
தெலுங்கில் வேகமாக வளரும் துல்கர் சல்மான்!
மம்மூட்டியின் மகனான, துல்கர் சல்மான், தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த போதும், குறிப்பாக, தெலுங்கில் அவர் நடித்த மகாநடி மற்றும் சீதாராமன் போன்ற படங்கள், 'ஹிட்' அடித்துள்ளன.
தற்போது, அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும், லக்கி பாஸ்கர் என்ற படம், 100 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்திருக்கிறது. இதன் காரணமாக தெலுங்கு சினிமாவில், 'ஹிட்' பட நாயகனாக வளர்ந்து நிற்கிறார், துல்கர் சல்மான்.
— சினிமா பொன்னையா
கவர்ச்சிக்கு மாறும், அஞ்சலி!
அங்காடித்தெரு அஞ்சலியின், 'மார்க்கெட் டவுண்' ஆகி இருப்பதால், ஷங்கர் இயக்கியுள்ள, கேம் சேஞ்சர் படத்தில், கேரக்டர் நடிகையாக உருவெடுத்து இருக்கிறார்.
அத்துடன், தன், 'மார்க்கெட்'டில் பரபரப்பு ஏற்படுத்தும் முயற்சியாக, அதிரடியான கவர்ச்சி படங்களில் நடிப்பதற்கு திட்டமிட்டு வரும், அஞ்சலி, முன் வரிசை நடிகர்களுடன் குத்து பாட்டுக்கு ஆட்டம் போடவும் தயாராகி வருகிறார். இதையடுத்து, இரண்டு சினிமா மேனேஜர்களை நியமித்து, பட வேட்டையை முடுக்கி விட்டுள்ளார், நடிகை.
எலீசா
ரூ.1000 கோடி சொல்லி அடிப்பாரா ரஜினி!
ஜெயிலர் படத்திற்கு பின், வேட்டையன் படமும், 'ஹிட்' அடித்த நிலையில் அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும், கூலி படம், பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முதல், 100 கோடி ரூபாய் படத்தை கொடுத்தவரான, ரஜினி நடிக்கும் இந்த படத்தை, 1,000 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைத்து விட வேண்டும் என்பதற்காக, தீவிரம் காட்டி வருகிறார், லோகேஷ் கனகராஜ். அதற்காக, இந்த படத்தின் கதை மட்டுமின்றி, ரஜினியின் நடிப்பிலும் ஏகப்பட்ட, 'மேஜிக்' வேலைகளை செய்து, மே 1, 2025ல், படத்தை வெளியிட உள்ளார்.
— சி.பொ.,
தனுஷ் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா மந்தனா!
தமிழில், ராஷ்மிகா மந்தனா நடித்த, சுல்தான் மற்றும் வாரிசு போன்ற படங்கள் தோல்வி அடைந்த நிலையில் தற்போது, தனுஷுடன், குபேரா படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறும் ராஷ்மிகா மந்தனா, 'தமிழில் இதற்கு முன் எனக்கு கிடைக்காத வெற்றியை, இந்த படம் கண்டிப்பாக வாங்கி தரும். தனுஷ் படம் மூலம் தமிழ் சினிமாவில் ராசியான நடிகை என்ற இடத்தை பிடித்தே தீருவேன்...' என்கிறார், ராஷ்மிகா.
எலீசா
நயன்தாரா இடத்தை பிடிக்கும் சாய்பல்லவி!
தென் மாநில சினிமாவில், 'நம்பர் ஒன்' ஆக இருந்த, நயன்தாராவின் மார்க்கெட் தற்போது சரிவடைந்திருப்பதை அடுத்து, அந்த இடத்தை கைப்பற்றி இருக்கிறார், சாய் பல்லவி.
குறிப்பாக, அமரன் படத்திற்கு பிறகு, 'ஹிட்' பட நாயகியாகி இருக்கும், சாய் பல்லவி, தற்போது ஹிந்தியில், ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருபவர், தன் சம்பளத்தை, 6 கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறார்.
ராமாயணம் படமும், அமரன் படத்தை போன்று, 'சூப்பர் ஹிட்' அடித்தால், அடுத்து, 10 கோடி ரூபாயாக சம்பளத்தை தடாலடியாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
தளபதி நடிகரின் கடைசி படத்தில், அவருடன் ஏற்கனவே மூன்று எழுத்து படத்தில் நடித்த, மும்பை நடிகை இணைந்திருக்கும் நிலையில், இன்னொரு கேரளத்து நடிகையும் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், கேரளத்து அம்மணிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க துவங்கி விட்டார், படத்தின் இயக்குனர். இதையடுத்து, செம கடுப்பான மும்பை நடிகை, 'படத்தில் எனக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்னை, 'ஹீரோயின்' ஆக, 'புக்' பண்ணி விட்டு, அந்த கேரளத்து நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், படத்தில் நடிக்க மாட்டேன். மும்பைக்கு பறந்து விடுவேன்...' என்று இயக்குனரை மிரட்டி வருகிறார். இதனால், அவர்களின் இந்த பஞ்சாயத்து இப்போது தளபதி நடிகரின் கவனத்துக்கு போயிருக்கிறது.
சினி துளிகள்!
* எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும், 69வது படத்தில், ஏற்கனவே அவருடன், பீஸ்ட் படத்தில் நடித்த, பூஜா ஹெக்டே மற்றும் மமீதா பைஜூ ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
* ரஜினியுடன், ஜெயிலர், தனுஷூடன் கேப்டன் மில்லர் படங்களில் நடித்த, கன்னட நடிகர் சிவராஜ் குமார் தற்போது, விஜயின், 69வது படத்திலும் இணைந்திருக்கிறார்.
அவ்ளோதான்!