
ஒருமுறை, தன் உதவியாளரை அழைத்த, ஈ.வெ.ரா., பெயரை குறிப்பிட்டு, அவருக்கு, தந்தி கொடுக்கச் சொன்னார்.
'தந்தியில் கொடுக்க வேண்டிய விஷயம் என்னங்கய்யா...' என்றார், உதவியாளர்.
'ஏற்கனவே சொல்லியாச்சு, அப்படிங்கிற ஒரு தகவலை மட்டும் தான் தந்தியில் கொடுக்கணும். அதிகமா வார்த்தைகளை செலவு பண்ணாம, சுருக்கமா கொடு...' என்று கூறி, அதற்கான பணத்தையும் கொடுத்து அனுப்பினார், ஈ.வெ.ரா.,
உடனே போய் தந்தி கொடுத்துவிட்டு வந்தார், உதவியாளர்.
'எப்படி கொடுத்த, தந்தி வாசகம் என்ன?' என்று கேட்டார், ஈ.வெ.ரா.,
'ஆல்ரெடி டோல்டு என்ற இரண்டே வார்த்தையில் கொடுத்துட்டேன்...' என, ரொம்ப பெருமையாக கூறினார், உதவியாளர்.
'இன்னும் கூட சுருக்கி இருக்கலாமே. ஒரே வார்த்தையில் அதை சொல்ல முடியாதா?' என கேட்டார்.
'அது எப்படிங்க முடியும்?' என்றார்.
'ஏன், 'டோல்டட்' என்று கொடுக்க வேண்டியது தானே...' என்றார்.
'அப்படி ஒரு வார்த்தை இங்கிலீஷ்லயே இல்லையே...'
'இல்லேன்னா என்னய்யா, விஷயம் புரியுதா இல்லையா. தந்தியை வாங்கறவர் அதைப் புரிஞ்சுக்க மாட்டாரா?' என்றார், ஈ.வெ.ரா.,
***
இறைநம்பி எழுதிய, 'மேன்மை தரும் வாழ்க்கைக் கல்வி' என்ற நுாலிலிருந்து:
நேர்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர், சுதந்திரப் போராட்ட தியாகி, ஜீவா. நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், கட்சிப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். 'ஜீவா, நீங்கள் இந்த நாட்டின் சொத்து...' என, காந்திஜியால் பாராட்டப்பட்டவர்.
ஒருநாள் வெளியூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் உரையாற்றிவிட்டு, சென்னை திரும்பினார், ஜீவா. நண்பகல் நேரம். வெயில் சுட்டெரித்தது. ரயிலிலிருந்து இறங்கி, கையில் ஒரு மூட்டையுடன் நடக்கத் துவங்கினார்.
வழியில் அவரை பார்த்த நண்பர், 'ஏன், இந்த வெயிலில் நடந்து செல்கிறீர்கள். பஸ்சில் செல்லக் கூடாதா?' என்று கேட்டார்.
அதற்கு, 'டிக்கெட் வாங்க என்னிடம் காசு இல்லை...' என்று பதிலளித்தார், ஜீவா.
'சரி, தலையில் சுமந்து வரும், துணி மூட்டையாவது என்னிடம் கொடுங்கள். நான், சிறிது துாரம் சுமக்கிறேன். அதில் என்ன உள்ளது?' என்றார், நண்பர்.
'துணி மூட்டையில் கட்சித் தொண்டர்கள் கட்சிக்காக கொடுத்த பணம் உள்ளது...' என்று கூறினார், ஜீவா.
இதைக் கேட்டு அசந்து போனார், ஜீவாவின் நண்பர்.
***
வறுமையிலிருந்து, பல தோல்விகள் கண்டு, பின்னர் வெற்றி பெற்று, ஜனாதிபதியானவர், அமெரிக்காவின், 16வது அதிபர், ஆபிரகாம் லிங்கன்.
அதிபர் தேர்தலின் போது, தன் அரசியல் எதிரியுடன் ஒரே காரில் பயணம் செய்தார், லிங்கன்.
வாக்காளர்களிடம், 'சொந்தமாக காரில் வரக்கூட முடியாத ஏழை நான். எனவே, முடிந்தால் எனக்கு ஓட்டளியுங்கள். இல்லாவிடில், அருமையான மனிதரான எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஓட்டளியுங்கள்; ஓட்டளிக்காமல் இருக்காதீர்கள்...' என்றார், லிங்கன்.
***
- நடுத்தெரு நாராயணன்