஷயம் தானே...'' என்று சொல்லி, மறைமுகமாக குத்திக் காண்பித்தார், நாராயணன்.
''இல்ல; நான் சம்மதிக்க மாட்டேன். ஐயோ...'' என்று கத்த ஆரம்பித்தவள், தொடர்ந்து, ''உங்க அம்மாவும், உங்க அக்கா, தங்கச்சியும் செய்த கொடுமைய தாங்காம தானே, நாம வெளியே வந்தோம்,'' என்றாள்.
உடனே குறுக்கிட்டு, ''இதே மாதிரி நீங்களும், என் அக்கா, தங்கச்சியும் சேர்ந்து, என் பொண்டாட்டிக்கு இடைஞ்சல் செய்யக் கூடாதுங்கிற முன் எச்சரிக்கையால தான், இப்படி ஏற்பாடு பண்றேன்,'' என்று விளக்கம் சொன்னான், காமேஷ்.
''காமேஷ், வேற வழியில்லையாப்பா?'' என்று கெஞ்சலாக கேட்டாள், லட்சுமி.
''ஒருவழி இருக்கும்மா... ஆனா, அதைச் சொன்னா, நீங்க செய்ய மாட்டீங்களே...'' என்று நிறுத்தினான், காமேஷ்.
''சொல்லுப்பா... சொல்லு, கண்டிப்பா செய்றேன்,'' மகனின் கையைப் பிடித்து கெஞ்சினாள், லட்சுமி.
''அம்மா... முதல்ல, நீங்க ஒரு நல்ல மருமகளா நடந்துக்கணும். அப்பத் தான் நீங்க நல்ல மாமியாரா இருக்க முடியும். உங்களுக்கும், உங்கள மாதிரி நல்ல மருமகள் கிடைப்பாள்,'' என்று புதிர் போட்டான்.
''இந்த வயசுல, நான் இனி நல்ல மருமகளா எப்படிப்பா நடக்க முடியும்?''
''ஊர்ல, தாத்தா - பாட்டி அவ்வளவு பெரிய வீட்டுல, தனியா யார் உதவியும் இல்லாம, நோயோட அவஸ்தைப் பட்டுக்கிட்டு இருக்காங்க. அத்தைகளும், அவர் பையனான அப்பாவும், மருமகளான நீங்களும் ஜாலியா இருக்கீங்க... 'நாங்க ஏன் உங்களை பார்க்கணும்... சொத்தும் வேணாம், ஒண்ணும் வேணாம்'ன்னு சொல்லிட்டு போயிட்டீங்க.
''அதனால... இப்ப, நீங்க தாத்தா - பாட்டிய அங்கே போய் கவனிச்சாலும் சரி; இல்ல, இங்கே அழைத்து வந்து கவனிச்சாலும் சரி. என் அப்பாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தாங்க. அப்பத் தான், என் மனைவியும் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தருவா,'' என்று, கண் கலங்க சொல்லிவிட்டு, தன் அறைக்குள் சென்று, கதவை சாத்திக் கொண்டான்.
ஸ்தம்பித்து நின்றுவிட்டாள், லட்சுமி.
சுட்டபழம் வேணுமா, சுடாத பழம் வேணுமான்னு, பாலமுருகன், அவ்வையாரை கேட்டு, கர்வத்தை அடக்கியது போல, புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது போல, மகன் காமேஷ் மூலம், லட்சுமிக்கு ஞானம் பிறந்தது.
அடுத்த நாள், கணவரை அழைத்துக் கொண்டு, மாமனார் ஊரை நோக்கி புறப்பட்டு விட்டாள், லட்சுமி!
பெ. கிருஷ்ணன்
வயது: 82.
தன், 70வது வயதிலிருந்து தொடர்ந்து, டி.வி.ஆர்., சிறுகதை போட்டிக்கு சிறுகதைகள் எழுதி அனுப்பி இருந்தாலும், இந்த ஆண்டு தான், ஆறுதல் பரிசு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். பாமா மணாளன் என்ற பெயரில், 1962லிருந்து, பல தமிழ் வார, மாத இதழ்களில் துணுக்குகள் மற்றும் சிறுகதைகள் எழுதியுள்ளார். பரிகாரம் என்ற திரைப்படத்தை தயாரித்து, கதை - வசனம் எழுதி, இயக்கியும் வெளியிட்டுள்ளார்.தற்சமயம், மூன்று மினி பஸ் வைத்து, சுற்றுலா பயணங்களை ஏற்பாடு செய்து, நடத்தி வருகிறார்.
கதைக்கரு பிறந்த விதம்: மாமியார் - மருமகள் பிரச்னை, தீரா நோய் போல் பல குடும்பங்களில் நிலவுகிறது. 25 வயதில் செய்த தவறை, 50 வயதில் உணர்ந்து திருந்துகின்றனர், பலர். இதை அடிப்படையாக வைத்து, எழுதப்பட்ட கதை இது.

