
ராஜமவுலி பாணிக்கு மாறும், ஷங்கர்!
பாகுபலி என்ற சரித்திர படத்தை இரண்டு பாகங்களாக, ராஜமவுலி இயக்கி, மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது, இயக்குனர் ஷங்கரும், 'வேள்பாரி' என்ற சரித்திர நாவலை மூன்று பாகங்களாக இயக்கப் போகிறார்.
பறம்பு மலையை தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்த, வேள்பாரி மன்னன், வள்ளல் தன்மையுடன் வாழ்ந்திருக்கிறார். அதோடு, சேர சோழ பாண்டிய மன்னர்கள் தனித்தனியே போர் தொடுத்து, இவரிடம் தோற்ற நிலையில், இறுதியாக மூன்று பேரும் சேர்ந்து இவருடன், போராடி வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த பாரி மன்னனின் கதையை தான் அடுத்து, ராஜமவுலியின், பாகுபலிக்கு இணையாக, மூன்று பாகங்களாக பிரமாண்டமாக இயக்கப் போகிறார், ஷங்கர்.
— சினிமா பொன்னையா
மீண்டும் ராசியான, ராசி கண்ணா!
கார்த்திக்கு ஜோடியாக, சர்தார் படத்தில் நடித்திருந்த, ராசி கண்ணாவுக்கு பதிலாக, அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு புதிய நடிகையை தேடி வந்தனர்.
இந்த செய்தி அறிந்த, ராசி கண்ணா, படக்குழுவை தொடர்பு கொண்டு, 'ஹிட் படத்தில் நடித்த என்னை, அப்படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து எப்படி கழட்டி விடலாம்...' என்று சொல்லி, மல்லுக்கட்டி வந்தார்.
விளைவு, வேறு நடிகையை நடிக்க வைக்க திட்டமிட்டவர்கள், இப்போது, ராசிகண்ணாவுக்கே, சர்தார்-2 படத்திலும் வாய்ப்பு கொடுத்துள்ளனர்.
— எலீசா
'ஹீரோ முக்கியமல்ல... ' - அதிதி ஷங்கர்!
விருமன் படத்தில், கார்த்தியுடனும், மாவீரன் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் நடித்த, அதிதி ஷங்கர் தற்போது புதுமுக நடிகர்களுக்கும் ஜோடியாகி விட்டார்.
இது குறித்து கேட்டால், 'என்னைப் பொறுத்தவரை, கதை தான் எனக்கு, 'ஹீரோ!' அதனால், கதை பிடித்திருந்தால், புதுமுக நடிகர்களின் படங்களாக இருந்தாலும், தயங்காமல் நடிப்பேன்...' என்கிறார், அதிதி.
எலீசா
மீண்டும் ஹிந்தி படத்தில், தனுஷ்!
ஏற்கனவே ஹிந்தியில், ராஞ்சனா, அட்ராங்கிரே போன்ற படங்களில் நடித்த, தனுஷ், தற்போது, தெரே இஸ்க் மெயின் என்ற ஹிந்தி படத்தில் நடிக்கப் போகிறார்.
தற்போது, தனுஷின் மார்க்கெட் தமிழ், ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கிலும் சூடு பிடித்திருப்பதால், முந்தைய ஹிந்தி படங்களை விட பிரமாண்டமான பட்ஜெட்டில், இந்த படத்தை இயக்கப் போகிறார், ஆனந்த் எல்.ராய். தனுஷுக்கு ஜோடியாக, அனிமல் என்ற ஹிந்தி படத்தில் நடித்த, திரிப்டி திம்ரி என்பவர் நடிக்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
வம்பு நடிகர், நடன சூறாவளி என, இரண்டு பேரையும் காதலித்து, அதையடுத்து, சிவமான அந்த இயக்குனரை கை பிடித்திருக்கிறார், தாரா நடிகை. இந்த நேரத்தில், முன்னாள் காதலர்களை முழுமையாக தவிர்த்து வரும் அம்மணி, சில சமயங்களில், சினிமா நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு அருகில் உட்கார வேண்டிய சூழல் ஏற்பட்டால், ரொம்பவே பதற்றம் அடைகிறார்.
சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியின் போது, வம்பு நடிகர், அவர் அருகே வந்தமர்ந்ததும், கடும், 'அப்செட்' ஆகி தடுமாறியவர், சத்தம் இல்லாமல் எழுந்து, அந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேறினார்.
....
தன்னை, குடும்ப குத்து விளக்கு என்று, தெலுங்கு சினிமாவும் ஓரங்கட்டி விடக்கூடாது என்பதற்காக, நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்தபடி தான் நீராடும், 'பிகினி' புகைப்படங்களை, தெலுங்கு சினிமாவின் இளவட்ட, 'ஹீரோ'களுக்கு அனுப்பி வைத்து, பட வேட்டையில் ஈடுபட்டுள்ளார், காக்கா முட்டை நடிகை.
அம்மணியின் இந்த திரை மறைவு, 'டீலிங்' காரணமாக, டோலிவுட்டில் அவரது, 'கவுன்ட் - டவுன் ஸ்டார்ட்' ஆகி உள்ளது.
சினி துளிகள்!
கடந்த, 2010ல், கன்னடத்தில், சூப்பர் என்ற படத்தில் நடித்த, நயன்தாரா, நீண்ட இடைவேளைக்கு பிறகு, தற்போது, டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதை அடுத்து, தெலுங்கு சினிமாவில் தீவிரம் காட்டி வருகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.
அவ்ளோதான்!

