
ஹீரோ வாய்ப்பை விட்டு கொடுத்த தனுஷ்!
முதன் முதலாக தனுஷ் இயக்கிய, பா.பாண்டி படத்தில், ராஜ்கிரணை, 'ஹீரோ' ஆக்கி, அவரும் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து, ராயன் படத்தை இயக்கி, 'ஹீரோ' ஆக நடித்தவர், தற்போது, இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்தும் வருகிறார்.
இதற்கிடையே, மூன்று படங்களில் அவர், 'ஹீரோ' ஆக, 'பிசி'யாக நடித்து வருவதால், இட்லி கடை படத்தை இயக்கி தானே, 'ஹீரோ' ஆகவும் நடிப்பது சிரமமாக இருக்கவே, இப்படத்தில் அருண் விஜயை, 'ஹீரோ' ஆக்கி விட்டு, கவுரவ வேடத்தில் மட்டுமே நடிக்கிறார், தனுஷ்.
சினிமா பொன்னையா
ஹோட்டல் நடத்தும் சினிமா பிரபலங்கள்!
தமிழ் சினிமா நடிகர்களில், ஆர்யா, சென்னையில், வேளச்சேரி மற்றும் அண்ணா நகரில், 'சீ ஷெல்' என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். அதேபோல், 'ஒன் எம்பி' என்ற பெயரில் உணவகம் நடத்துகிறார், நடிகர் ஜீவா. மதுரையில், 'அம்மன்' என்ற உணவகத்தை நடத்தி வருகிறார், சூரி.
இதேபோல் நடிகையரில், சிம்ரன், சென்னை சோழிங்கநல்லுாரில், 'குட்கா பை சிம்ரன்' என்ற பெயரில் உணவகத்தையும்; பிரியா பவானி சங்கர், சென்னையில், 'லயன்ஸ் டின்னர்' என்ற பெயரில் உணவகத்தையும் நடத்தி வருகின்றனர்.
சி.பொ.,
சுருட்டு பிடிக்கும் அனுஷ்கா!
உடல் எடை அதிகரித்ததன் காரணமாக, சில ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா, மீண்டும் நடிக்க துவங்கி இருக்கிறார். தற்போது, காட்டி என்ற தெலுங்கு படத்தில், மிரட்டலான வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா, சுருட்டு பிடித்தபடி காட்சி கொடுக்கும், 'போஸ்டர்' வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இனிவரும் காலங்களில் இதுபோன்று மிரட்டலான, முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் தான், படத்துக்கு படம் தன்னை வெளிப்படுத்தப் போவதாக கூறுகிறார், அனுஷ்கா.
— எலீசா
ஜெயம் ரவிக்கு அதிர்ச்சி தோல்வி!
ஜெயம் ரவி நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த, பொன்னியின் செல்வன் வெற்றி பெற்று மீண்டும் அவரை, 'லைம் லைட்டில்' கொண்டு வந்தது.
ஆனால், அதன்பின் அவர் நடித்த, அகிலன், இறைவன், சைரன் மற்றும் பிரதர் போன்ற படங்கள், அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்வியாக அமைந்து விட்டன.
இதனால், காதல் மற்றும் குடும்ப சம்பந்தமான கதைகளை தவிர்த்து, தன்னை மாறுபட்ட கோணங்களில் வெளிப்படுத்தும் கதைகளில் நடிப்பதில் ஆர்வத்தை திருப்பி இருக்கிறார், ஜெயம் ரவி.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
மெரினா நடிகர், ராணுவ வீரராக நடித்துள்ள நான்கெழுத்து படம் திரைக்கு வந்துள்ள நிலையில், அந்த படத்தின் இசையை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார், கொலை வெறி இசையமைப்பாளர்.
'நானாக இருந்தா இந்த படத்துக்கு இன்னும் பிரமாதமாகவும், பிரமாண்டமாகவும் இசையமைத்திருப்பேன். ஒரு நல்ல படத்தை அந்த பிரகாசமான நபரிடம் கொடுத்து, 'வேஸ்ட்' பண்ணிட்டீங்க...' என்று, மெரினா நடிகரிடம் ஆவேசமாக பேசியிருக்கிறார்.
இந்த விஷயம், பிரகாசமான இசையமைப்பாளரின் காதுகளை எட்டியதை அடுத்து, செம கடுப்பாகி விட்டார். அதையடுத்து, கொலவெறிக்கு போன் செய்து, கடுமையான வார்த்தைகளால் அவரை கடித்து குதறியுள்ளார். இடையில் புகுந்து, இருவரையும் சமாதானப்படுத்தி இருக்கிறார், மெரினா நடிகர்.
தல நடிகரின் ஆறெழுத்து படத்தில், வில்லனின் மனைவியாக நடித்திருக்கும், கண்ட நாள் முதல் நடிகை, இந்த படத்தின் கதை குறித்து, டோலிவுட்டை சேர்ந்த சில நடிகர்களிடம், சொல்லி விட்டார்.
இந்த விவகாரம், தல நடிகரின் படக்குழுவுக்கு தெரிய வந்ததை அடுத்து, நடிகையை அழைத்து கடுமையாக எச்சரித்து, அவருக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காக, அவருக்கான படக்கூலியையே கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளார், இயக்குனர்.இதனால், இப்படத்தில் நடித்ததற்கான படக்கூலியை தனக்கு தருவரா, மாட்டார்களா என்பதே தெரியாமல் தடுமாறி போய் நிற்கிறார், நடிகை.
சினி துளிகள்!
* அமரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு, அனிருத் இசை அமைக்கிறார்.
* தெறி படத்தின் ஹிந்தி, ரீமேக்கான பேபி ஜான் படத்தில், தன் கெட்-அப்பை பெரிய அளவில் மாற்றி ஆளே அடையாளம் தெரியாமல், மாறியிருக்கிறார்,கீர்த்தி சுரேஷ்.
* அஜித்தின் விடாமுயற்சி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ரெஜினா, ஹீரோயினி வாய்ப்பு குறைந்து விட்டதால் வில்்லியாக நடிப்பதற்கும் தயாராகி வருகிறார்
அவ்ளோதான்!