PUBLISHED ON : மே 18, 2025

ஒரு சமயம், அமராவதி நகரத்திற்கு சென்றார், துர்வாச மகரிஷி.
அந்த நகரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. அங்கிருந்த நாரத முனிவரிடம், 'என்ன விசேஷம்?' எனக் கேட்டார்.
'இன்று, பவுர்ணமி அல்லவா, தேவர் மன்னரான இந்திரன், பராசக்தியான மாதாவைப் பூஜிக்கிறார்...' என, பதிலளித்தார், நாரதர்.
அங்கு நிலவிய ஆரவாரத்தையும், களிப்பையும் கண்டு வியப்புற்றார், துர்வாசர். வழிபாட்டிற்கு பூக்கள் நிறைந்த நுாற்றுக்கணக்கான தங்கத்தட்டுக்கள் பயன்படுத்தப் பட்டன.
இவற்றைத் தெரிவிக்க, நேராக மாதாவைக் காணச் சென்றார், துர்வாசர்.
'முனிவரே! மாதா அசதியாக உள்ளார். அவரை இப்போது சந்திக்க முடியாது...' என்றார், அங்கிருந்த காவலர்.
காவலரை அலட்சியப்படுத்தி, தாயார் படுத்திருந்த இடத்திற்கு சென்றார், துர்வாசர்.
'தாயே! உங்களுக்கு ஏனிந்த நிலை? எதனால், சோர்வுற்றிருக்கிறீர்கள்?' எனக் கேட்டார்.
'இது, இந்திரன் செய்த பூஜையால் உண்டான விளைவு. அவன் தன் செல்வத்தைப் பறைசாற்ற, தங்கமலர்களைப் பயன்படுத்தினான். என் மீது பட்ட ஒவ்வொரு தங்க மலராலும், தழும்பு உண்டானது...' என்றார், தாயார்.
'உங்கள் பிணியைத் தீர்க்கும் வழி என்ன?' எனக் கேட்டார், துர்வாசர்.
'காசியில் வீற்றிருக்கும் விசாலாட்சி கோவிலில் வாழ்ந்து வரும் ஒருவரால் மட்டுமே, என்னை குணப்படுத்த முடியும்...' என்றார், தாயார்.
உடனே காசிக்குப் புறப்பட்டார், துர்வாசர். கோவிலில், தாயாரின் காலடியில் விழுந்து கண்ணீர் வடித்து கொண்டிருக்கும் பெரியவரை கண்டார்.
'இங்கு யாரேனும் வைத்தியர் உள்ளாரா?' என, அவரிடம் கேட்டார், துர்வாசர்.
பதிலேதும் கூறாமல் இருந்தார், பெரியவர்.
காசியில் பல இடங்களுக்கு சென்று விசாரித்தார், முனிவர். அவரால் வைத்தியரைக் காண முடியவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார், துர்வாசர்.
அங்கு ஆனந்தமாக நடனம் புரியும் தாயாரைக் கண்டு வியப்படைந்தார், துர்வாசர். அவரிடம், 'வைத்தியரைப் பார்த்தாயா...' என, கேட்டார், தாயார்.
'இல்லை. கோவிலில் யாரையும் நான் பார்க்கவில்லை. ஒரு பெரியவர் மட்டும் அங்குள்ள தெய்வத்தின் காலடியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்...' என்றார்.
புன்முறுவலுடன், 'அந்த முதியவர் தான், எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர். அவர் வடித்த, ஒவ்வொரு கண்ணீர் துளியும், என் வலியை தணிய செய்து, குணப்படுத்தியது...' என்றார், தாயார்.
ஆடம்பரமும், அட்டகாசமும் தெய்வத்தை இன்புறுத்தாது. அன்பு மட்டும் தான் கடவுளை மகிழ்வுறச் செய்யும்.
அருண் ராமதாசன்