
வெளியூர் புறப்படத் தயாராக இருந்தான், சீடன் ஒருவன். அதிக துாரம் செல்ல வேண்டும்; திரும்பி வர நாளாகும். புறப்படுவதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருந்தான்.
அச்சமயம், அவனிடம் வந்து, 'நம்ம குரு, உன்னை அழைச்சுட்டு வரச் சொன்னார்...' என்றான், இன்னொரு சீடன்.
இவன் உடனே புறப்பட்டு சென்று, குருநாதரைப் பார்த்து, அவரது காலில் விழுந்து, வணங்கினான்.
குரு ஏதாவது உபதேசம் செய்வார் என, எதிர்பார்த்தான். ஆனால், அவனுக்கு ஓங்கி ஒரு அடி கொடுத்தார், குரு.
எதிர்பாராத இந்த அடியை வாங்கியதும், அதிர்ந்து போனான், சீடன்.
பக்கத்தில் இருந்த மற்ற சீடர்களும் திகைத்து போய் நின்றனர்.
அடி வாங்கிய சீடனுக்கு மனசுக்குள் குழப்பம்.
'நாம் என்ன தப்பு செய்தோம். புறப்படும் நேரத்தில், இப்படி குருவிடம் அடி வாங்கும்படி ஆயிடுச்சே...' என்று நினைத்து, மிகுந்த வேதனைப்பட்டான்.
கொஞ்சம் துணிச்சலை வரவழைத்து, குருவிடமே கேட்டு விட்டான்.
'சுவாமி, நான் என்ன தப்பு செய்தேன். என்னை இப்படி அடிச்சுட்டீங்களே. ஒரு வார்த்தை கூட உங்களை எதிர்த்து நான் பேசியதில்லையே.
'இவ்வளவு காலமாக உங்கள் விருப்பத்துக்கு விரோதமாக, ஒரு காரியம் கூட நான் செய்ததில்லையே. வந்ததும், வராததுமாக ஒன்றும் சொல்லாமல் என்னை அடிச்சுட்டீங்களே. குருவே, நான் செய்த குற்றம் தான் என்ன?' என, கண்ணீரோடு பரிதாபமாக கேட்டான், சீடன்.
ஆனால், குரு முகத்தில் கொஞ்சம் கூட கோபம் இல்லை. அவர் சிரித்தபடியே, 'என் அருமைச் சீடனே, நீ ஒரு தவறும் செய்யவில்லை... நான் உன்னை அடித்தது, நீ ஏதோ தப்பு செய்து விட்டதற்காக அல்ல. நீண்ட பயணம் செல்ல போகிறாய். ஞாபகமாக ஏதாவது கொடுத்தனுப்ப வேண்டாமா?
'நீ ஞானம் பெற்ற பிறகு தான், திரும்பி வரப் போகிறாய் என்பது, எனக்கு தெரியும். அதற்கு பின், உன்னை அடிக்க முடியுமா? அதனால், இப்போது கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டேன்; அவ்வளவு தான். வேறு ஒண்ணுமில்லை...' என்றார், குருநாதர்.
இதுவும் ஒரு உபதேசம் தான் என்று நினைத்தபடி சென்று விட்டான், சீடன்.
பி. என். பி.,

