PUBLISHED ON : டிச 01, 2024

புராணங்களில், கடவுளைப் பிரார்த்தனை செய்து வரம் பெற்றனர் என்றும், மீண்டும் பிறவா நிலையை அடைந்தனர் என்றும் கூறப்படுகிறது. அப்படி பெற்ற வரத்தை முறையாக பயன்படுத்தாமல், ஆபத்தில் அகப்பட்டவர்களும் நிறைய பேர் உண்டு.
மகாபாரத காலத்துக்கு முன்பே, நிகழ்ந்த கதை இது:
நிகும்பன் எனும் அரக்க அரசனுக்கு, சுந்தன் மற்றும் உபசுந்தன் என, இரு பிள்ளைகள். இவ்விருவரும் மிகவும் ஒற்றுமையாக இருந்தனர்.
மூன்று உலகத்தையும் தாங்களே வென்று அரசாள வேண்டும் என்று பேராசைப்பட்டு, பிரம்மதேவனை நோக்கி கடுமையாக தவம் இருந்தனர், சகோதரர்கள் இருவரும்.
அவர்கள் முன் தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார், பிரம்மா.
'மூன்று உலகத்தையும் வென்று, அரசாள வேண்டும்; இறப்பு என்பதே எங்களுக்கு வரக்கூடாது...' என, இரண்டு வரங்களை கேட்டனர், சகோதரர்கள்.
மூவுலகை ஆள வேண்டும் என்ற வரத்தை, உடனே அருளினார். ஆனால், இரண்டாவது வரத்தை அளிக்க மறுத்தார், பிரம்மா.
'பிறப்பு என்று வந்துவிட்டால், இறப்பை தவிர்க்க முடியாது. வேறு வரம் கேளுங்கள் தருகிறேன்...' என்றார்.
தங்களுடைய ஒற்றுமையின் மேல் வைத்திருந்த நம்பிக்கையில், 'எங்களுக்குள் சண்டை மூண்டால் மட்டுமே, மரணம் வரவேண்டும்...' என்று, கேட்டனர், சகோதரர்கள் இருவரும்.
பிரம்மாவும் அவர்கள் கேட்ட வரத்தை வழங்கினார். அளவுக்கு அதிகமான வலிமையும் ஆபத்தானது தானே?
தங்களை இனி யாராலும் எதுவும் செய்ய முடியாது என்ற துணிவால், இரு சகோதரர்களும் அட்டகாசங்கள் செய்து, தேவர்களை துன்புறுத்தினர்.
பொறுமை எல்லை கடந்த போது, பிரம்மாவின் ஆணைப்படி, திலோத்தமை எனும் பெயரில், ஓர் அழகான பெண்ணை உருவாக்கினார், விசுவகர்மா எனும் தேவதச்சர்.
உலகிலுள்ள மிக அழகான பொருட்கள் ஒவ்வொன்றில் இருந்தும், ஒரு எள் அளவு எடுத்து உருவாக்கப்பட்டவள், திலோத்தமை. திலம் என்றால், எள் என்று பொருள்.
அந்த பேரழகியை, தானே அடைய வேண்டும் என்ற சுயநலம் மேலோங்கியதில், சகோதரர்கள் இருவரும், சண்டையிட்டு மடிந்தனர். மூவுலகையும் ஆளும் வரம் கிடைத்தும், பேராசையால் நாசமாயினர், சகோதரர்கள்.
இதிலிருந்து, பதவி, புகழ் மற்றும் செல்வம் என்று, எல்லாம் கிடைத்து விட்டதே என, தலைகால் புரியாமல் ஆடக் கூடாது. எல்லாமே கடவுள் அருளால் தான் வந்தது என்ற நினைப்பு, எப்போதுமே இருப்பது நல்லது என்பது தெளிவாகிறது.
பி. என். பி.,