
'ஹீரோ'யிசத்தில் உறுதியாக இருக்கும், சந்தானம்!
காமெடியனாக இருந்து, 'ஹீரோ' ஆன சந்தானத்தை, மீண்டும் காமெடியனாக்க இயக்குனர்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்து விட்டது. இப்போது கூட, சிம்புவின் 49வது படத்தில் இன்னொரு, 'ஹீரோ' ஆகத்தான் அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதுபோன்று, தன் நட்பு வட்டார நடிகர்களுடன் நடிக்க தயாராக இருக்கும் சந்தானம், 'மல்டி ஹீரோ கதைகளில் நடிக்க தயாராக இருக்கிறேன். அதேபோல், மற்ற நடிகர்களுக்கு இணையாக எனக்கும் கோடிகளில் சம்பளத்தை வெட்ட வேண்டும்...' என, கறாராக கூறுகிறார்.
— சினிமா பொன்னையா
'டைட்டில்'களில் கூடுதல் கவனம் செலுத்தும், தனுஷ்!
தான் நடிக்கும் படங்களின் கதைகள் மட்டுமின்றி, 'டைட்டில்'களிலும் கூடுதல் கவனத்தை திருப்பி இருக்கிறார், தனுஷ்.
குறிப்பாக, தற்போது அவர், பல மொழி படங்களில் நடித்து வருவதால், அந்தந்த மொழி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் வார்த்தைகளில், தன் படங்களின், 'டைட்டில்' இருக்க வேண்டும் என, இயக்குனர்களிடம் கூறுகிறார், தனுஷ். அப்படி அவர்கள் கொடுக்கும் பல, 'டைட்டில்'களை பரிசீலித்து, அதில் தனக்கு பிடித்ததையே வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறார்.
— சி.பொ.,
தயாரிப்பாளர்களின் மனதில் இடம் பிடிக்கும், பூஜா ஹெக்டே!
மும்பை நடிகையான, பூஜா ஹெக்டே, தான் நடிக்கும் படங்களின், 'புரமோஷன்' நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்வதோடு, அந்த படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கு மேடையிலேயே நடனமாடியும் பரபரப்பை ஏற்படுத்துகிறார்.
மேடையில் நடனமாட, பல முன்னணி நடிகர், நடிகையர் தயங்கும் நிலையில், படத்தின் வெற்றிக்காக பூஜா ஹெக்டே, எதையும் செய்ய தயாராக இருப்பதால், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மத்தியில், அவர் மீது நன்மதிப்பு ஏற்பட துவங்கி இருக்கிறது.
— எலீசா
பொருத்தம் பார்க்கும், மாளவிகா மோகனன்!
தமிழில் விக்ரமுடன், நடிகை மாளவிகா மோகனன் நடித்த, தங்கலான் படம், அவருக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. இதனால், 'ஹிட்' பட நடிகர்களின் படங்களாக தேடிப் பிடித்து நடிக்க விரும்புகிறார்.
தற்போது, பிரபாஸ் உடன் நடித்து வருபவர், அடுத்தபடியாக நடிக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, எண் ஜோதிடம் பார்த்து, தன் ராசிக்கு, 'செட்' ஆகக் கூடிய நடிகர்களின் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறார். அப்படி, 'செட்' ஆகாத நடிகர்களின் படங்கள் தேடி வந்தால், கதையே கேட்காமல் திருப்பி அனுப்பி விடுகிறார், மாளவிகா மோகனன்.
எலீசா
முக்கிய, 'ஹீரோ'களை குறி வைக்கும், கயாடு லோஹர்!
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக, டிராகன் படத்தில் நடித்திருந்த, நடிகை கயாடு லோஹர், அந்த படத்திற்கு பின், அதர்வாவுக்கு ஜோடியாக, இதயம் முரளி என்ற படத்தில் நடித்து வருகிறார். சிம்பு நடிக்கும், 49வது படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
மேலும் சில முன்வரிசை, 'ஹீரோ'களின் படங்களை கைப்பற்றுவதற்காக, சினிமா மேனேஜர்களை நம்பாமல், தானே, 'ஹீரோ'களை தொடர்பு கொண்டு, படவேட்டையில் இறங்கியுள்ளார், கயாடு லோஹர்.
— எலீசா
சூரியை முற்றுகையிடும் இயக்குனர்கள்!
மாமன் படத்தில், 'பேமிலி சென்டிமென்ட்' கதையில் நடித்துள்ள, சூரி, இதேபோன்று மனதை நெகிழ வைக்கக் கூடிய குடும்ப கதைகளில் அடுத்தடுத்து நடித்து, ஒரு இடத்தை பிடிக்க திட்டமிட்டு வருகிறார்.
சூரியின் இந்த நிலைப்பாட்டை தெரிந்து கொண்டு, அக்கா- - தம்பி, அண்ணன் -- தம்பி, அம்மா -- மகன் என, 'சென்டிமென்ட்' கதைகளை வைத்திருக்கும் இயக்குனர்கள், அவரை தேடி படையெடுக்க துவங்கி உள்ளனர்.
சினிமா பொன்னையா
கருப்பு பூனை...
சினிமாவில் அடுத்தகட்ட அளவில் முன்னேற வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே ஓ.கே., செய்து வைத்திருந்த சில இயக்குனர்களை மாற்றி உள்ளார், அமரன் நடிகர். அதோடு, கதை சொல்லி தன்னை பெரிய அளவில், 'இம்ப்ரஸ்' பண்ணிய இயக்குனர்களுக்கே, 'கால்ஷீட்' கொடுக்கிறார்.
இதனால், அவர், 'கால்ஷீட்' தருவார் என நம்பி, இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த சில இயக்குனர்கள், தங்களை அவர் கழட்டி விட்டதால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
சினி துளிகள்!
சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி இருக்கும், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் போன்ற முன்னணி இயக்குனர்கள் அவரது, 'கால்ஷீட்'டுக்காக, காத்திருக்கின்றனர்.
அவ்ளோதான்!